தேடுதல்

உக்ரேனிய புலம்பெயர்ந்தோருடன் முதுபெரும்தந்தை சந்திப்பு

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், உக்ரேனியப் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தினார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், உக்ரேனிய மக்களுக்குத் தனது ஒன்றிப்பைத் தெரிவித்ததுடன் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் போலந்து மக்களுக்கும் நன்றி கூறினார்.

மார்ச் 29, இச்செவ்வாயன்று, போலந்தின் வர்சாவிலுள்ள கர்தினால் Stefan Wyszyński பல்கலைக்கழகத்தில் உள்ள 90 புலம்பெயர்ந்தோரைப் போலந்து ஆயர்பேரவையின் தலைவர் Stanisław Gądecki அவர்களுடன் இணைந்து சந்தித்தபோது தனது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதாகக் கூறினார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு. 

உக்ரேனிய புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், “என் தலை நீரூற்றாகவும், என் கண்கள் கண்ணீர் துளிகளின் ஊற்றாகவும் இருந்திருக்குமேயானால், துன்புற்றுக்கொண்டிருக்கும் என் மக்களுக்காக நாள் முழுவதும் நான் அழுதுகொண்டே இருந்திருப்பேன்” என்று தன் வேதனையின் குரலை வெளிப்படுத்தினார்.

உக்ரேனியப் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் போலந்து நாட்டு மக்களின் தாராள மனதிற்கும் உபசரிப்பிற்கும் நன்றி தெரிவித்த முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு அவர்கள், உங்களின் இந்தச் செயல்களுக்கு ஒட்டமொத்த உலகமும் நன்றி கடன்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

உக்ரைன் மக்களுடன் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்திய முதுபெரும்தந்தை அவர்களுக்கு தனது சார்பாக நன்றி தெரிவித்த போலந்து பேராயர் Stanisław Gądecki அவர்கள், அனைத்துத் தலத் திருஅவையினரையும், பல்வேறு மதங்களின் தலைவர்களையும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களையும் இந்தப் போர் முடிவுக்கு வர இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2022, 14:26