சமந்தர் சிங் - கிறிஸ்தவர்கள் தனக்கு மாண்பை அளித்தனர்
மேரி தெரேசா: வத்திக்கான்
25 ஆண்டுகளுக்குமுன், அருளாளர் ராணி மரியா அவர்களை கத்தியால் குத்திக் கொலைசெய்த, முன்னாள் இந்துமத தீவிரவாதியான சமந்தர் சிங் அவர்கள், கிறிஸ்தவர்கள் தனக்கு மாண்பை அளித்தனர் என்று ஆசியச் செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டில் அருளாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட, அருள்சகோதரி ராணி மரியா அவர்களின் நினைவு நாளன்று. சமந்தர் சிங் அவர்கள், உதய்நகருக்குச் சென்று கல்லறையைத் தரிசித்து, அச்சகோதரிடம் செபித்தார்.
அச்சமயத்தில் ஆசியச் செய்தியிடம் உரையாடிய சமந்தர் சிங் அவர்கள், நான் இந்து மதத்தைச் சார்ந்தவன், மதமாற்றம் என்று குற்றம் சுமத்தி கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது தவறு என, அவர்களைத் துன்புறுத்துவோரிடம் என்னால் கூறமுடியும் என்றும், இவ்விவகாரத்தில் கிறிஸ்தவர்கள் அநியாயமாகக் குற்றம்சாட்டப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மதமாற்றம் என்று அநீதியாக குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவர்களுக்காக, அருள்சகோதரி ராணி மரியாவிடம் செபித்தேன் என்றும், மக்கள், தங்களது மாண்பைப் பெறவும், அவர்கள் மதிப்புள்ள ஒரு வாழ்வை வாழவும் கிறிஸ்தவர்கள் உதவுகின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள் நம் மக்களுக்குப் பணியாற்றுகின்றனர் என்றும், அவர்களைத் துன்புறுத்துவோருக்குத் தவறான தகவல்கள் தரப்படுகின்றன மற்றும், அவர்கள் அதில் ஈடுபடத் தூண்டப்படுகின்றனர் என்றும், சமந்தர் சிங் அவர்கள் கூறியுள்ளார்.
சமந்தர் சிங் அவர்கள், 1995ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி, அருளாளரான அருள்சகோதரி ராணி மரியா அவர்களை, பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டு, சாலையில் தரதரவென இழுத்துச்சென்று, 54 தடவைகள் கத்தியால் குத்தி கொலைசெய்தார். அக்கொலைக் குற்றத்திற்காக, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். ராணி மரியா அவர்களின் இளைய சகோதரியான அருள்சகோதரி செல்மி பவுல் அவர்கள், அவரை பலமுறை சிறையில் சந்தித்து மன்னிப்பு வழங்கினார், மற்றும், அவரது மனமாற்றப் பயணத்திலும் உடன்பயணித்தார். அதனால், சமந்தர் சிங் அவர்கள், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி விடுதலைசெய்யப்பட்டார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்