விவிலியத் தேடல்: திருப்பாடல் 31-5–நேர்மையாளரைத் தாக்கும் பொய்யர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்ற தலைப்பில் கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 11 முதல் 14 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 15 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது, இறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக! பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக! (வசனம் 15-18)
மேற்கண்ட இறைவார்த்தைகளில், தாவீது அரசர் தொடர்ந்து தனது எதிரிகளின் சதிச்செயல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவர்களிடமிருந்து தான் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மிக முக்கியம் என்பதையும் தன்னுடைய இறைவேண்டலின் போது இறைவனிடம் தெளிவுபடுத்துகின்றார். தனது வாழ்வு முழுவதும் கடவுளின் கரங்களில் மட்டுமே உள்ளது என்றும், தன் முகத்தின்மீது அவரின் ஒளியை வீசி, அவரது பேரன்பால் தன்னை மீட்குமாறும் அவரிடம் கதறி அழுகின்றார். குறிப்பாக, எதிரிகளின் பொய் சொல்லும் வாய் பற்றியும், இறுமாப்புடன் பேசும் நாக்குப் பற்றியும் எடுத்துரைக்கின்றார். இன்றைய நம் சிந்தனைகளுக்கு இவை இரண்டையும் குறித்துத் தியானிப்போம். நாம் வாழும் இன்றைய உலகில் நல்லவர்களாகிய கடவுளின் அடியார்கள் பலர் வீழ்த்தப்படுவதற்கு அடிப்படைக் காரணஙகளாக அமைவது, பொய்யும் இறுமாப்பும்தான்.
``உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தினமும் கடுமையான பொய் பேசுவதாக உளவியலாளர் ரிச்சர்ட் வைஸ்மேன் கூறுகிறார். பொதுவாக, பொய்யர்கள் குறைவாகப் பேசுவார்கள், ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள், பொய்களிலிருந்து உணர்ச்சிபூர்வமாகத் தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள், 'நான்' 'எனது' என்பது போன்ற வார்த்தைகளைப் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் என்றெல்லாம் அவர்களின் உண்மை இயல்பு பற்றி உளவியல் எடுத்துரைக்கின்றது.
‘நேரம், காலம் சீனாவுக்கு சாதகம்: அதிபர் ஜிங்பிங் இறுமாப்பு’ என்ற தலைப்பில் தமிழகச் செய்தித் தாளில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. 1921ல், சீன கம்யூனிஸ்ட் கட்சியை, மாசேதுங் தோற்றுவித்தார். இதன், 100வது ஆண்டு விழாவையொட்டி, பீஜிங்கில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், “கடந்த, 100 ஆண்டுகளில், உலக நாடுகள் வரலாறு காணாத வகையில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்து சீராக இல்லை. மேற்கத்திய நாடுகள் உடனான நல்லுறவு சீர்கெட்டுள்ளது. பன்னாட்டுப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இத்தனைக்கும் மத்தியில் நமக்கு மட்டும், காலமும், நேரமும் சாதகமாக உள்ளது. அதன் காரணமாகவே, நம் உறுதி, மறு எழுச்சி, அர்ப்பணிப்பு, நம்பிக்கை ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்ட முடிந்துள்ளது. வரும் ஆண்டுகளில், சீன மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகின்றனர். சீனா, மிக வலிமையுள்ள, பணக்கார நாடாக மாறும். அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் முழு வேகத்தில் செயல்படுத்தப்படும். நவீன சமத்துவ நாடாக, சீனா உருவெடுக்கும்” என்று அதிபர் ஷீ ஜிங்பிங் பேசினார்.
இந்தக் கொரோனா பெருந்தொற்று உயிர்க்கொல்லியை உருவாக்கியதே சீனாதான் என்றும், இதுகுறித்து ஆய்வு நடத்தப்படவேண்டும் என்றும், அமெரிக்காவின் முன்னாள் தலைவர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாக செய்திகளில் படித்திருக்கிறோம். அவர் மட்டுமல்ல உலகத்தில் பெரும்பாலோர் இப்படித்தான் கருத்துத் தெரிவித்து வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் அதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் பேசியிருக்கும் அதிபர் ஜிங்பிங்யின் உரை ஒரு இறுமாப்பு கொண்ட உரையாகவே அச்செய்தித் தாள் எடுத்துக்காட்டுகிறது. மேலும் தான் உருவாக்கிய மருந்து மாத்திரைகள் அனைத்தையும் made in India என்று அச்சிட்டு இந்திய நாட்டில் விற்பனை செய்யும் மோசடி செயலில் ஈடுபட்டுவருவதாக, இந்தியா சீனாவின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றது. மறுபுறம் தன்னை யாரும் வீழ்த்த முடியாது என்ற இறுமாப்புடன், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பொய்யான செய்திகளைப் பரப்பி, உக்ரைன்மீது போர்தொடுத்து, அந்நாட்டு மக்களை அண்டை நாடுகளுக்குப் புலம்பெயரச் செய்து வருகிறார் என்பதையும் காண முடிகிறது. நம் இந்திய அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆயிரக் கணக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதிகார இருக்கையில் அமர்ந்தபிறகு, அப்படிப்பட்ட வாக்குறுதிகளைத் தாங்கள் கொடுக்கவே இல்லை என்று பொய்களைக் கூறி இறுமாப்புடன் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதைப் பார்க்கிறோம்.
