இலங்கை குறித்த கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களின் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இலங்கை நாட்டில் மக்கள் நலன் நோக்கிய அடிப்படை மாற்றங்கள் இடம்பெறவேண்டும் என அந்நாட்டின் கிறிஸ்தவ, மற்றும் புத்தமதத் தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
இலங்கை அரசியல் தலைவர்கள் முறையான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மக்களின் ஏழ்மைநிலை அதிகரித்ததுடன், அடிமைதனங்களுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளதாக இருமதத் தலைவர்களும் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பிப்ரவரி 4ம் தேதி வெள்ளியன்று, இலங்கையின் 74வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களையொட்டிய அரசு விழாவில் பங்கேற்க மறுத்ததுடன், செய்தியொன்றையும் வெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், அரசியல் தலைவர்களின் தவறான அணுகுமுறைகளால் பல்வேறு இனத்தவர் மற்றும் மதத்தவரிடையே தப்பெண்ணங்களும் பிரிவினைகளும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே ஊழல் அதிகரித்துள்ளதையும், அவர்கள் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையும் எடுத்துரைத்து, நாட்டின் நிலைமைகுறித்த ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் கர்தினால் இரஞ்சித்.
இலங்கை நாடு பெற்ற சுதந்திரத்தைப் பலப்படுத்த வேண்டுமெனில், தியாகங்களும் தீவிர மாற்றங்களும் தேவைப்படுகின்றன எனவும் எடுத்துரைத்தார் கர்தினால்.
இதேபோல், அடிப்படை மாற்றங்களுக்கான அழைப்பை ஆங்கிலிக்கன் தலைவர்களும் சில புத்தமதத் தலைவர்களும் வெளியிட்டுள்ளனர்.
130 ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டனின் காலனியாக இருந்த இலங்கை, 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி சுதந்திரமடைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்