தேடுதல்

இலங்கையில் அரசு எதிர்ப்புப் பேரணி இலங்கையில் அரசு எதிர்ப்புப் பேரணி 

இலங்கையில் இடம்பெறும் தேசியப் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள்

மே 06, இவ்வெள்ளியன்று இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு, 1953ம் ஆண்டுக்குப்பின் அந்நாட்டை மிகவும் பாதித்துள்ள மிகப்பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்று என கூறப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியை அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷ அவர்களும், அவரது அரசும் கையாளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் நாடுதழுவிய போராட்டங்களில் கிறிஸ்தவர்களும் இணைவதன் அடையாளமாக, அவர்கள் அந்நாட்டிலுள்ள தங்களின் அனைத்துப் பள்ளிகள் மற்றும், நிறுவனங்களை மூடியுள்ளனர்  

இலங்கையில் தொழிற்சங்கங்கள் மற்றும், பொதுமக்கள் சமுதாய நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், மே 06, இவ்வெள்ளியன்று, அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மின்சார மற்றும் நலவாழ்வு அமைப்புகள், பொது மற்றும், தனியார் போக்குவரத்து அமைப்புகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

போராட்டதாரர்கள், கொழும்பு நகரின் நாடாளுமன்ற கட்டடத்திற்கு நெருங்கிவரும்போது, காவல்துறை அவர்கள்மீது கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தி கலைக்க முயன்றது மற்றும், அவசரகாலச் சட்டமும் அறிவிக்கப்பட்டது என்று செய்திகள் கூறுகின்றன.

அதேநேரம், போராட்டதாரர்களுக்கு ஆதரவாக, பல கிறிஸ்தவ ஆலயங்களும், புத்தமத கோவில்களும் மணிகளை ஒலித்தன. இவ்வெள்ளியன்று இலங்கையில் இடம்பெற்ற பொது வேலைநிறுத்த நிகழ்வு, 1953ம் ஆண்டுக்குப்பின் அந்நாட்டை மிகவும் பாதித்துள்ள மிகப்பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்று என கூறப்படுகின்றது.

மூன்று வாரங்களுக்குமேல் இலங்கைத் தெருக்களில் பங்கெடுத்துவரும் கத்தோலிக்க அருள்பணி Amila Jeevantha Peiris அவர்கள் கூறுகையில், நாட்டினர் அனைவருமே தற்போதைய ஊழல் ஆட்சிக்கு மிகுந்த கோபத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி பறக்கிவிடப்பட்டுள்ளன என்று, யூக்கா செய்தியிடம் கூறினார். இலங்கையின் வெளிநாட்டுக் கடன் ஏறத்தாழ 5,100 கோடி டாலர் என்று கூறப்படுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2022, 17:37