தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
உலகிற்கு நீதி வழங்கும் ஆண்டவர் உலகிற்கு நீதி வழங்கும் ஆண்டவர் 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 9 – நீதியின் கடவுளுக்கு நன்றி 2

அநீதிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறினாலும், எளியோரின் நம்பிக்கை வீண்போகாது என்றும், அநீதிகளை புரியும் ஆணவம் மிகுந்த தலைவர்கள், தாங்கள் 'வெறும் மனிதரே' என்பதை உணரவேண்டும் என்றும், தாவீதுடன் இணைந்து வேண்டுவோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 9 – நீதியின் கடவுளுக்கு நன்றி 2

திருப்பாடல்கள் நூலில் பயன்படுத்தப்படும் எண் குறியீட்டின் வேறுபாடுகள், 9ம் திருப்பாடலிலிருந்து ஆரம்பமாகிறது என்பதை, சென்ற விவிலியத்தேடலில் குறிப்பிட்டோம். 9,10 என்ற இரு எண்களுடன், எபிரேய மொழிப்பதிப்பில், பதிவாகியுள்ள இரு திருப்பாடல்கள், கிரேக்க மொழிப்பதிப்பில் ஒரே பாடலாக, 9 என்ற எண்ணுடன் பதிவாகியிருப்பது, எண் குறியீட்டில் காணப்படும் இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்பதையும் சிந்தித்தோம்.

எண் குறியீட்டால் மட்டுமல்ல, சொல்லப்பட்டுள்ள கருத்துக்களாலும், இவ்விரு திருப்பாடல்களும், நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்றையொன்று தொடர்ந்துவரும் இவ்விரு திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், நீதியைக் குறித்து, அதிலும், குறிப்பாக, கடவுளுக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பைக் குறித்து, நாம் கொண்டிருக்கும் இருவேறு கண்ணோட்டங்களை வெளிக்கொணர்கின்றன.

'நீதி வழங்கும் ஆண்டவரை, முழு இதயத்தோடு புகழ்வேன்' என்று 9ம் திருப்பாடலின் ஆரம்பத்தில் அறிக்கை வெளியிடும் தாவீது, "ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்?" (தி.பா. 10:1) என்ற கேள்வியுடன் 10ம் திருப்பாடலைத் துவக்குகிறார். நீதி வழங்கும் இறைவன், பொல்லாருக்கு தண்டனை வழங்குவார் என்ற நம்பிக்கை நிறைந்த சொற்களை, 9ம் திருப்பாடலில் கேட்கிறோம். இதற்கு நேர்மாறாக, ஆண்டவரின் நீதியைப்பற்றி சிறிதும் அக்கறையின்றி, பொல்லார், எவ்வாறெல்லாம் அக்கிரமங்களை அரங்கேற்றுகின்றனர் என்ற கருத்தை, 10ம் திருப்பாடலில் காண்கிறோம். உலகில் நிகழும் அநீதிகள், மற்றும், கடவுளின் நீதி என்ற இரு துருவங்களுக்கும் இடையே நிகழும் மோதல்கள், விவிலியத்தின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும், இவ்விரு துருவங்களும், அடிக்கடி மோதிக்கொள்வதை அறிவோம். நீதி வழங்கும் கடவுள் மீது நம்பிக்கை, உலகில் நிகழும் அநீதிகளைக் கண்டு மனத்தளர்ச்சி என்ற இவ்விரு உணர்வுகளுக்கிடையே, நம் உள்ளங்கள் ஊஞ்சலாடுவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

எதிரெதிர் துருவங்களைப்போல் தோன்றும் இவ்விரு எதார்த்தங்களும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்களாக, ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்த்தவே, இவ்விரு திருப்பாடல்களும் தொடர்ந்து பதிவாகியுள்ளன என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்கலாம். ஒன்றன்பின் ஒன்றாக பதிவாகியுள்ள 9,10 ஆகிய இரு திருப்பாடல்களில், 9ம் திருப்பாடலில் நம் தேடலைத் தொடர்வோம்.

