தேடுதல்

"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்" அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. "நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்" அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 1

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு உரிய மாண்பை, இந்திய மக்கள், குறிப்பாக, வறியோர் வழங்கிவரும் இந்நாள்களில், 16ம் திருப்பாடலில் நாம் விவிலியத்தேடலை மேற்கொள்வது, அருள்நிறைத்தருணம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 16 - பற்றுறுதியும் நம்பிக்கையும் 1

இந்திய நடுவண் அரசும், அதன் அடிமையாக செயல்படும் NIA எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பும் மேற்கொண்ட அத்துமீறிய, அநீதியான, அரக்கத்தனமான நடவடிக்கைகளால், ஜூலை 5ம் தேதி, 84 வயது நிறைந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விசாரணைக்குட்பட்ட ஒரு கைதியாக, மரணமடைந்தார். அந்த மரணம் தந்த அதிர்ச்சி, இன்றளவும், உலகெங்கும், பல்வேறு தாக்கங்களை உருவாக்கிவருகிறது.

அவரது வழக்கை விசாரணை செய்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர்,  அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணம் தங்களில் உருவாக்கிய தாக்கத்தைப்பற்றி சொன்னவை, ஊடகங்களில் வெளியாயின. கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு பிணையல் வழங்கப்படவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனுவை, அவரது மறைவுக்குப்பின், ஜூலை 19ம் தேதி, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், S.S.Shinde, N.J.Jamadar ஆகிய இருவரும், அருள்பணி ஸ்டான் அவர்கள் ஆற்றிவந்த பணிகளுக்குப் புகழாரம் சூட்டினர்.

அவ்விசாரணயின்போது பேசிய நீதிபதி ஷிண்டே அவர்கள், பொதுவாக, அடக்கச்சடங்குகளைப் பார்ப்பதற்கு தங்களுக்கு நேரம் இருப்பதில்லை என்றும், ஆனால், அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிமரியாதை வழிபாட்டை, வலைக்காட்சி வழியாக நேரடியாகப் பார்த்தவேளையில், அது மிகவும் அருள்நிறைந்ததாக இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், அருள்பணி ஸ்டான் அவர்கள், மிக உன்னதமான மனிதர், அவர் மிகச்சிறந்த சேவையை சமுதாயத்திற்கு ஆற்றியுள்ளார், வறுமைப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகளுக்கு நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்துகிறோம் என்று, நீதிபதி ஷிண்டே அவர்கள் குறிப்பிட்டார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் மீது பொய் வழக்குகளைத் திணித்து, கோவிட் பெருந்தொற்று விதித்திருந்த தடைகளையும் துச்சமாக மதித்து, அவரைச் சிறையில் தள்ளி வதைத்துவந்த தேசியப் புலனாய்வு அமைப்பு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அருள்பணி ஸ்டான் அவர்களைக் குறித்து வெளியிட்ட புகழுரைகளுக்கு கடுமையான மறுப்பு தெரிவித்தது. எனவே, அந்த கூற்றுகளை நீதிபதிகள் 'வாபஸ்' பெற்றனர். அநீதியான முறையில் அருள்பணி ஸ்டான் அவர்களை சிறையில் அடைத்து கொலை செய்த NIA அமைப்பு, அவரது மரண்த்திற்குப் பின்னரும், இந்திய நீதி மன்றங்களை வாயடைக்கச் செய்வதை எதிர்த்து, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதிகளும், அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை, கடந்த சிலநாள்களாக, ஊடகங்களில் வெளியிட்டுவருகின்றனர். இவை அனைத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன் மரணத்தின் வழியே, இந்திய சமுதாயத்தின் மனசாட்சியை விழித்தெழச் செய்துள்ளார் என்பதை உணர்கிறோம்.

அத்துடன், நீதிக்காகப் போராடுபவர்கள் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகின்றனர் என்பதை உணர்த்தும் வண்ணம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் தகனம் செய்யப்பட்டு சாம்பலானபிறகு, அவரது சாம்பல் அடங்கிய கலங்கள், தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் வலம்வந்தவண்ணம் உள்ளன.

தமிழகத்தில் பிறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய கலங்கள், தமிழகத்தில் பணியாற்றும் இயேசு சபையினரின் நிறுவனங்கள் மற்றும் பங்குத்தளங்கள் அனைத்திலும், மக்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் வைக்கப்பட்டு வருகின்றன. ஜூலை 18, ஞாயிறன்று, சென்னையில் தன் பயணத்தைத் துவங்கிய ஒரு கலம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி-கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், ஊட்டி, கோவை ஆகிய மறைமாவட்டங்களில் உள்ள இயேசு சபையினரின் நிறுவனங்களில், ஜூலை 27ம் தேதி, இச்செவ்வாய் வரை கொண்டு செல்லப்பட்டது.

