தேடுதல்

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 22ம் யோவான் திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 22ம் யோவான் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 22ம் யோவான் – பகுதி 1

அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் கர்தினால்கள் இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் திணறிக்கொண்டிருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1249ம் ஆண்டு பிரான்சின் Cahors எனுமிடத்தில் பிறந்த Jacques D'euse என்பவரே பின்னாளில் 22ம் யோவான் என்ற பெயரில் திருத்தந்தையானார். இவர் தொமினிக்கன் துறவுசபை நடத்திய பள்ளியில் தன் ஆரம்பகால கல்வியைப் பெற்றார். இத்தாலியின் நேப்பிள்ஸ் மன்னர் இரண்டாம் சார்லசின் நண்பரான இவர், அம்மன்னரின் பரிந்துரையாலேயே 1300ம் ஆண்டு Frejusன் ஆயராக நியமிக்கப்பட்டார்.

1314ம் ஆண்டு திருத்தந்தை 5ம் கிளமெண்ட் இறந்தபின், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் கர்தினால்கள் இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் திணறிக்கொண்டிருந்தனர். தேர்தலை எங்கு வைத்துக்கொள்வது என்பதே முதலில் பிரச்சனையானது. அவர்கள் ஒருமுறை கூடி, இடம் தேர்வு செய்யமுடியாமல் கலைந்து சென்றனர். பல அரசர்களும் ஒன்றிணைந்து, கர்தினால்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை. இதற்கிடையில், பிரான்சின் மன்னராக முடிசூட்டிக்கொண்ட ஐந்தாம் பிலிப், அனைத்து 23 கர்தினால்களையும் பிரான்சின் Lyonல் 1316ம் ஆண்டு ஜுன் 16ல் கூட்டினார். இந்த கர்தினால்கள், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி Portoவின் ஆயராக இருந்த கர்தினால் Jacques அவர்களை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் Lyonலேயே செப்டம்பர் 5ம் தேதி முடிசூட்டப்பட்டு 22ம் யோவான் என்ற பெயரை எடுத்துக்கொண்டு, Avignonல் இருந்து ஆட்சி புரியத் துவங்கினார்.

இவர் காலத்தில் பிரான்சிஸ்கன் துறவு சபையில் பெரிய முரண்பாடுகளும் மோதலும் தோன்றின. இதில் தலையிட்டு தீர்வுகாண முயற்சித்தார் திருத்தந்தை 22ம் யோவான். ஆனால், சில மன்னர்களின் ஆதரவு இச்சபையின் இரு பிரிவுகளுக்கும் இருந்ததால், தீர்வு என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இதற்கிடையில், ஜெர்மனியில் யாரை மன்னராகத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் குழப்பம் நிலவியது. Bavariaவின் லூயி என்பவர் திருத்தந்தையை எதிர்த்துக்கொண்டு, தனக்கு திருஅவைச் சட்டங்கள் கீழ்ப்படியவேண்டும் என்றார். அவர் திருஅவையை எதிர்த்தவர்களுக்கு ஆதரவளித்தார். திருத்தந்தையும் அவரை திருஅவையிலிருந்து விலக்கி வைப்பதாக அச்சுறுத்தி, மூன்று மாதங்களுக்குள் தன் முன்னால் வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கவேண்டும் எனப் பணித்தார். ஆனால், அவற்றையெல்லாம் மன்னர் லூயி மதிக்கத் தவறியதால், 1324ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அவரை திருஅவையிலிருந்து விலக்கிவைப்பதாக அறிவித்தார் திருத்தந்தை 22ம் யோவான். 1328ம் ஆண்டு உரோம் நகருக்கு வந்த மன்னர் லூயி, Sciarra Colonna என்பவரிடமிருந்து மன்னருக்குரிய மணிமுடியைப் பெற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல, பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த Corbarioவின் Pietro Rainalducci என்பவரை திருத்தந்தையாகவும் அறிவித்து முடிசூட்டினார். அவரும் 5ம் நிக்கலஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். ஆனால், அதற்குப்பின் நடந்தவை, கொஞ்சம் வித்தியாசமானவை. இது குறித்து வரும் வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2022, 13:09