தேடுதல்

நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து அழும் பெண்கள் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து அழும் பெண்கள்  

நைஜீரியா, அழிவுப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது

மேற்கத்திய கல்விமுறை மிகவும் வெறுக்கத்தக்கது எனப் பொருள்படும் போக்கோ ஹராம் அமைப்பு, நைஜீரிய மக்கள் அனைவரிலும் இசுலாமிய ஷாரியா சட்டத்தைக் கடுமையாகத் திணிக்க முயற்சிக்கின்றது – ஆயர் லூக்கா

மேரி தெரேசா: வத்திக்கான்

நைஜீரியாவில், வன்முறை, ஆள் கடத்தல்கள், கொலைகள், ஆலயங்கள் தாக்கப்படல், ஆயுத மோதல்கள் போன்றவை நாடெங்கும் தொடர்ந்து பரவிவரும் இவ்வேளையில், அரசுத்தலைவர் Muhammadu Buhari அவர்களுக்கும்கூட மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான சூழலை எதிர்கொண்டுவரும் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா குறித்து பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்துள்ள, அந்நாட்டின் மின்னா மறைமாவட்டத்தின் துணை ஆயர் Luka Sylvester Gopep அவர்கள், தற்போதைய நிலைமை, நாட்டை ஒட்டுமொத்த அழிவுப் பாதையை நோக்கி இட்டுச்செல்வதாக உணரச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

நாட்டில் அதிகரித்துவரும் வன்முறைக்கும், அடிக்கடி கிறிஸ்தவக் குழுமங்கள் குறிவைத்து தாக்கப்படுவதற்கும் உள்ள அடிப்படைக் காரணத்தை விளக்கிய ஆயர் லூக்கா அவர்கள், அந்நாட்டின் போர்னோ மாநிலத்தின் தலைநகர் Maiduguriயில் உருவான போக்கோ ஹராம் என்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பின் கொள்கையே இதற்குக் காரணம் என எடுத்தியம்பியுள்ளார்.

மேற்கத்திய கல்விமுறை மிகவும் வெறுக்கத்தக்கது எனப் பொருள்படும் போக்கோ ஹராம் அமைப்பு, நைஜீரிய மக்கள் அனைவரின் சமூக வாழ்விலும், வளர்ச்சியிலும் இசுலாமிய ஷாரியா சட்டம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறது எனவும், ஆயர் லூக்கா அவர்கள் கூறியுள்ளார்.

போர்னோ மாநிலத்தின் மற்ற இசுலாமியக் குழுக்களோடு அமைதியான முறையில் நல்லிணக்கத்தோடு வாழ்ந்துவந்த மின்னா மறைமாவட்டம், 2011ஆம் ஆண்டில் பல உயிர்களைக் காவுகொண்ட கடுமையான வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளானது என்பதையும், ஆயர் லூக்கா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரிய அரசு, இவ்வன்முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தாலும், இந்நவீன தொழில்நுட்பக் காலக்கட்டத்தில், இவற்றை ஒழிப்பதற்கு அரசிடம் போதுமான நவீன தொழில்நுட்ப யுக்தி கிடையாது என்பதை கவலையுடன் குறிப்பிட்டுள்ளார், மின்னா துணை ஆயர் லூக்கா. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2022, 14:31