தேடுதல்

இறைவேண்டல் எழுப்பும் முதியவர் இறைவேண்டல் எழுப்பும் முதியவர்  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 31-6–கடவுளுக்கு அஞ்சுவோருக்கு நன்மை!

தெய்வபயம் கொண்ட அனைவருக்கும் அன்பு, செல்வம், வெற்றி, மன அமைதி, தீமையில்லா பெருவாழ்வு, நீடித்த ஆயுள் ஆகிய நன்மைகளை கடவுள் வைத்திருக்கிறார்.
திருப்பாடல் 31-6

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஓர் ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த தெய்வ பக்தியும், தெய்வ பயமும் கொண்டவன். அவனது அன்னை அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். தான் துன்பப்பட்டாலும் தனது மகன் நல்லவனாகப் பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள் வராமலும், அவனுடன் தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமலும் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். அவன் வளர்ந்து வாலிபனானபோது, வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் வேறோர் ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், அவன் ஊரை விட்டுக் கிளம்பினான். அவன் கிளம்பும் நாள் வந்தபோது தாய் அவனிடம், “மகனே! நீ எப்போதும் கடவுளுக்கு அஞ்சுவோனாகவே நடந்துகொள்ள வேண்டும். உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். அதுவே உனக்கு எண்ணற்ற நன்மையான காரியங்களைக் கொண்டுவரும் என்பதை மட்டும் மறக்காதே!” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். அக்காலத்தில் எங்குச் சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் தொடங்கினான். செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர். அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?” என்று கேட்டான். அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னதை நினைவுகூர்ந்து, “என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன என்று உண்மையக் கூறினான். உடனே, கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன. அதனால் அவர்கள் ஆச்சரியமைடந்தனர். கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான். அந்தச் சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது. ஆபத்திலும் இவ்வளவு நேர்மையும், உண்மையும் ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான். அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றான்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 31ம் திருப்பாடலில் 15 முதல் 18 வரையுள்ள இறைவார்த்தைகளில் 'நேர்மையாளர்களைத் தாக்கும் பொய்யர்'  என்ற தலைப்பில் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 19 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது, அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். நானோ, கலக்கமுற்ற நிலையில் ‛உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக் கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர். (வசனம் 19-22)

தன்னை மிகப்பெரும் எதிரியாகப் பாவித்து கொல்லத் துடித்துக்கொண்டிருந்த மன்னர் சவுல் குறித்து கடவுளிடம் முறையிடும் தாவீது, தான் தெய்வபயம் நிறைந்வராகவும், அதனால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பட்டியலிடுகின்றார் காரணம், தாவீது தான் சிறுபிள்ளையாக வளர்ந்து வந்த காலங்களிலேயே தெய்வபயம் நிறைந்தவராக வளர்ந்தார். தான் செய்வதனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் தன் தெய்வபயத்தை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டார். தெய்வபயம் அல்லது கடவுளுக்கு அஞ்சுவோர் குறித்து திருவிவிலியம் பலரை நமக்கு எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்துகின்றது. அவர்களில் முதன்மையானோர் நோவா, ஆபிரகாம், யோபு, தாவீது போன்றோர். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு (நீமொ 9:10) என்று நீதிமொழிகள் நூல் ஞானத்தை  தெய்வபயத்தின் கொடையாகக் காட்டுகிறது. மேலும் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது (நீமொ 19:23) என்றும் ஆண்டவருக்கு அஞ்சுவோருக்குக் கிடைக்கும் பயன்களாக அந்நூல் எடுத்தியம்புகிறது. குறிப்பாக, வாழ்வில் அனைத்துவிதமான துன்பதுயரங்களைச் சந்தித்தபோதிலும் கடவுள்மீது கொண்டிருந்த அச்சத்தாலும், ஆழ்ந்த நம்பிக்கையாலும் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் பெற்றுக்கொள்கிறார் யோபு. ஞானத்தின் மேன்மையைப் பற்றிக் கூறும் யோபு, ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு (யோபு 28:28) என்கிறார்.

