ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை: யூதருக்கு எதிரான சட்டங்களுக்கு மன்னிப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
யூதர்கள், மற்றும், யூத மதத்திற்கு எதிராக இக்காலத்தில் நிலவும் முறைகளைப் புறக்கணிக்குமாறு, ஆக்ஸ்ஃபோர்டு பேரவையின் 800வது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒன்றில் கிறிஸ்தவர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இங்கிலாந்தைவிட்டு யூதர்கள் வெளியேற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்திருந்த, 800 ஆண்டுகளுக்குமுன் யூத சமுதாயத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்காக, அச்சமுதாயத்திடம், மன்னிப்பு கேட்கும் அறிக்கை ஒன்றை இங்கிலாந்தின் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை வெளியிட்டுள்ளது.
மே 08, இஞ்ஞாயிறன்று, ஆக்ஸ்ஃபோர்டு, கிறிஸ்து ஆங்லிக்கன் சபை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பிரித்தானியாவின் யூத தலைமைக் குரு ரபி Ephraim Mirvis, கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டீன் வெல்பி ஆகியோர் உள்ளிட்ட முக்கிய அரசு மற்றும், மதப் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.
யூதருக்கு எதிரான சட்டங்கள்
1222ம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி, யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உறவு இருப்பது தடைசெய்யப்பட்டது. அச்சட்டங்களின்படி யூதர்கள் தங்களைப் பிரித்துக்காட்டுவதற்கென, ஓர் அடையாளத்தையும் ஆடைகளில் கொண்டிருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. யூதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் கொடுக்கப்பட்டது. யூதர்கள், புதிய தொழுகைக்கூடங்களைக் கட்டுவதற்கும், சில பணிகளை ஏற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காலப்போக்கில் யூதர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1290ம் ஆண்டில் அரசர் முதலாம் எட்வர்ட் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணையின்படி, ஏறத்தாழ மூவாயிரம் யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர், 360க்கும் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலக்கட்டத்தில் 1656ம் ஆண்டில் யூதர்கள் இங்கிலாந்தில் நுழைய மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
1530களில் அரசர் 8ம் ஹென்றியால் இங்கிலாந்து கிறிஸ்தவ சபை உருவாக்கப்பட்டபின், யூதமதவிரோத நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அச்சபை. தொடர்ந்து வலியுறுத்து வந்தது என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்