நாட்டின் எதிர்காலத்தை சூதாடாதீர்கள்: பிலிப்பீன்ஸ் ஆயர்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் நாட்டில், வருகிற மே 9ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அலட்சியமாக இருந்து நாட்டின் எதிர்காலத்தை சூதாடவேண்டாம் என்று வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்.
ஏப்ரல் 6, இப்புதன்கிழமை, மணிலாவின் பக்லாரனில் புனித சகாய அன்னை ஆலயத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவரும், Kalookanன் ஆயருமான Pablo Virgilio David இவ்வாறு தெரிவித்தார்.
கத்தோலிக்க நாட்டில் உள்ள விசுவாசிகள் தங்கள் அரசியல் மற்றும் அலுவலகப் பணிகளில் சிறப்பாகச் செயல்படத் தேவையான திறமையும் அனுபவமும் கொண்ட வேட்பாளர்களை ஆதரிப்பதன் மூலம் தீவிரமாக அரசியலில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார் ஆயர் Virgilio David.
அரசியலில் செயலற்ற தன்மை எப்போதும் வளர்ச்சியைக் கொண்டுவராது, நம் நாட்டின் எதிர்காலத்தை சூதாட வேண்டாம், அலட்சியத்தை எதிர்த்துப் போராடுவோம், பிறர் நலனில் அக்கறை காட்டுவோம் என்றும், நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டுள்ளோம், ஆகவே, கடவுள் மட்டில் பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாகிய நாம், வரும் மே 9ம் தேதி சரியாகவும் மனசாட்சிப்படியும் வாக்களிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும், ஆயர் Virgilio David அவர்கள் தனது மறையுரையில் எடுத்துரைத்தார்.
ஆயர்களின் பங்கு குறித்து அவர் பேசுகையில், கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற கடவுளின் குரலைக் கேட்டு, அதன்படி நம் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுவதே நமது முதன்மைக் கடமை என்றும், நமது நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உண்மைக்கும் பொய்க்குமான போராட்டத்தில், உண்மையின் பக்கம் மக்களை வழிநடத்திச் செல்வதில் நமது பங்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார் ஆயர் டேவிட்.
கர்தினால் Jose Advincula தலைமையேற்று வழிநடத்திய இத்திருப்பலியில் அதிக எண்ணிக்கையில் ஆயர்களும், அருள்பணியாளர்களும், இருபால் துறவியரும், பொதுநிலை விசுவாசிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்