9ம் திருப்பாடலின் ஆரம்ப வரிகளை சென்ற விவிலியத் தேடலில் சிறிதளவு சிந்தித்தோம். "ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்" (தி.பா. 9:1) என்று துவங்கும் முதல் வரியில் கூறப்பட்டுள்ள 'முழு இதயம்' என்ற சொற்றொடர் வழியே, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவில், அவருக்கு செலுத்தப்படும் வழிபாட்டில், அவருக்கு ஆற்றப்படும் பணியில் நிறைவும், முழுமையும் இருக்கவேண்டும் என்ற கருத்து, இஸ்ரயேல் மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிந்த உண்மை என்பதை, விவிலியத்தின் எடுத்துக்காட்டுகளோடு புரிந்துகொள்ள முயன்றோம். இறைவனுடன் கொள்ளும் உறவில், குறிப்பாக, வழிபாட்டில், முழுமையான இதயத்தோடு பங்கேற்பது, எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்துகொள்ள, புனித பெர்னார்ட் (St Bernard of Clairvaux) அவர்கள்  வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.

புனித பெர்னார்ட் அவர்கள், ஒருநாள், தன் குதிரை மீதேறி, மலைப்பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு எதிராக, அந்த மலைப்பாதையில், சுமைகளைச் சுமந்தவண்ணம் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு தொழிலாளி, புனிதரைப் பார்த்து பெருமூச்சு விட்டார். புனிதர், தன் குதிரையிலிருந்து இறங்கி, அவரைப்பார்த்து, "ஏன் என்னைப்பார்த்து பெருமூச்சு விடுகிறீர்?" என்று கேட்க, அத்தொழிலாளி, "கஷ்டம் ஏதுமில்லாமல், செபம் மட்டுமே செய்துகொண்டிருக்கும் நீர், குதிரையில் வலம்வருகிறீர். நானோ, நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கவேண்டியுள்ளது" என்று பதிலளித்தார். இதைக் கேட்டு புன்னகைத்த புனித பெர்னார்ட் அவர்கள், "செபம் சொல்வது அவ்வளவு எளிதல்ல. அது, பல வேளைகளில், நீர் செய்யும் தொழிலைவிட கடினமானது" என்று கூறினார்.

"நீர் சொல்வதை நான் நம்பத்தயாராக இல்லை. இவ்வளவு அழகான ஒரு குதிரை மீது, மிக அழகான ஓர் இருக்கையையும் பொருத்தி சவாரி செய்துகொண்டிருக்கும் உமக்கு, கடின உழைப்பு என்றால் என்னவென்று தெரியுமா?" என்று தொழிலாளி கேட்டார். புனித பெர்னார்ட் அவரிடம், "சரி, செபம் சொல்வது, எவ்வளவு கடினம் என்பதை உமக்கு உணர்த்த விரும்புகிறேன். நீர், "விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே" என்ற செபத்தை, முழுமனதுடன், துவக்கம் முதல் முடிவுவரை, வேறு எந்த எண்ணமும் உமது உள்ளத்தில் நுழையாதவண்ணம் சொல்லமுடிந்தால், உமக்கு இந்தக் குதிரையை, பரிசாகத் தருகிறேன்" என்று கூறினார்.

"ஓ, இதென்ன பெரிய கஷ்டம். இதோ சொல்கிறேன்" என்று கூறிய தொழிலாளி, கண்களை மூடி, "விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே" என்ற செபத்தைத் துவக்கினார். "உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம்..." என்று சொன்னவர், கண்களைத் திறந்து, "குதிரையோடு அந்த அழகிய இருக்கையையும் தருவீர்கள் அல்லவா?" என்று கேட்டார். புனித பெர்னார்ட், அவரைப் பார்த்து புன்னகை செய்தவண்ணம், குதிரையில் தன் பயணத்தைக் தொடர்ந்தார்.

