தேடுதல்

ஆண்டவரின் துணையுடன் கோலியாத்தை வீழ்த்திய தாவீது - I சாமுவேல் 17 ஆண்டவரின் துணையுடன் கோலியாத்தை வீழ்த்திய தாவீது - I சாமுவேல் 17 

விவிலியத்தேடல்: திருப்பாடல் – 3 – காலை மன்றாட்டு

இளமைப்பருவம் முதல் தன்னை இறைவன் காத்துவந்தார், கோலியாத்திற்கு முன் தன்னை இறைவன் காத்தார் என்று தாவீது கொண்டிருந்த அந்த ஆழமான உணர்வு, மீண்டும் ஒருமுறை, 3ம் திருப்பாடலில் எதிரொலிக்கிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல் – 3 – காலை மன்றாட்டு

“தள்ளாத வயசுல இருக்குற என்னைக் கொண்டுபோயிட்டு, என் மகனை உயிரோட விட்டுவச்சிருக்கக்கூடாதா?” என்று வேதனையில் புலம்பும் பெற்றோரின் அழுகுரலை நாம் கேட்டிருப்போம். குறிப்பாக, கடந்த ஓராண்டளவாக, கோவிட்-19 பெருந்தொற்றினால் தங்கள் மகளையோ, மகனையோ இழந்த ஆயிரமாயிரம் பெற்றோர், இவ்வாறு கதறி அழுதிருப்பர் என்பதை நாம் அறிவோம்.

மனிதர்கள் அடையும் வேதனைகளில், 'புத்திர சோகம்' என்ற வேதனை கொடியது என்பதை, அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பிள்ளைகளின் எதிர்பாராத மரணம், அல்லது, பிள்ளைகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் ஆகியவை, மற்ற வேதனைகளைவிட கொடியவை.

அத்தகைய ஒரு வேதனையை மன்னன் தாவீது அடைந்தார். உயிருக்குயிராய் தான் நேசித்த தன் மகன் அப்சலோம், தன்னை கொல்ல விழைவதை அறிந்து, அவரிடமிருந்து தப்பித்தவேளையிலும், பின்னர், தன் மகன் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டபோதும், தாவீது, 'புத்திர சோகத்தில்' ஆழ்ந்திருப்பார். அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் 3ம் திருப்பாடலில் நாம் தேடலை மேற்கொள்கிறோம்.

3ம் திருப்பாடல், 'காலை மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, அதிகாலையில் நாம் எழுப்பும் மன்றாட்டு, சுகமான, நலமான சொற்களுடன் துவங்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதற்கு முற்றிலும் மாறாக, இத்திருப்பாடலின் அறிமுக வரிகள் அமைந்துள்ளன: "ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! ‘கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர்" (தி.பா. 3:1-2). இவ்வாறு, தாவீது, தன் காலை மன்றாட்டை, ஒரு புலம்பலுடன் துவக்குகிறார். அவர் இவ்வாறு ஏன் துவக்குகிறார் என்பதற்குரிய காரணத்தை, 3ம் திருப்பாடலின் முன்குறிப்பில் காண்கிறோம்: “தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடியபோது அவர் பாடியது.”

தாவீதின் மூன்றாவது மகனான அப்சலோமைப்பற்றிய விவரங்கள், சாமுவேல் 2ம் நூலின் 13ம் பிரிவிலிருந்து, 18ம் பிரிவு முடிய பதிவு செய்யப்பட்டுள்ளன. தோற்றத்தில் மிக அழகுள்ளவராகவும், வாழும் முறையில், ஆடம்பரத்தை அதிகம் விரும்பியவராகவும் அப்சலோம் விளங்கினார் என்பதை, சாமுவேல் 2ம் நூலில் காண்கிறோம்: இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப்போல் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனில் எந்தக் குறையும் இல்லை (2 சாமு. 14:25) என்று 14ம் பிரிவில் அவரது தோற்றத்தைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அவரது ஆடம்பர வாழ்வுமுறை, 15ம் பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரைகளையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான். (2 சாமு. 15:1)

அப்சலோம், மன்னன் தாவீதின் அன்புக்குரியவராக இருந்தாலும், (காண்க 2 சாமு. 14:1) அவர், தன் சகோதரன் அம்னோனைக் கொலை செய்தபின், எருசலேமிலிருந்து தப்பியோடினார். தாவீது, அவரை மீண்டும் எருசலேமுக்கு அழைத்துவந்தார். ஆனால், நாடு முழுவதையும் தனதாக்கிக்கொள்ள விழைந்த அப்சலோம், தாவீதுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டுகிறார். அவரது சதியின் ஒரு பகுதியாக, தனக்கு ஆதரவாளர்களைத் திரட்டினார். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது. (2 சாமு. 15:12)

இதனால், தாவீது எருசலேமிலிருந்து தப்பியோட வேண்டியிருந்தது. இத்தகையதொரு சூழலில், திருப்பாடல் 3 உருவானது என்பதை, இத்திருப்பாடலின் முன்குறிப்பு உணர்த்துகிறது. தன் மகனின் ஆதரவாளர்கள், எண்ணிக்கையில் கூடிவருவதையும், தன் மகன், மற்றும் அவரது ஆதரவாளர்களால் தன்னைச் சூழும் ஆபத்துக்களையும் குறித்து, இரவெல்லாம் சிந்தித்த மன்னன் தாவீது, விடிந்ததும், தன் உள்ளத்தை நிறைத்திருந்த அந்தக் கவலையை தன் காலை மன்றாட்டில் வெளிப்படுத்தியுள்ளார்: "ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்! ‘கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர்." (தி.பா. 3:1-2)

இவ்வாறு, தன் அச்சத்தை வெளிப்படுத்திய அதே மூசிசில், தாவீது, ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்: ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (தி.பா. 3:3-4)

தன்னைக் காக்கும் ‘கேடயம்’ என்று, தாவீது, ஆண்டவரை அழைப்பது, நம் கவனத்தை ஈர்க்கின்றது. இறைவனை ஒரு கேடயமாக உருவகிப்பது, விவிலியத்தின் பல இடங்களில் நாம் காணும் உண்மை: ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது; "ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்" (தொ.நூ. 15:1) என்ற சொற்களில், ஆண்டவர், ஆபிராமுக்கு தன்னை ஒரு கேடயமாக அறிமுகப்படுத்தினார்.