விடுதலைப் பயணநூலில் அருமையான நிகழ்வு ஒன்று வருகிறது. அதாவது, மோசே தனது மாமனார் வீட்டில் இருக்கும்போது, கடவுள் துணையோடு மக்களின் பிரச்சனைகளுக்கு நீதி வழங்கிக்கொண்டு வருகிறார். அப்போது அவருடைய மாமனார், இது ஒரு நற்காரியம் என்றாலும்கூட அவரால் மட்டுமே இதை செய்யமுடியாது என்றும், அவருக்குத் துணையாக இன்னும் சிலரை சேர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றார். அப்போது, அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் மோசேவுக்கு எடுத்துக்காட்டுகிறார். "மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர்" (விப 18:21). தான் கடவுள் மட்டில் மிகுந்த இறையச்சம் உள்ளவர் என்பதை எடுத்துக்காட்டும் தாவீது அரசர் வேறு சில திருப்பாடல்களிலும் இறையச்சம் குறித்துப் பேசுகின்றார். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார் (திபா 25:14) என்றும், ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது (திபா 111:10) என்றும்  கூறுவதன் வழியாக இறையச்சம் கொண்டிருப்போர் பெறப்போகும் தொடர் நன்மைகள் குறித்து விவரிக்கின்றார் மன்னர் தாவீது.

ஒரு பெண் அவருடைய வீட்டைவிட்டு வெளியேறியபொழுது மூன்று முதியவர்கள் அவரின் வீட்டின் முன் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து, “நீங்கள் மூவரும் பசியுடன் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் என் வீட்டிற்குள் வாருங்கள். நான் ஏதாவது உங்களுக்குச் சாப்பிடத் தருகிறேன்”என்று கூறி அழைக்கிறார் அப்பெண். அதற்கு அம்மூவரும்,“வீட்டில் உன் கணவர் இருக்கிறாரா”என்று கேட்கின்றனர். “அவர் இப்போது வீட்டில் இல்லை. வேலைக்குச் சென்றிருக்கிறார்”என்று பதிலளிக்கிறார்.   “அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அவர் வந்ததும் நாங்கள் வீட்டிற்குள் வருகின்றோம்”என்கின்றனர். அன்று மாலை அவரின் கணவர் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் நடந்தவற்றைக் கூறுகிறார் அப்பெண். அதற்கு அவரின் கணவர், “சரி, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா”என்று சொல்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறார். அதற்கு அவர்கள்,“நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது”என்று கூறுகின்றனர்.

“ஏன் அப்படி”என்று அவர்களிடம் அப்பெண் கேட்க, அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரைக் காண்பித்து,“இவர் பெயர்‘செல்வம்’என்றும், மற்றொருவரைக் காண்பித்து இவர் பெயர்‘வெற்றி’என்றும், எனது பெயர்‘அன்பு’என்றும் கூறி,“உள்ளே சென்று உன் கணவரிடம் எங்கள் மூவரில் யார் முதலில் வீட்டிற்குள் வரவேண்டும்”என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்”என்று அவரிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவரிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் தெரிவிக்கிறார். அதைக்கேட்ட அவருடைய கணவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, “முதலில் நம் வீட்டிற்குச் செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார்”என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதற்கு அப்பெண்,“வேண்டாம் முதலில் வெற்றியை அழைப்போம்”என்று கூறுகிறார். அவ்வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, அவர்களின் மகள், “நாம் அன்பை முதலில் அழைப்போம். அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார்” என்கிறாள். இதைக் கேட்ட அவர்கள், தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். உடனே அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து, “உங்களில் அன்பு என்று பெயர்கொண்டவர், முதலில் வீட்டிற்குள் வரட்டும்”என்கிறார். அதைக் கேட்ட அன்பு என்பவர் வீட்டிற்குள் செல்கிறார். உடனே அவரைப் பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண் மற்ற இருவரிடமும், “நீங்கள் ஏன் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டும் தானே?”என்கிறார். அதற்கு அம்மூவரும் அவரிடம்,“நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ முதலில் அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்குச் செல்வமும், வெற்றியும் கூடவே இருக்கும்”என்று பதிலளிக்கின்றனர்!

 

ஆகவே, ஞானத்தின் முதற்கனியாகிய தெய்வபயத்தை நம் உள்ளமென்னும் இல்லத்தில் முதலில் கொண்டிருந்தால் அதனுடன் சேர்ந்து அன்பு, .செல்வம், வெற்றி, மகிழ்ச்சி, மன அமைதி, தீமையில்லா பெருவாழ்வு, நீடித்த ஆயுள் ஆகிய இறைவனின் அளவில்லா மற்ற நன்மைகளும் நம்மை வந்தடையும். அதற்கான அருள்வரங்களை ஆண்டவரிடம் இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2022, 14:07