மூவொரு இறைவன் பெருவிழா : ஞாயிறு சிந்தனை
ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்
மழலையர்பள்ளி ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்துகொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை, ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.
'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது, வளர்ந்துவிட்ட ஆசிரியரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது, குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதையும், குழந்தைகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்பதையும் ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் குழந்தைகள், இறைவன் என்ற பேரொளியின் சிறு பொறிகளாக, இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.
மங்கி, மறைந்துவரும் அந்த ஒளியை, மீண்டும் ஒளிரவைப்பதற்கு, இந்த ஞாயிறு, நமக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழாவை, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே, இப்பெருவிழாவின் மையப்பொருளை, ஓரளவாகிலும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும். மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலை, தன் அறிவுக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றி சொல்லப்படும் கதை நமக்கு நினைவிருக்கலாம்.
இறையியல் மேதையான புனித அகுஸ்தின், ஒருநாள், ஆழ்ந்த சிந்தனையோடு கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். இறைவன், மூன்று ஆட்களாய், அதேவேளையில், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று, தன் மூளையைக் கசக்கிப்பிழிந்து, விடை தேடிக்கொண்டிருந்தார். கடற்கரையில், ஒரு சிறுவன், சிறியதொரு சிப்பியில், கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இவ்வாறு நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும், அந்தக் குழிக்குள் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்" என்றான். அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியுமா?" என்று கேட்டார். அச்சிறுவன், அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக்கொண்டு, அளவுகடந்த கடவுளை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்துபோனான்.
அன்று, புனித அகுஸ்தின், அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது, மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம், புனித அகுஸ்தினை, வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளை, பணிவுடன் கற்றுக்கொள்ளவைத்தது. பணிவுடன், தன் ஆழ்மனதில் பதியவைக்க வேண்டிய ஓர் உண்மையை, புனித அகுஸ்தின், தன் அறிவுத்திறன் கொண்டு, அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். அதில் தோல்வியும் கண்டார்.
அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுவிட்டதாக, அனைத்து புதிர்களுக்கும் விடைகளைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணிவந்த நம் தலைமுறையினருக்கு, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, பணிவுப்பாடங்களைப் புகட்டிவருகிறது. இவ்வுலகத்தில் இனி வெல்வதற்கு எதுவுமே கிடையாது, இந்த உலகைத் தாண்டிய உண்மைகளும் கிடையாது என்ற மமதையில் வாழ்ந்த பலர், இந்தக் கிருமியின் முழு உண்மையை அறிந்துகொள்ள இயலாமல் தடுமாறுவதை நாம் அறிவோம். நம் ஒவ்வொருவரையும், நாம் வாழும் உலகையும், படைப்பு அனைத்தையும் இயக்கும் ஒரு சக்தி உள்ளது; அந்த சக்திக்கு முன், பணிவுடன் தலைவணங்குவது ஒன்றே, மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய பொருத்தமானச் செயல் என்பதை, அண்மைய மூன்று மாதங்களில், நாம் கற்றுவருகிறோம் என்பதை மறுக்க இயலாது.
விடுதலைப்பயண நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் வாசகம் (வி.ப. 34: 4ஆ-6,8-9), அனைத்தையும் கடந்துநிற்கும் கடவுளுக்குமுன் தலைவணங்கி நிற்பதைப்பற்றி பேசுகிறது. அகந்தை கொண்டு, இன்று நாம் வாழ்வதுபோலவே, அன்று, இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்தனர் என்பதை, இவ்வாசகம் நினைவுறுத்துகிறது. "அந்நாள்களில், ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி, மோசே அதிகாலையில் எழுந்து, சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்" (வி.ப. 34:4ஆ) என்று இன்றைய வாசகப்பகுதி துவங்குகிறது. இந்த இறைவாக்கியத்தின் முதல் பகுதியில், மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. மோசே எடுத்துச்சென்ற கற்பலகைகள், முன்னவை போன்ற கற்பலகைகள் என்ற சொற்களை வாசிக்கும்போது, முதல்முறை உருவாக்கப்பட்ட கற்பலகைகள் உடைக்கப்பட்ட நிகழ்வின் நினைவுகள் எழுகின்றன.
எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த மோசே, அம்மக்களை தொடர்ந்து வழிநடத்த, இறைவனின் துணையைத் தேடி, சீனாய் மலைமீது தனியே சென்றார். அவர் திரும்பிவருவதற்குத் தாமதமாகவே, பொறுமையிழந்த மக்கள், தங்களை வழிநடத்துவதற்கு, வேறு போலி தெய்வங்களை உருவாக்க முடிவெடுத்து, பொன்னால் ஆன கன்றுக்குட்டி ஒன்றை வடிவமைத்தனர். இதை நாம் விடுதலைப்பயண நூல் 32ம் பிரிவில் காண்கிறோம். (காண்க வி.ப. 32:1)
இறைவன் வழங்கிய உடன்படிக்கை கற்பலகைகளைச் சுமந்தவண்ணம் சீனாய் மலையிலிருந்து இறங்கிவந்த மோசே, பொற்கன்றைக் கண்டு, சினம் கொண்டு, தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப்போட்டார். (வி.ப. 32:19) இதைத்தொடர்ந்து, அம்மக்களுக்கு பல்வேறு தண்டனைகளையும் வழங்கினார் என்று 32ம் பிரிவில் வாசிக்கிறோம். இப்பிரிவின் இறுதி இறைவாக்கியம், இன்று நாம் வாழும் நிலையை படம்பிடித்துக் காட்டுவதைப்போல் தெரிகின்றது: ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால் ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார் (வி.ப. 32:35) என்று, இப்பிரிவு நிறைவடைகிறது.
ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார் என்ற சொற்களை வாசிக்கும்போது, மனித வரலாற்றில் வந்த பெரும் நோய்கள், இறைவன் அனுப்பிய தண்டனை என்ற கூற்று, மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டுள்ளதை நாம் உணர்கிறோம். கோவிட் 19 கொள்ளைநோயை, ஆண்டவர் அனுப்பியுள்ளார் என்று ஒரு சிலர் கூறிவருவதை அறிவோம். இவ்வாறு சொல்வது, நமது தவறுகளை மூடி மறைத்து, கடவுள் மீது பழியைப்போட்டு, மிக எளிதாக தப்பித்துக்கொள்ளும் வழியாகத் தெரிகிறது.
சுயநலம், பேராசை என்ற பொற்கன்றுகளை உருவாக்கி, அந்த போலி தெய்வங்களுக்கு, நமது சுற்றுச்சூழல், பூமிக்கோளம், உயிரினங்கள் அனைத்தையும் நாம் பலியிட்டு வருகிறோம். வர்த்தக வெறியினால் தூண்டப்பட்டு, ஆடு, மாடு, கோழி போன்ற ஏனைய உயிரினங்களை, அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில், சுகாதாரமற்றச் சூழல்களில் அடைத்துவைத்துள்ளோம். அவற்றை செயற்கையான முறையில் பெருக்கவும், வளர்ககவு்ம், வேதியியல் கலவைகளை உணவாகக் கொடுத்துள்ளோம். அந்த உயிரினங்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உருவாகக்கூடிய பக்க விளைவுகளை மறைத்து, அவற்றை விற்பனை சேய்வதில் மட்டும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இவை போதாதென்று, அரியவகை விலங்குகளை, வேட்டையாடுவதிலும், விற்பனை செய்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளோம். அத்துமீறிய இத்தகையப் பேராசையே, இந்தத் தொற்றுக்கிருமி உருவாக வழியானது. எனவே, நமது சுயநல போலி தெய்வங்களின் தீராத பசியைத் தீர்க்க நாம் உருவாக்கிய சூழல், ஒரு கொள்ளைநோயாக வெடித்துக் கிளம்பியது என்று சொல்வதுதான் உண்மையே தவிர, கடவுள் இந்தக் கொள்ளைநோயை அனுப்பினார் என்று கூறுவது தவறு.
