பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கைக்கு ஆலோசனை
மெரினா ராஜ் – வத்திக்கான்
இலங்கை தலைநகர் கொழும்புவில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், பொருளாதார, அரசியல் அல்லது அரசியலமைப்பு சார்ந்த அத்தனை முயற்சிகளிலும் பொதுமக்களிடம் நம்பகத்தன்மையை இழந்த அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்சே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் மோசமான பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடியினால் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை தற்போது, பரந்துபட்ட ஊழல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டினாலும் துன்புற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் இரஞ்சித்.
இந்த நிலைமை மாற, நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளை சமாளிக்க, திறமையான நிபுணர்களின் துணையுடன் கூடிய பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது சிறு அரசியல் மற்றும் கருத்தியல்களை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டின் நலனுக்காக வெளிப்படையான மனதுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார் கர்தினால்.
மேலும், கடந்த 2019 ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த 277 பேர் மற்றும் காயமடைந்த 500 பேர் குறித்த வழக்கிலும், அரசியல் ஆதாயத்திற்காக வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கின்றது என்பதனையும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் கவலையுடன் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்