நல்ல சமாரியர் நல்ல சமாரியர்  

பொதுக் காலம் 15-ம் ஞாயிறு :நல்ல சமாரியர்களாய் நலம் தருவோம்!

மனிதரைக் காப்பாற்றுவதா அல்லது சட்டத்தைக் காப்பாற்றுவதா என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, இயேசு மனிதர் பக்கம்தான் நின்றார்.
ஞாயிறு சிந்தனை 10072022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  இச 30: 10-14   II. கொலோ 1: 15-20  III. லூக் 10: 25-37))

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருகே உள்ள பொன்வெளி கிராமத்தில் சம்பவம் ஒன்று நடந்தது. அங்குள்ள குளத்துக்கு அருகிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்க, குழந்தைகளும் பெரியவர்களும் ஊர்க் குளத்தை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். அவர்கள் சத்தம் போட்டதிலிருந்து, அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்துவிட்டது என்பதைத் தூரத்தில் இருந்தவர்களாலும் அறிந்துகொள்ள முடிந்தது. குளத்தைச் சுற்றி பலரும் நின்று கொண்டிருக்க, சற்றும் யோசிக்காமல் மின்னலெனப் பாய்ந்து குளத்தில் குதித்தார் கல்யாணி. கரையில் நின்றவர்களின் ஓலம் அதிகமாக, சரசரவென நீந்திச் சென்று குழந்தையைத் தூக்கி ஒரு கையில் பிடித்தபடியே கரைக்கு நீந்தி வந்தார். கரையில் நின்ற பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர் கரைக்கு வர கைகொடுத்து, குழந்தையையும் கல்யாணியையும் இழுத்துத் தூக்கினார்கள். சுற்றியிருந்தவர்கள், குழந்தையின் தாயைத் திட்டியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினார்கள். ஏற்கெனவே ஒருமுறை அந்தக் குளத்தில் ஒரு குழந்தை விழுந்து இறந்துபோயுள்ளது என்பதால், மொத்த கிராமும் பதற்றமாக இருந்தது. இம்முறை, குழந்தை குளத்தில் விழுந்த அடுத்த சில மணித்துளிகளில் மீட்கப்பட்டுவிட்டதால் நல்லவேளையாகக் குழந்தை அதிகம் தண்ணீர் குடிக்கவில்லை. `நல்லபடியா புள்ள பிழைச்சுக்கிச்சு' என்ற நிம்மதிக் குரல்கள் கேட்க ஆரம்பித்ததும்தான், கிராமத்தின் இதயத்துடிப்பு இயல்புக்குத் திரும்பியது.

அந்தக் குளம், எப்படியும் 10, 15 அடி ஆழம் இருக்கும். இந்தக் குளத்துக்குத் தண்ணி  வருவதற்கு வழியிருந்தபோதும், வடிகால் வசதி கிடையாது. அதனால்  தண்ணிர் அப்படியே தேங்கிக் கிடக்கும். எல்லா குப்பை, கழிவுகளையும் அப்பகுதி மக்கள் அக்குளத்தில்தான் கொண்டுவந்து கொட்டுவார்கள். அதனால, குழந்தை குளத்தில் விழுந்தபோது சிலர் அதில் குதிப்பதற்குத் தயக்கம் காட்டினார்கள். பலபேர் எனெக்கென்னவென்று ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால், கல்யாணி எதைப்பற்றியும் யோசிக்காமல், அக்குளத்தில் குதித்து அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியபோது அவர் ஒரு சாமியாகவே அனைவருக்கும் தெரிந்திருக்கிறார். கல்யாணிக்கு 2 குழந்தைகள். இவர் ஒன்பதாம் வகுப்புவரைப் படித்திருக்கிறார். பி.காம் படித்துள்ள அவரது கணவர், வேலை கிடைக்காத காரணத்தால் இப்போது கொத்தனார் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்யாணி, ``குழந்தை குளத்துல மூழ்கிக்கிட்டிருந்துச்சு. நாலு விரலு மட்டும் தான் வெளியே தெரிஞ்சது. எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டிருக்க, நான் அப்படியே ஓடிப்போய் குதிச்சுட்டேன். குழந்தையைப் பிடித்துத் தூக்கிட்டாலும், கரைக்கு வர முடியல; புடவை காலுல சிக்கிக்கிட்டு காலை அசைக்க முடியல. நானும் தண்ணிக்குள்ள மூழ்கி நாலுவாய் தண்ணி குடிச்சிட்டேன். அப்போ மனசுல, நமக்கு என்ன ஆனாலும் இந்தச் சின்ன உசுர காப்பாத்திடணும்னுதான் இருந்துச்சு. எப்படியோ குழந்தைய தூக்கிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தேன்'' என்றார். தலையில் இடிக்கும் அளவுக்குத் தாழ்வான கூரை வீட்டில்தான் வசிக்கிறார் கல்யாணி. ஒரு பக்கம் வீட்டின் சுவர் இடிந்து, துணி மற்றும் பழைய பேனர்களால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. கல்யாணியின் வீடு கூரை வீடாக இருந்தாலும், இன்று அப்பகுதி மக்களின் உள்ளங்களில் ஒரு பெண் சமாரியராய் உயர்ந்து நிற்கிறார்.

