தேடுதல்

உக்ரைனில் இரயில் நிலையம் தாக்கப்பட்டதில் இறந்தவர்கள் உக்ரைனில் இரயில் நிலையம் தாக்கப்பட்டதில் இறந்தவர்கள் 

போரை நிறுத்த ஒரே வழி, உரையாடல்

ஆயுதங்களைக் கையிலெடுத்து, அப்பாவி குடிமக்கள், சிறார் போன்றோரைத் தாக்குவதும், பள்ளிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் போன்றவற்றை அழிப்பதும் எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாதது

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் போரை நிறுத்துவதற்கு ஒரே வழி உரையாடலே என்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

Phanar நகரில் இளம் மாணவர்கள் குழு ஒன்றுக்கு உரையாற்றியபோது இவ்வாறு கூறிய முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், உலகில் எந்தவொரு பிரச்சனைக்கும், எந்தவொரு விவகாரத்திற்கும் போரினால் தீர்வு காண முடியாது எனவும், உரையாடல் பாதையைத் தெரிவுசெய்தால், நிச்சயமாக அவற்றுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்த செயல் தவறானது என்றும், NATO போன்ற அமைப்புகளின் பிரசன்னம், இரஷ்யர்களுக்கு வருங்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால், இப்பிரசன்னம், உக்ரேனியர்களால் இரஷ்ய கூட்டமைப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார்.

ஆயுதங்களைக் கையிலெடுத்து, அப்பாவி குடிமக்கள், சிறார் ஆகியோரைத் தாக்குவதும், பள்ளிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் போன்றவற்றை அழிப்பதும் எக்காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாதது என்றும் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார்.

மேலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள், புடின் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது, மற்றும், உக்ரைன் மீது இரஷ்யாவின் ஆக்ரமிப்பை ஒரு “புனிதப் போர்” என்று கூறியிருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது எனவும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார். (AsiaNews)

இதற்கிடையே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இரயில் நிலையத்தில் இரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து, ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இத்தாக்குதலில் சிறார் உட்பட குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2022, 15:51