இறைவனிடம் வேண்டுதல் செய்யும்போது, மனதை அலைபாயவிடாமல், ஆண்டவனை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பது எளிதல்ல. நம் தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டுதல் எழுப்பும் வேளைகளில், ஒருவேளை, நம் உள்ளங்கள், முழு ஈடுபாட்டுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வாய்ப்புண்டு. ஆனால், நம் தேவைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இறைவனைப் புகழும் வேளையில், முழு இதயத்துடன், முழுமையான ஈடுபாட்டுடன் புகழ்வது, மனித இயல்புக்கு அவ்வளவு எளிதானதல்ல என்பதை அறிவோம்.

"ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்" என்று 9ம் திருப்பாடலின் முதல் வரியில், மன்னர் தாவீது அறிக்கையிடுவது, அவரது உள்ளத்தில் நிறைந்திருந்த மகிழ்வைப் பறைசாற்றுகிறது. ஆண்டவர், 'நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருந்து; தன் வழக்கில் தனக்கு நீதி வழங்கினார்' (காண்க. தி.பா. 9:4) என்பதே, இந்த மகிழ்வுக்குக் காரணம். அரியணையில் அமர்ந்து நீதிவழங்கும் ஆண்டவரைப்பற்றி தாவீது, இத்திருப்பாடலில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறுகிறார்:

ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். (தி.பா. 9:7ஆ-8)

இவ்வுலக அதிகாரிகள், தங்கள் அதிகாரத்தையும், ஆணவத்தையும், பறைசாற்ற, 'அரியணை' என்ற அடையாளத்தை, பயன்படுத்துகின்றனர் என்பதை அறிவோம். ஒரு மன்னராக, அரியணையேறி அமர்ந்த அனுபவம் தாவீதுக்கு உண்டு. அந்த அரியணை தந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய தருணங்களும் தாவீதின் நினைவில் பதிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, ஆண்டவர் அரியணையில் வீற்றிருப்பது நீதி வழங்குவதற்கு மட்டுமே என்பதை, தாவீது, 9ம் திருப்பாடலில், வலியுறுத்திக் கூறும்போது, தன் தவறுகளையும், மறைமுகமாக அறிக்கையிடுகிறார் என்ற கோணத்தில் நாம் எண்ணிப்பார்க்கலாம்.

அரியணை, நீதி வழங்குதல் என்ற இவ்விரு எண்ணங்களையும் இணைத்து சிந்திக்கும்போது, நம் நினைவுகள், இயேசுவுக்கு அநீதியான தீர்ப்பு வழங்கிய ஆளுநர் பிலாத்தை எண்ணிப்பார்க்கிறது. "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே" (யோவான் 18:38) என்று வெளிப்படையாகக் கூறிய பிலாத்து, இயேசுவுக்குப் பதிலாக பரபாவை விடுதலை செய்தது, இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தது என்ற அநீதிகளை அடுக்கடுக்காகச் செய்தான்.

இந்த அநீதீயான தீர்ப்புகளுக்குப் பின்னரும், இயேசு குற்றமற்றவர் என்பதை, பிலாத்து, முழுமையாக நம்பியதால், 'அவரை விடுவிக்க வழிதேடினான்' (யோவான் 19:12) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆனால், இயேசுவை விடுவித்தால், சீசருடைய நட்பை அவன் இழக்க நேரிடும் என்று யூதர்கள் அச்சுறுத்தியதால், பிலாத்து, தன் இறுதி அநீதியை, அதிகாரப்பூர்வமாகச் செய்தான். இந்தக் காட்சி, யோவான் நற்செய்தியில் இவ்வாறு பதிவாகியுள்ளது:

பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான்... பிலாத்து யூதர்களிடம், "இதோ, உங்கள் அரசன்!" என்றான். அவர்கள், "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா? என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். (யோவான் 19:13-16)