பொதுக் காலத்தின் 15-ஆம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நலம் பயக்கும் நல்ல சமாரியர்களாய் வாழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுகின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியை இப்போது வாசித்து நமது தியானச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

நற்செய்தியின் முதல் பகுதியின் இறுதியில், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேள்வி எழுப்பிய திருச்சட்ட அறிஞருக்கு, நல்ல சமாரியர் உவமை வழியாக அந்த நபர் யார் என்பதை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. அவர் கூறும் இந்த உவமையில் மூன்று நபர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். முதலாவது நபர் குரு. இவர் அடிபட்டவரைக் கண்டதும் வேறுபக்கமாக விலகிச் செல்கின்றார். இரண்டாம் நபர் லேவியர். இவரும் குருவைப் போலவே வேறுபக்கமாக விலகிச் செல்கின்றார். மூன்றாம் நபர்  சமாரியர். இவர், அடிப்பட்டவரை சாவடிக்குக் கொண்டு சென்று அவர் உயிரைக் காப்பாற்றுகிறார். இம்மூவரில் மூன்றாம் நபரைத்தான் இயேசு ஆண்டவர் உண்மைக் கதாநாயகனாகப் போற்றுகின்றார். இங்கே, குருவும், லேவியரும் செய்த செயல் சட்டப்படி குற்றமாகாது. காரணம், யூத மதச் சட்டப்படி, இறந்த ஒருவரையோ அல்லது அடிபட்டு, இரத்தக் காயங்களோடு கிடக்கும் ஒருவரையோ, தொடவோ, அல்லது அவரருகில் செல்லவோ கூடாது. அதைத்தான் அவர்கள் செய்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சட்டத்தைக் காட்டிலும் மனித மாண்பிற்கே, அதாவது, ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால்,  அவர்கள் அதைச் செய்யவில்லை. சட்டத்தைக் காரணம் காட்டி தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

இயேசுவின் வாழ்வில், ஓய்வு நாளில் அவர் செய்த அருளடையாளங்களே அவருக்கு  எதிர்ப்பைக் கொணர்ந்தன. அதற்காக அவர் மனம் தளரவில்லை. அவற்றைச் செய்வதில் அவர் துணிவோடு இருந்தார். மனிதரைக் காப்பாற்றுவதா அல்லது சட்டத்தைக் காப்பாற்றுவதா என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, இயேசு மனிதர் பக்கம்தான் நின்றார். மனிதத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் எல்லை தாண்டினார். ஓய்வு நாளில் இயேசு தொழுகைக் கூட்டத்திற்குள் சென்று கற்பித்தபோது, வலக்கை சூம்பிய ஒருவரைக் குணப்படுத்துகிறார். அப்போது, இது குறித்து மறைநூல் அறிஞரும், பரிசேயரும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். சட்டத்தைக் காட்டி மனிதத்தை மாய்க்கும் அவர்களின் தீய எண்ணத்தை அறிந்த இயேசு, அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர். (லூக் 6:9-11).  மேலும், “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” (மாற் 2:27) என்பதையும் 'ஓய்வுநாளில் கதிர் கொய்தல்' நிகழ்வில் ஆணித்தரமாக  எடுத்துக்காட்டுகின்றார் இயேசு.

