தேடுதல்

காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வதைக் காட்டும் ஓவியம் காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் உயர்வதைக் காட்டும் ஓவியம் 

ஓசியானியா - சுற்றுச்சூழல் பாதுகாப்பு உடனடித் தேவை

Laudato si' திருமடலின் உணர்வில் ஓசியானியாவில் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் உலகளாவிய காரித்தாஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, நாடுகளில் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அந்நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Laudato si' திருமடலின் உணர்வில், இணையவழி கருத்தரங்குகளை நடத்திவருகிறது.

கடந்த மாதத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களை மையப்படுத்தி கருத்தரங்குகளை நடத்தியுள்ள காரித்தாஸ் நிறுவனம், நவம்பர் 09, இச்செவ்வாயன்று, ஓசியானியாவில், ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஊக்குவிப்பது குறித்த கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

நம்பிக்கை, பிறரன்பு

இக்கருத்தரங்கில் உரையாற்றிய, ஓசியானியா காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Tonga மற்றும் Niue மறைமாவட்ட ஆயருமான கர்தினால் Soane Patita Paini Mafi அவர்கள், ஓசியானியா கண்டத்திலுள்ள இடங்களின் அழகை எடுத்துக் கூறியதோடு, ஆபத்தை எதிர்கொள்ளும் அந்த இடங்களின் பாதுகாப்பு குறித்து தான் கவலைகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் COP26 உலக மாநாடு பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள உரைகள் பற்றியும் தன் கருத்தைத் தெரிவித்த கர்தினால் மாஃபி அவர்கள், பேரிடர்கள், போர்கள் போன்ற கடினமான நிலைகள் சோர்வுறச் செய்தாலும், மத நம்பிக்கை நம்மை முன்னோக்கிச் செயல்பட உதவுகின்றது என்று கூறினார்.

அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti) மற்றும், இறைவா உமக்கே புகழ் (Laudato si') திருமடல்களில், முக்கிய செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் நம்பிக்கை குறைவுபடுகின்றது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றுரைத்த கர்தினால் மாஃபி அவர்கள், ஓசியானியா காரித்தாஸ், மக்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுகிறது என்று கூறினார்.  

ஓசியானியாவில் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் காரித்தாஸ் அமைப்பு, அப்பகுதியில் ஏழ்மையை அகற்றுவதற்கும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் அக்கருத்தரங்கில் கூறப்பட்டது.

1951ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 13:51