தேடுதல்

ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டத்தில்  பிலிப்பீன்ஸ் ஆயர்கள், ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டத்தில் பிலிப்பீன்ஸ் ஆயர்கள், 

“ஏழைகளுக்கு முன்னுரிமை” - பிலிப்பீன்ஸ் ஆயர்கள் உறுதி.

நம்பிக்கை கொண்ட ஏழை மக்களின் திருஅவையை சென்றடைவதில் நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கின்றோம்.

மெரினா ராஜ் வத்திக்கான்

ஏழைகளுக்கான திருஅவை என்ற தங்கள் கனவிலிருந்து  வெகு தொலைவில்  இருப்பதாகவும், அப்படிப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்களையும் ஏக்கங்களையும் கேட்டது மிகவும் வருத்தமளிக்கின்றது என்றும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தெரிவித்தனர்.

 பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் டாகெய்டேலில் ஜுலை 4 முதல் 7 வரை நடைபெற்ற ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டத்தின் பிரதிபலிப்பாக பிலிப்பீன்ஸ் ஆயர்கள், நற்செய்தி அறிவிப்பை விரைவுபடுத்த ஏழைகளுடன் இருத்தல், சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ள மக்களையும் சென்றடைதல் என்னும் உறுதியளிப்பதாக ஜூலை 11 திங்களன்று,  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

திருஅவையை விட்டு வெகு தொலைவில் இருக்கின்ற, வேறுபட்ட, ஒதுக்கப்பட்ட, அதேவேளை நம்பிக்கைக் கொண்ட மக்களை சந்திக்க, செவிமடுக்க, உரையாட, தாங்கள் தயாராக இருப்பதாகவும், அரசியல் சமூக ஊடகங்கள், பல்சமய உரையாடல்கள், ஒன்றிணைந்து வாழ்தல் போன்ற நேர்மறை உண்மையை எடுத்துரைக்கவும், மீண்டும் ஒரு முறை புறப்பட, தங்கள் கதவுகளை திறந்து வைக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

தங்களது நற்செய்தி அறிவிப்புப் பணி பல இடைவெளிகளையும், மூடப்பட்ட கதவுகளையும் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது என்றும் கூறியுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், பல வெற்றிப்பணிகள் இருந்த போதிலும் ஏழைமக்களுடனான பணியில் பல சவால்கள் நிறைந்திருப்பதாகவும், திருஅவைக்கு உள்ளே இருப்பவர்களை மட்டுமல்ல வெளியே இருப்பவர்களையும் ஒன்றிணைப்பதே தங்கள் பணி எனவும்    மேலும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2022, 13:36