தேடுதல்

திருத்தந்தை 11ம் கிரகரி திருத்தந்தை 11ம் கிரகரி 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 11ம் கிரகரி

பிரான்சின் அவிஞ்ஞோனிலிருந்து திருஅவையை வழிநடத்திய ஏழு பிரெஞ்சு திருத்தந்தையர்களுள் கடைசியானவர் 11ம் கிரகரி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

பிரான்சின் Limoges மறைமாவட்டத்தில் 1331ஆம் ஆண்டு பிறந்த திருத்தந்தை 11ம் கிரகரி, முன்னாள் திருத்தந்தை 6ம் கிளமென்டின் நெருங்கிய உறவினராக இருந்ததால், திருத்தந்தையின் ஆதரவை இளவயதிலேயே மிக அதிகமாகப் பெற்றிருந்தார். இவர் தன் 18ம் வயதிலேயே, திருத்தந்தை 6ம் கிளமென்டால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்ட பின்னர், Perugia பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று திருஅவைச்சட்டத்திலும் இறையியலிலும் புலமை பெற்றவரானார். 18 வயதிலேயே கர்தினாலாக அறிவிக்கப்பட்டாலும் மிகவும் தாழ்ச்சியுடையவராகவும் உள்ளத்தூய்மையுடையவராகவும் விளங்கினார் இத்திருத்தந்தை. 1370ஆம் ஆண்டு திருத்தந்தை 5ம் உர்பான் இறந்தபோது இவரையே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர் அவிஞ்ஞோனில் 1370ஆம் ஆண்டு டிசம்பரில் கூடிய கர்தினால்கள். 11ம் கிரகரி என்ற பெயரை எடுத்துக்கொண்ட இவர், அதன் பின்னர்தான் அருள்பணியாளராகவே திருநிலைப்படுத்தப்பட்டார். 1371ஆம் ஆண்டு சனவரி மாதம் 5ம்தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை 11ம் கிரகரி, முதலில் நாடுகளிடையே அமைதியைக் கொண்டுவர பலமாக உழைத்தார். பலவேளைகளில் இவரின் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தாலும், இவரின் அமைதிக்கான நோக்கமும் முயற்சிகளும் உறுதியானதாகவே தொடர்ந்தன. மிலானைச் சேர்ந்த பிரபு Bernabo Visconti என்பவர், திருத்தந்தைக்கு எதிராகக் கிளம்பியதால் அவரை திருஅவையைவிட்டு வெளியேற்றுவதாக அறிவித்து அவ்வறிக்கையை சில தூதுவர்கள் வழி Bernaboவுக்கு அனுப்பினார் திருத்தந்தை. கொடுங்கோலரான Bernaboவோ திருத்தந்தை மீதான கோபத்தால் அவ்வறிக்கை காகிதத்தை அப்பிரதிநிதிகள் வாயில் திணிக்கவைத்து தின்னும்படி வற்புறுத்தி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். இதனால் கோபமுற்ற திருத்தந்தை, 1372ஆம் ஆண்டில் அவர்மீது போரை அறிவித்தார். முதலில் Bernabo Visconti வெற்றிபெற்றாலும், பல அரசர்கள் மற்றும் பேரரசரின் உதவியுடன் Bernaboவைத் தோற்கடித்தார் திருத்தந்தை. இதனால், திருத்தந்தையுடன் ஓர் உடன்படிக்கைக்கு அவர் முன்வர வேண்டியதாகியது. இது 1374ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி இடம்பெற்றது.

   இதற்கிடையில், பெரிய தவறு ஓன்றை திருத்தந்தை செய்தார். ஆம், இத்தாலியின் திருஅவை நிர்வாகப் பணிகளில் பிரெஞ்சு நாட்டவரை நியமித்து இத்தாலியர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார் திருத்தந்தை 11ம் கிரகரி. இத்தாலியர்களின் இந்த கோபத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பிரபு Bernabo Visconti, 1375ஆம் ஆண்டு சில இத்தாலிய திருஅவைத் தலைவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு திருத்தந்தைக்கு எதிராக மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதில் அதிகம் ஈடுபட்டவர்கள் இத்தாலியின் பிளாரன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியினர் மீது பெருங்கட்டுப்பாடுகளை விதித்தார் திருத்தந்தை. இதனால் சியென்னாவின் புனித கேத்ரீன் திருத்தந்தையை அணுகி, மக்கள் மீதான தடைகளை அகற்றும்படி மன்றாட வேண்டியதாகியது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், திருத்தந்தை அவிஞ்ஞோனிலிருந்து உரோம் நகருக்கு, திருப்பீடத் தலைமையகத்தை மாற்றுவதே சிறந்த வழி எனக் கண்டார். 1376ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி பிரான்சின் Marseilesலிருந்து புறப்பட்ட திருத்தந்தை, இத்தாலியின் ஜெனோவா வழியாக Corneto எனுமிடத்திற்கு வந்து, அங்கு சில நாட்கள் தங்கி, அதன்பின் உரோமுக்கு அருகில் உள்ள ஓஸ்தியா நகர் வந்து, அங்கிருந்து, டைபர் நதி வழியாக 1377ஆம் வருடம் சனவரி 17ம் தேதி உரோம் நகருக்குள் நுழைந்தார். இவர் உரோம் நகருக்கு வந்தாலும், அந்நகரில் இவருக்கு எதிரான பகைமை உணர்வுகளில் ஒரு சிறிதளவு குறைவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், கர்தினால் இராபர்ட் என்பவரின் கட்டளையின்பேரில் இடம்பெற்ற செசேனா படுகோலைகள், திருத்தந்தை மீதான கோபத்தை மேலும் அதிகப்படுத்தின. இந்த படுகொலைகளுக்கு காரணமான கர்தினால் இராபர்ட்தான் பிந்நாளில் ஏழாம் கிளமென்ட் என்ற பெயரில் எதிர்த்திருத்தந்தையாகச் செயல்பட்டவர். உரோம் நகரில் திருத்தந்தைக்கு எதிராகத் தொடர்ந்து இடம்பெற்ற கிளர்ச்சிகளின் காரணமாக 1377ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இத்தாலியின் Anagui எனுமிடத்தில் தஞ்சம் பகுந்தார் கிருத்தந்தை பதினோராம் கிரகரி. இந்த கிளர்ச்சிகளை எல்லாம் நல்திறனுடன் அடக்கி, ஏறத்தாழ ஆறு மாதங்களுக்குப்பின் அதே ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதிதான் உரோம் நகருக்கு அவர் திரும்பி வந்தார்.   அடுத்த நான்கு மாதங்களிலேயே, அதாவது, 1378ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி இறைபதம் சேர்ந்தார். 1305ஆம் ஆண்டு திருத்தந்தை 5ம் கிளமென்டுடன் துவங்கி, 22ம் யோவான், 12ம் பெனடிக்ட், 6ம் கிளமென்ட், 6ம் இன்னசென்ட், 5ம் உர்பான், 11ம் கிரகரி என ஏழுபேர் 1378ம் ஆண்டுவரை பிரான்சின் அவிஞ்ஞோனிலிருந்து திருஅவையை வழிநடத்தியதில் திருத்தந்தை 11ம் கிரகரியே இறுதி பிரெஞ்சு திருத்தந்தை.

பிரெஞ்சு நாட்டவரின் பிடியிலிருந்து விலகிய திருஅவையில் அடுத்துவந்த திருத்தந்தை யார் என்பது குறித்து வரும்வாரம் காண்போம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2022, 13:20