அதேவண்ணம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல் அடங்கிய மற்றொரு கலம், ஜூலை 22ம் தேதி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் தன் பயணத்தைக் துவக்கியது. இது, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மறைமாவட்டங்களில் பணியாற்றும் இயேசு சபையினரின் பணித்தளங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முடிய கொண்டு செல்லப்படும். இறுதியில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பயின்ற திருச்சி, புனித யோசேப்பு கல்வி நிறுவனங்களுக்கு, ஆகஸ்ட் 3ம் தேதி, அவரது சாம்பல் அடங்கிய கலம் கொண்டு செல்லப்படும் என்றும், அங்கு நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில், தலத்திருஅவை அதிகாரிகளும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைத்துவரும் பல பெரியோரும், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்வர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில், மனித உரிமைகளையும், நீதியையும் நிலைநாட்ட உழைத்துவரும் பல்வேறு அமைப்புக்களுடனும், நல்மனம் கொண்டோருடனும் இணைந்து, ஜூலை 28, இப்புதனை, இந்திய இயேசு சபை துறவியர், 'தேசிய நீதி நாள்' (National Justice Day) என, கடைபிடிக்கின்றனர். ஜூலை 28 மாலை, இந்திய நேரம், 6 மணி முதல், 6.45 முடிய, இந்தியாவின் பல்வேறு ஆலயங்கள், துறவியர் இல்லங்கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்தின் முன்னிலையில், கோவிட் பெருந்தொற்று விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மக்கள், நீதிகோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி, அமைதி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இயேசு சபையினர் மேற்கொள்ளும் இந்த முயற்சியில், அனைத்து மறைமாவட்டங்களும் இணையுமாறு, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

தான் வாழ்ந்த 84 ஆண்டுகளில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் பழங்குடியினர், மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு உரிய மாண்பை, இந்திய மக்கள், குறிப்பாக, வறியோர் வழங்கிவரும் இந்நாள்களில், ‘பற்றுறுதியும் நம்பிக்கையும்’ என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 16ம் திருப்பாடலிலும், அதைத்தொடர்ந்து, ‘மாசற்றவனின் மன்றாட்டு’ என்ற தலைப்புடன் பதிவாகியுள்ள 17ம் திருப்பாடலிலும், நாம், விவிலியத்தேடலை மேற்கொள்வதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள்நிறைத்தருணமாகக் கருதலாம்.

16ம் திருப்பாடலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன், அப்பாடலுக்குத் தரப்பட்டுள்ள முன்குறிப்பு, நம் கவனத்தை ஈர்க்கிறது. 16ம் திருப்பாடலின் முன்குறிப்பில், இது, "தாவீதின் கழுவாய்ப் பாடல்" என்று கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், இத்திருப்பாடலின் முன்குறிப்பு, "A Miktam of David" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'Miktam' என்ற சொல், எபிரேய மொழியிலிருந்து எடுக்கப்பட்டச் சொல். இதற்கு, விவிலிய விரிவுரையாளர்கள் இருவகை பொருள் தருகின்றனர்.

'Miktam' என்ற சொல்லுக்கு, 'பொறிக்கப்பட்ட' என்ற பொருள் உண்டு. தலைமுறை, தலைமுறையாகப் பாதுகாக்கப்படவேண்டிய கூற்றுகள், கல்லில் அல்லது உலோகத்தில் பொறிக்கப்படுகின்றன. அதேபோல், 16ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், பல தலைமுறைகளுக்குப் பயன்படும் வகையில், பொறிக்கப்படவேண்டிய சொற்கள் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

'Miktam' என்ற சொல்லுக்கு, 'மூடப்பட்ட' என்ற மற்றொரு பொருளும் உண்டு. இந்தக் கருத்துடன் சிந்திக்கும்போது, 16ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள சொற்கள், உரத்தக்குரலில், வெளிப்படையாக பறைசாற்றப்படாமல், வாயை மூடியவண்ணம், ஒருவர், தனக்குள் கூறும் எண்ணங்கள் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். 'மூடப்பட்ட' என்ற இந்த எண்ணத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும்வண்ணம் 'Miktam' என்ற சொல், திருப்பாடல்கள் நூலில் இன்னும் 5 திருப்பாடல்களுக்கு முன்குறிப்பாகத் தரப்பட்டுள்ளது.

16ம் திருப்பாடலின் முன்குறிப்பில், இப்பாடல், 'தாவீதின் கழுவாய்ப் பாடல்', அதாவது, 'தாவீதின் Miktam' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. 'Miktam' என்ற சொல், மீண்டும் 56 முதல் 60 முடிய உள்ள ஐந்து திருப்பாடல்களில், முன்குறிப்பாக இடம்பெறும்போது, கூடுதலான விவரங்கள் தரப்பட்டுள்ளன:

  • 56ம் திருப்பாடலின் முன்குறிப்பில் – பெலிஸ்தியர், தாவீதை, ‘காத்து’ என்னுமிடத்தில் பிடித்தவேளை, அவர் பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,
  • 57ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - சவுலுக்குத் தப்பியோடி, குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,
  • 58ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - தாவீதின் கழுவாய்ப்பாடல் என்றும்,
  • 59ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - தாவீதின் வீட்டருகே காத்திருந்து, அவரைக் கொல்வதற்கென்று, சவுல், ஆள்களை அனுப்பியபோது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும்,

60ம் திருப்பாடலின் முன்குறிப்பில் - ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பிவந்து உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது, படிப்பினையாக, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல் என்றும், பல்வேறு கூடுதலான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இத்தருணங்களையெல்லாம் நினைவுபடுத்திப் பார்க்கும்போது, இவை அனைத்துமே, தாவீதுக்கு, பெரும் நெருக்கடிகளை உருவாக்கிய தருணங்கள் என்பதை உணர்கிறோம். அத்தகைய நெருக்கடியான சூழல்களில், தாவீதின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட இறைவேண்டல்களாக இத்திருப்பாடல்கள் உருவாகியுள்ளன.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். (திருப்பாடல் 16:1) என்று துவங்கும் 16ம் திருப்பாடலில், தாவீது எழுப்பும் வேண்டுதல்களை, அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 14:03