இறையரசுக்கு அர்ப்பணிக்கும் ஆவலை அதிகரித்த சித்ரவதைகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமாலில், 2008ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் மிகக்கொடுமையாகத் தாக்கப்பட்டபோது, தன் குடும்பத்துடன் காடுகளில் ஒளிந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர், இன்று அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் கந்தமாலில் கொடுமைப்படுத்தப்பட்டதும், தன் வாழ்வுக்கு அச்சுறுத்தல் வழங்கப்பட்டதும், இறையரசுக்கு அர்ப்பணிக்கும் தன் ஆவலைக் குறைக்கவில்லை, மாறாக, அதனை அதிகரிக்கவேச் செய்தன என உரைத்த புதிய அருள்பணி Bikash Nayak அவர்கள், கட்டக்-புவனேஷ்வர் உயர்மறைமாவட்டத்தின் பொருளாளராகப் பணியாற்றிய அருள்பணி Bernard Digal அவர்கள், கொடூரமாக கொல்லப்பட்டதும், தனக்கு தூண்டுதலைத் தருவதாக இருந்தது எனக் கூறினார்.
பீகாரின் Buxar மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, நவம்பர் 13ம் தேதி தன் கிராமத்தில் முதல் திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணி நாயக் அவர்கள், மதத்தீவிரவாதிகளின் சித்ரவதைகளுக்கு உள்ளாகி, அப்பாவி கிறிஸ்தவர்கள் பலியானது, கிறிஸ்துவுக்கு சாட்சி பகிர்பவனாக மாறவேண்டும் என்ற தன் மனவுறுதியை மேலும் உறுதிப்படுத்தியது என எடுத்துரைத்தார்.
2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளில் 7 பேர் கொல்லப்பட்ட Tiangia என்ற கிராமத்தின் ஒன்பதாவது அருள் பணியாளராக இம்மாதம் 6ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்ட 29 வயதான Nayak அவர்கள், கந்தமால் பகுதியில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுச்சின்னத்திற்குச் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தினார்.
புதிய அருள்பணியாளர் நாயக் அவர்கள் சார்ந்துள்ள புக்ஸார் மறைமாவட்டம், 33,000 கத்தோலிக்கர்களையும், 17 பங்குத்தளங்களையும், 19 அருள்பணியாளர்ளையும் கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்