கடந்த 2015-ஆம் ஆண்டு, A New Zealand Sikh put religion aside and took off his turban to help an injured child என்ற தலைப்பில், New Zealand Herald என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. ஐந்து வயதே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே கார் மோதி விபத்திற்குள்ளானது. அக்குழந்தைக்குத் தலையில் அடிபட்டு இரத்தம் வெளியாகிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 22 வயது நிரம்பிய Harman Singh என்ற சீக்கிய மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட்டென தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கழட்டி இரத்தம் வடிந்துகொண்டிருந்த அக்குழந்தையின் தலைக்குக் கீழ் தலையணையாக வைத்துப் பிடித்துக்கொண்டார். அதன்பிறகு அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவ்விளைஞர் செய்த செயல் காட்டுத்தீயாய் உலகெங்கினும் பரவத் தொடங்கியது. காரணம், சீக்கிய மதத்தவர் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தலைப்பாகையைக் கழட்ட மாட்டார்கள். இது அவர்களின் மதச்சட்டம். ஆனால், இவ்விளைஞரோ அதனைக் கடந்து சென்று அக்குழந்தைக்கு உதவியுள்ளார். இதுகுறித்து அவர் New Zealand Herald பத்திரிக்கை நிரூபரிடம், "நான் விபத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருதபோது, தலைப்பாகைக் குறித்து நினைக்கவில்லை அக்குழந்தைக்கு இரத்தப்போக்கு இருப்பதால் தலையில் வைத்துக்கொள்ள ஏதாவது தேவை என்றுதான் நினைத்தேன். அதுதான் என் வேலை என்று கூறியதுடன், ஆபத்துக் காலங்களில் இதுபோன்று உதவுவதற்கு எங்கள் மதச் சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது என்றும், பணிவோடு கூறிவிட்டுப் போய்விட்டார். இவரின் எல்லை கடந்த இந்தப் புதிய செயலுக்கு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் சீக்கியர்களும், இன்னும் பலரும் அவரைப் போற்றிப் பாராட்டினர்.

அன்றுமட்டுமல்ல இன்றும் கூட மதச் சட்டங்களின் பெயரால் மனிதமும் மனித மாண்பும் தொடர்ந்து சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன. ஆனால், இதுபோன்ற  ஆபத்துக் காலங்களில் நாம் எல்லை கடந்து செயல்படவேண்டும் என்பதைத்தான் இயேசு நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். இரண்டாவதாக, இயேசு கூறும் இந்த உவமையில் அவர் சமாரியரை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டியதற்குக் காரணம் உண்டு. சமாரியர்கள், யூதச் சமுதாயத்திலுள்ள பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் என அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு வந்தனர். இந்த யூதத் தலைவர்கள் அனைவரும் மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களுக்கும் பலியிடுதலுக்கும் மட்டுமே அதிமுக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அவர்கள் அணுகுமுறை தவறானது என்பதை எடுத்துக்காட்டவே ஒரு சமாரியரை உண்மைக் கதாநாயகனாக முன்னிறுத்துகின்றார் இயேசு. மேலும், பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல் நிகழ்விலும், இறுதியில் ஒரு சமாரியரே முக்கியத்துவம் பெறுகிறார். அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார். (லூக் 17:15-19). இதன் காரணமாகத்தான் ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றும் சுட்டிக்காட்டுகிறார் இயேசு (மத் 9:13). பொதுவாக, சமாரியர்களும் யூதர்கள்தாம். அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர் (காண். 2 அர 17:6, 24). ஆகவே, சாதி, மதம், இனம், மொழி, நாடு, கலாச்சாரம், பண்பாடு, இருப்பவர், இல்லாதவர் என, மனிதத்தை வேரறுக்கும் வேறுபாடுகளைக் களைந்துவிட்டு நமக்கு அடுத்திருப்போருக்கு இரக்கம் காட்டுவோம். நானிலமெங்கும் நல்ல சமாரியர்களாய் நலம் தருவோம் அதற்கான அருள்வரங்களை ஆண்டவரிடம் இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2022, 13:53