நாம் வாழும் இன்றைய உலகில், உண்மை இறைவனை உதறித் தள்ளிவிட்டு, பல்வேறு பொற்கன்றுகளை நாம் பீடமேற்றி வழிபட்டு வந்துள்ளோம். இந்தப் பொற்கன்றுகள் எதுவுமே நம்மைக் காக்கமுடியாது என்பதை, கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கம், கடந்த சில மாதங்களாக நமக்கு உணர்த்திவருகிறது.
இந்நிலையில், மோசேக்கு இறைவன் வழங்கிய இரண்டாவது வாய்ப்பை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கும்போது, இறைவன், நமக்கும், இந்தக் கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இரண்டாவது முறையாக, கற்பலகைகளை எடுத்துக்கொண்டு மலையேறும் மோசே, தன்னைப்பற்றியும், தன் மக்களைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் கொண்டிருந்ததால், ஆண்டவரிடம் முழுமையாக சரணடைகிறார்.
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, "என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்" என்றார் (வி.ப. 34:8-9) இவ்வாறு, இன்றைய முதல் வாசகம் நிறைவுபெறுகிறது. இத்தகையப் பணிவுடன், இறைவனை நெருங்கி வருவது, இன்றைய உலகில் வாழும் நம் அனைவருக்கும் தேவை.
கோவிட் 19 தொற்றுக்கிருமியின் வீரியம் குறைந்து, நாம் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் வேளையில், நம்மைப்பற்றி, உலகைப்பற்றி, கடவுளைப்பற்றி பல அழகான உண்மைகளை பணிவுடன் கற்றுக்கொள்ள முயல்வோம்.
அனைத்தையும் ஆர்வத்துடனும், பணிவுடனும் கற்றுக்கொள்ளும் பக்குவம், குழந்தைகளுக்கு, இயல்பாகவே உள்ளது. எனவேதான், அவர்கள், பல ஆழமான உண்மைகளை, எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். குழந்தைகளைப் போன்ற மனம் கொண்டிருந்தால் மட்டுமே, இறைவனைப்பற்றி புரிந்துகொள்ளமுடியும் என்பதை, இயேசு ஆணித்தரமாக நம்பினார். எனவே, அவர், இறைவனைப்பற்றி நீண்ட விளக்கங்களைத் தருவதற்குப்பதில், குழந்தைகளும், குழந்தைமனம் கொண்டோரும் புரிந்துகொள்ளும் வகையில், எளிய கதைகள் வழியே விளக்கினார்.
நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித்தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது; வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை, தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுளை, இஸ்ரயேல் மக்கள் நம்பி, தொழுதுவந்தனர். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.
இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்த இஸ்ரயேல் மக்களும், மதத்தலைவர்களும் தவறு செய்தனர் என்று, நாம், வழக்கம்போல், தீர்ப்பிட துடித்துக்கொண்டிருந்தால், ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்வோம். இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனை நாம் எவ்விதம் புரிந்துகொள்கிறோம்? ஏற்றுக்கொள்கிறோம்? மூவொரு இறைவன், உயிரோட்டம் மிகுந்த உறவாக நம் மத்தியில் வாழ்கிறாரா? அல்லது, வெறும் அறிவுப்பசியைத் தீர்க்கும் கருத்தாக வலம் வருகிறாரா? என்ற கேள்விகளை இன்று எழுப்பி விடைகள் தேடுவது நல்லது.
நாம் வாழ்வில் உருவாக்கியுள்ள பல்வேறு பொற்கன்றுகளை, போலி தெய்வங்களை அடையாளம் கண்டுகொள்ளும் தெளிவையும், அவற்றை அழிக்கும் துணிவையும் இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் வழிபடும் மூவொரு இறைவனின் இலக்கணமே, உறவு என்றால், நாமும் உறவுகளுக்கு முதன்மையான, முக்கியமான இடம் தரவேண்டும் என்பதே, இன்றைய விழாவின் முக்கியப் பாடம்.
உறவுகளை வளர்ப்பதைவிட, செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது, என்ற மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தரவேண்டும் என்று, இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்