இளைஞன் தாவீதை, மன்னன் சவுலின் கரங்களிலிருந்து இறைவன் காத்தார். அவ்வேளையில் நிகழ்ந்ததை, சாமுவேல் 2ம் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர்கள் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது: ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர்... (2 சாமு. 22:1-3)

இறைவனை கேடயமாக உருவகித்து, சொல்லப்பட்டுள்ள கூற்றுகள், இன்னும் சில திருப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது. (தி.பா. 28:7) என்று திருப்பாடல் 28லும், நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். (தி.பா.33:20) என்று திருப்பாடல் 33லும், வாசிக்கிறோம்.

நம் குடும்பங்களில், குழந்தைகள் படுக்கச் செல்லும்போது, தங்களை ஆண்டவரின் கரங்களில், அன்னை மரியாவின் கரங்களில் ஒப்படைத்து உறங்கச் செல்லவேண்டும் என்று சொல்லித்தருகிறோம். அத்தகையதொரு நம்பிக்கையை, 3ம் திருப்பாடலின் அடுத்த இரு இறைவாக்கியங்களில் நாம் காண்கிறோம்: நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். (தி.பா. 3:5-6)

ஓர் ஆயனாக தன் இளமைப்பருவத்தை கழித்த தாவீது, தன் மந்தையை மேய்த்துவந்த வேளையில், பல்வேறு விலங்குகளிடமிருந்து தன்னையும், தன் ஆடுகளையும் இறைவன் காத்துவந்தார் என்பதை ஆழமாக உணர்ந்திருந்தார். இந்த உணர்வு, அவரை வாழ்நாளெல்லாம் வழிநடத்தியது. பெலிஸ்தியனான கோலியாத்தை எதிர்த்து தாவீது செல்ல விழைந்தபோது, மன்னன் சவுல் அவரைத் தடுத்தார். அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, சாமுவேல் முதல் நூல் 17ம் பிரிவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

1 சாமுவேல் 17: 32-40

தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார். தாவீது சவுலை நோக்கி, “உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடினால், நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்…. என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர், இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்று வா! ஆண்டவர் உன்னொடு இருப்பார்" என்றார்.

இதைத் தொடர்ந்து, கோலியாத்திடமிருந்து தாவீதைக் காப்பதற்கு, அவருக்குக் கவசங்கள் பொருத்தப்பட்டன. ஆண்டவரே தன் கேடயம் என்பதை நன்கு உணர்ந்திருந்த தாவீது, தனக்கு பொருத்தப்பட்ட கவசங்கள் அனைத்தையும் களைந்துவிட்டு, ஓர் ஆயனின் கோலுடனும், ஒரு கவணுடனும் புறப்பட்டார். அதற்குப்பின் தாவீது, கோலியாத்தை எவ்விதம் வீழ்த்தினார் என்பதை நாம் அறிவோம். இளமைப்பருவம் முதல் தன்னை இறைவன் காத்துவந்தார், கோலியாத்திற்கு முன் தன்னை இறைவன் காத்தார் என்று தாவீது கொண்டிருந்த அந்த ஆழமான உணர்வு, மீண்டும் ஒருமுறை, 3ம் திருப்பாடலில் எதிரொலிக்கிறது.

இத்திருப்பாடலின் இறுதி வரிகள் நம்மில் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. இறைவன் தன் சார்பாக எழுந்து, தன் பகைவர்களை தண்டிக்கும்படி, 7ம் இறைவாக்கியத்தில் கூறும் தாவீது, இறுதி இறைவாக்கியத்தில் கூறும் ஆசி மொழி இதோ: விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (தி.பா. 3:8)

தன் மகன் அப்சலோமின் தூண்டுதலால், தன் நாட்டு மக்களில் பலர் தனக்கு எதிராக எழுந்துள்ளனர் என்பதை அறிந்திருந்தாலும், தன் காலை மன்றாட்டின் ஒரு பகுதியாக, அவர்கள் மீது இறைவனின் ஆசீர் இறங்கும்படி மன்னன் தாவீது வேண்டுவது சிறப்பு.

மத்தேயு நற்செய்தியில் காணப்படும் மலைப்பொழிவுக்கு இணையாக, லூக்கா நற்செய்தியில் நாம் காணும் சமவெளிப் பொழிவில், “உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (லூக்கா 6:28) என்று இயேசு கூறிய சொற்களுக்கும், அச்சொற்களை மெய்ப்பிக்கும்படி அவர், கல்வாரியில், சிலுவையில், தன்னை வதைத்தவர்களுக்காக செபித்ததற்கும், ஒரு முன்னோட்டமாக, 3ம் திருப்பாடலின் இறுதியில் தாவீது கூறும் ஆசி மொழிகள் அமைந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2021, 13:44