நீதி வழங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்த பிலாத்து, தன் மனசாட்சி எழுப்பிய குரலுக்கு செவிமடுக்காமல், பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில், தவறான தீர்ப்பை வழங்கினார். இன்று, நம் நீதிமன்றங்களில், 'நீதி அரசர்கள்' என்றழைக்கப்படும் நீதிபதிகள், தீர்ப்பு வழங்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பணத்தாசையாலும், பதவி, குடும்பம், உயிர் ஆகியவற்றைக் காப்பதற்கென்றும், தவறான தீர்ப்புக்கள் வழங்கிவருவதை எண்ணிப்பார்க்கிறோம்.

கடந்த 8 மாதங்களாக, அநீதியான முறையில், மும்பையின் டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்கள், அண்மையில், மே 21ம் தேதி, மும்பை உயர் நீதி மன்றத்தில் நிகழ்ந்த ஒரு விசாரணையில், பதிவுசெய்த கூற்றுகள், இந்தியாவில், கோடான கோடி மக்களுக்கு நிகழும் அநீதிகளையும், சிறையில் நிகழும் அவலங்களையும் உலக ஊடகங்களுக்கு கூறியுள்ளன.

தான் சிறைக்கு வந்தபோது, ஓரளவு உடல்நலத்துடன் இருந்ததாகவும், சிறையில் அடைந்துவரும் இன்னல்களால், தன் உடல்நிலை பெரிதும் மோசமடைந்துள்ளதாகவும், அருள்பணி ஸ்டான் அவர்கள், வெளிப்படையாக, தெளிவாகக் கூறியுள்ளார். தற்போது, தன் உடல்நலன்மீது அக்கறை கொணடவர்கள்போல், சிறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் செல்வது, ஒரு நாடகமே என்பதை, சொல்லாமல் சொன்ன அருள்பணி ஸ்டான் அவர்கள், மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதில், தான் சிறையிலேயே இறப்பதற்கு தயார் என்பதையும், தெளிவாகக் கூறியுள்ளார். அவரது கூற்று, கடந்த சில நாள்களாக, உலக ஊடகங்களில் வெளியாகி, மனித உரிமை ஆர்வலர்களுக்கு, அதிர்ச்சியையும், வேதனையையும் விளைவித்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் மற்றும், உள்துறை அமைச்சர் என்ற இரு 'சீசர்கள்', தங்கள் ஆணவத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட, உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள், பாராளுமன்றம் அனைத்தையும் தங்கள் காலடியில் மிதித்து, அரியணையில் ஏறி அமர்ந்து, அநீதிகளை அடுக்கடுக்காய் செய்துவருகின்றனர். இவர்களைப் போலவே, இன்னும் உலகின் பல நாடுகளில், அதிகார வெறிபிடித்த தலைவர்கள், அரியணையில் அமர்ந்து, அநீதிகளைச் செய்துவருகின்றனர்.

அநீதிகள் பெருகியுள்ள இன்றைய உலகில், தாவீது, 9ம் திருப்பாடலின் இறுதியில் கூறியுள்ள சொற்களை, இன்று ஓர் விண்ணப்பமாக இறைவனிடம் எழுப்புவோம் அநீதிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறினாலும், அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற எளியோரின் நம்பிக்கை வீண்போகாது என்றும், அநீதிகளை ஒவ்வொரு நாளும் அரங்கேற்றிவரும் ஆணவம் மிகுந்த தலைவர்கள் அனைவரும், தாங்கள் 'வெறும் மனிதரே' என்பதை உணரவேண்டும் என்றும், தாவீதுடன் இணைந்து வேண்டுவோம்:  

"வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதரின் கை ஓங்க விடாதேயும்;; வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக! ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்; தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் (அதாவது, பதவி வெறிப்பிடித்தோர்) உணர்வார்களாக!" (தி.பா. 9:18-20)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 மே 2021, 14:15
Prev
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Next
May 2025
SuMoTuWeThFrSa
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031