மனித உரிமை போராளி ஸ்டான் சுவாமிக்கு நினைவஞ்சலி
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மனித உரிமை ஆர்வலரான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இறைபதம் அடைந்ததன்
முதலாம் ஆண்டு நினைவு, தமிழகம், இலண்டன் உட்பட பல்வேறு இடங்களில் ஜூலை 05, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.
இச்செவ்வாயன்று இலண்டன் மாநகரின் Farm Street ஆலயத்தில், இயேசு சபை அருள்பணி தொமினிக் ராபின்சன் அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் நினைவாக திருப்பலி நிறைவேற்றியபின்னர், அந்த ஆலயத்திலிருந்து இலண்டனிலுள்ள இந்திய தூதரகம் வரை தோழமை நடைப்பயணமும், இத்தூதரகத்திற்கு வெளியே, இயேசு சபை அருள்பணி Jovito D'Souza அவர்கள் தலைமையில் இறைவேண்டல் வழிபாடும் நடைபெற்றன.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பிறந்த கிராமமான, திருச்சிக்கு அருகிலுள்ள விரகாலூரில், மண்ணின் மைந்தர்கள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், மற்றும், மனித உரிமைக் காப்பாளர் அமைப்பு ஆகியவை இணைந்து இந்நினைவு நாளில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தின.
மதுரைப் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, கும்பகோணம் ஆயர் மேதகு F.அந்தோணிசாமி ஆகிய இருவரின் தொடக்கவுரையோடு தொடங்கிய இக்கூட்டத்தில் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும், மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள, மார்ட்டின் என்னல்ஸ் என்ற அறக்கட்டளை நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் மனித உரிமை ஆர்வலர்களைச் சிறப்பிக்கும்வண்ணம் வழங்கிவரும் நொபெல் விருதுக்கு இணையாக கருதப்படும் மார்ட்டின் என்னல்ஸ் விருது, இவ்வாண்டு ஜூன் 2ம் தேதி அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான் சுவாமி அவர்களின் மறைவுக்குப்பின் வழங்கப்பட்டுள்ள இவ்விருதை, அவரோடு சேர்ந்து பணியாற்றிய அருள்பணி சேவியர் சோரெங் அவர்கள் பெற்றுள்ளார்.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இறைபதம் அடைந்ததன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு பல்வேறு ஊடகங்கள் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் பற்றி பதிவுசெய்துள்ள நம் வாழ்வு இதழின் முதன்மை ஆசிரியரான அருள்பணி குடந்தை ஞானி அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காவும் தன் இறுதி மூச்சுவரைப் போராடியவர் என்று பதிவுசெய்திருக்கிறார்.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பழங்குடிகளின் உரிமைகளுக்காக மனித உரிமைப் போராட்டங்களை மேற்கொண்டவர். இவர் ஒரு சமூக மருத்துவர். இவர், இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய ஆண்டுகளில், எண்ணற்ற மனித உரிமை ஆர்வலர்களை உருவாக்கியவர். (UCAN/ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்