ஆயர்கள்: இலங்கை தன் வரலாற்றில் பேராபத்தை நெருங்கி வருகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
இலங்கையில் நாளுக்குநாள் மிகவும் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியால் இடம்பெற்றுவரும் வன்முறை, உண்மையிலேயே நாட்டிற்கு பேராபத்தாக மாறி வருகிறது என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையைத் தவிர்க்கவேண்டுமெனில், அரசின் கொள்கைகளில் உடனடி மாற்றம் இடம்பெறவேண்டும், மற்றும், அரசுத்தலைவரின் அதிகாரங்களை வரையறுப்பதற்கு, அரசியலமைப்பு திருத்தியமைக்கப்படவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
சிறாரும் இளையோரும் மாண்புடன் வாழக்கூடிய ஒரு நாட்டைக் கொண்டிருப்பதற்கு, தற்போதைய நெருக்கடிநிலைகள் அகற்றப்படுவதும், நீதி. சமத்துவம், மற்றும் திறந்தமனம் ஆகிய பண்புகள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதும் மிகவும் முக்கியம் என்று ஆயர்கள் அரசிடம் கூறியுள்ளனர்.
மக்கள் அடிப்படைத் தேவைகளின்றியும், நோயாளிகள் உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காமலும், பெற்றோர், குழந்தைகளுக்கு பாலும் உணவும் கிடைக்காமலும் உள்ளனர் எனவும், ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில் இலங்கை ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டைத் தாக்கியுள்ள பெருந்துயர், மிக மோசமான ஒரு காலக்கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது என்பதை உறுதிபடக் கூறலாம் என்றும், தற்போது பதவியில் இருக்கின்ற இடைக்கால அரசு, இத்தகைய பிரச்சனைகளைக் களையவும், அன்றாடத் துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் வேண்டும் என்றும் இலங்கை ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்