இன்று தனி மனிதரையும், குடும்பங்களையும் உலகெங்கினுமுள்ள பல்வேறு சமுதாயங்களையும் பல வழிகளிலும் உடைத்துப்போட்டு வேறுபாடுகளை விதைத்திருப்பது இந்தப் பொய்யும், இறுமாப்பும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவைகள் இரண்டும் விதைத்த தீமைகள் பற்றி திருவிவிலியத்தின் தொடக்கத்திலேயே பார்க்கிறோம். கடவுளைப்போல ஆகவேண்டும் என்று இறுமாப்பு கொண்ட ஏவாள், சாத்தான் கொடுத்த கனியைத் தான் தின்றது மட்டுமன்றி தன் கணவருக்கும் கொடுத்தாள். "நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். (தொநூ 3:11-13). அவ்வாறே, காயின் இறுமாப்பு கொண்டு தனது தம்பி ஆபேலை கொன்றபோது, பொய்யும் சேர்ந்தே அவனுடன் ஒட்டிக்கொள்கிறது. ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான். (தொநூ 4:9). கடவுளின் அன்புக்கு எதிராக இறுமாப்பும் பொய்யுரையும் கொண்ட நோவாவின் சந்ததியினர் பாபேல் கோபுரத்தைக் கட்டத் தொடங்கியபோது, அவர்கள் திசைக்கு ஒரு குழுவாகச் சிதறுண்டு போனார்கள் என்பதை நாம் அறிகின்றோம். கடவுள் வெறுத்தொதுக்கும் 7 பாவச் செயல்களில் பொய்யையும் இறுமாப்பையும் எடுத்துக்காட்டுகிறது நீதிமொழிகள் புத்தகம். ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே. (நீமொ 6:16-19).
தன்னைப் படைத்த கடவுளுக்கும் மேலாக பலமும் வலிமையும், பெயரும், புகழும் கொண்டிருக்கவேண்டும், தான் மட்டுமே எல்லாவற்றையும் அடக்கியாளவேண்டும், உலகப் பொருள்கள் அனைத்தும் தனது ஒருவனின் காலடியில் மட்டுமே கொட்டிக்கிடக்க வேண்டும் என்று இறுமாப்பு கொண்ட மனிதர்கள் சிலரால் தான் பொய்க்கதைகள் பரப்பப்பட்டு உள்ளத்திலும் உலகிலும் நிலவும் அமைதியும் உடன்பிறந்த உணர்வு நிலையும் அதிதீவிரமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இறுமாப்பையும் பொய்புரட்டுகளையும் சவுல் அரசர் தாவீது மீது கொண்டிருந்திருக்கிறார் என்பதும் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
எனவேதான் தாவீது அரசர் எதிரிகளின் இத்தகைய தீமை நிறைந்த செயல்களிருந்து விடுபட இறைவனின் என்றுமுள்ள ஒளி தன் முகத்தில் வீசப்படவேண்டும் என்கிறார். பழைய ஏற்பாட்டில் வரும் எண்ணிக்கை நூலில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி கூறும் முறைப்பற்றி எடுத்துரைக்கின்றார். இதனை மனதில் கொண்டே தாவீது அரசரும் கடவுள் தன்மீது தனது திருமுக ஒளியை வீசி தன்னைக் காக்குமாறு இறைவேண்டல் செய்கின்றார். ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6.22-26).
ஆகவே நேர்மையாளர்களைத் தாக்கி, மனித மாண்பை அழித்தொழித்து, கடவுளுக்கு எதிராகப் பாவத்தை விளைவிக்கத் தூண்டும் இறுமாப்பு, பொய் ஆகிய இரண்டையும் நம் உள்ளங்களிலிருந்து பிடுங்கி எறிவோம். அதற்கான அருள்வரங்களை இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்