தேடுதல்

இவ்வுலகம், அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் இல்லம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Laudato Si' இயக்கத்தின் ஐரோப்பிய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் இணை இயக்குனரான Cecilia Dall'Oglio அவர்கள், செப்டம்பர் 1 இப்புதனன்று துவங்கியுள்ள படைப்பின் காலத்தையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், இவ்வியக்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் குறித்து பேசினார்.

சிரியாவில் பணியாற்றிவந்த இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall'Oglio அவர்கள், 2013ம் ஆண்டு அடையாளம் தெரியாத ஒரு குழுவால் கடத்தப்பட்டார். அவரது தங்கையான Cecilia Dall'Oglio அவர்கள், தன் பேட்டியில் Laudato Si' இயக்கம், படைப்பின் காலத்திற்கு இவ்வாண்டு, 'ஆபிரகாமின் கூடாரத்தை' அடையாளமாக தேர்தெடுத்திருப்பதைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாண்டு உலகின் பல நாடுகளில், Laudato Si' இயக்கத்தின் வழியே நிறுவப்படும் ஆபிரகாம் கூடாரங்களைக் கண்டு தன் சகோதரர் அருள்பணி Paolo அவர்கள் பெரிதும் மகிழ்வார் என்று கூறிய Cecilia அவர்கள், ஆபிரகாமைப்போல, வரவேற்பையும் விருந்தோம்பலையும் அனைத்து கிறிஸ்தவர்களும் தங்கள் அடையாளமாகக் கொண்டிருக்கவேண்டும் என்று கூறினார்.

இளையோருக்கு உரை வழங்கும் Cecilia Dall'Oglio
இளையோருக்கு உரை வழங்கும் Cecilia Dall'Oglio

"இவ்வுலகம், அனைவருக்கும் உரிய இல்லமா? கடவுளின் இல்லத்தை மீண்டும் புதுப்பிக்க" என்ற மையக்கருத்துக்கு ஒரு பதிலுரையாக, ஆபிரகாமின் கூடாரம் என்ற கருத்தை, Laudato Si' இயக்கம் இவ்வாண்டு தெரிவு செய்தது என்று Cecilia அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இவ்வுலகம், நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் இல்லம் என்பதையும், இங்கு அனைவருக்கும் இடம் உண்டு என்பதை உணர்த்தவும், உருவாக்கப்பட்டுள்ள படைப்பின் காலம் என்ற வாய்ப்பினை அனைவரும் நல்முறையில் பயன்படுத்த Laudato Si' இயக்கம் அனைவரிடமும் சிறப்பாக விண்ணப்பிக்கிறது என்று Cecilia அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:40