தேடுதல்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கத்தோலிக்க ஆயர் பேரவை காங்கோ ஜனநாயகக் குடியரசின் கத்தோலிக்க ஆயர் பேரவை  

காங்கோவில் போர்நிறுத்தம் ஏற்பட ஆயர்கள் வேண்டுகோள்!

“அமைதியின் சிற்பியாகவும், நல்லிணக்கத்தின் தூதராகவும் வருகைதரும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தின்போது அமைதிக்கான வழிகளை எட்டுவது மிகவும் நல்லது”: காங்கோ ஆயர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்னும் சில வாரங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கோ சனநாயகக் குடியரசுக்கு, தனது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் வட கிவு மாநிலத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை

போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற மக்களின் கனவு தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், சண்டையில் ஈடுபட்டுவரும் இருதரப்பினரும் நியாயமான வழியைத் தேர்வு செய்யவும், அமைதியின் பாதைக்குத் திரும்பவும்,  அறிக்கை ஒன்றில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது, காங்கோவின் ஆயர் பேரவை.

குறிப்பாக, Rutshuru மற்றும் Nyiragongo பகுதிகளில் FARDC எனப்படும் காங்கோ படையினருக்கும் M23 எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளத்தைத் தொடர்ந்து, இருதரப்பிலும் பல மனித உயிர்கள் பலியாகி வருவது தங்களுக்குப் பெரும் கவலையை அளிப்பதாகவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

வடக்கு கிவுவில் உள்ள உறுதியற்ற தன்மை அப்பகுதிகளில் பதட்டங்களை எவ்வாறு தூண்டுகிறது என்பதை பீதேஸ் செய்திக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு ஆயர்கள், நைரோபியில் அமைதிக்கான கூட்டங்கள் நடைபெற்ற சில வாரங்களுக்குப் பிறகும்கூட இருதரப்பிற்குமிடையே ஆயுதமோதல்கள் தொடர்வது தங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Great Lakes பகுதியில் வாழும் மக்கள் சிறந்த ஒத்துழைப்பின் வழியாக நீடித்த அமைதியை விரும்புகிறார்கள் என்றும், இதன் வழியாக எதிர்கால சந்ததியினர் பயனடைய முடியும் என்றும் கூறியுள்ள ஆயர்கள், அமைதியின் சிற்பியாகவும், நல்லிணக்கத்தின் தூதராகவும் ஜூலை மாதம் வரவிருக்கும் திருத்தந்தையை வரவேற்க மக்கள் அணிதிரள்வதால், அதற்குள்ளாக ஒரு நல்ல முடிவை எட்டுவது மிகவும் நல்லது என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2022, 15:13