தேடுதல்

இறைவேண்டல் செய்யும் மூதாட்டி இறைவேண்டல் செய்யும் மூதாட்டி  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 33-3-ஆண்டவரின் திட்டங்கள் உயர்ந்தவை

நல்ல எண்ணங்களையும், திட்டங்களையும், வழிமுறைகளையும் கொண்ட கடவுள், தீயவர்களை முறியடித்து எப்போதும் வெற்றிகொள்கிறார்.
திருப்பாடல் 33-3

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தீமைகள் செய்த ஒருவன், இறந்தபின் நரகத்திலுள்ள பெரிய பாதாளகுழியில் தள்ளப்பட்டான். தன்னைக் காப்பாற்றுமாறு அங்கிருந்து கடவுளை நோக்கிக் கத்திக் கொண்டே இருந்தான்.  இவன் சத்தம் தாங்க முடியாமல், கடவுள், இவனுக்கு உதவ எண்ணினார். அவன் இவ்வுலகில் வாழ்ந்த போது, காலுக்கடியில் ஊறிய சிலந்திப் பூச்சியை, தன்னை அறியாமல் மிதிக்காமல் விட்டு விட்ட புண்ணியம் மட்டுமே, தீமை செய்த அவனது கணக்கில் இருந்தது. இந்த ஒரே ஒரு நற்செயலுக்காக இவனுக்கு உதவ எண்ணிய கடவுள், சிலந்தி நூல் ஒன்றை பாதாளகுழியில் இறக்கி, அவனை மேலே வருமாறு அழைத்தார். நூலைப் பிடித்து மேலே ஏறியவன், பாதி தூரம் வந்ததும், தன் பின்னே வேறு சிலரும் அதே நூலில் ஏறி வருவதைக் கண்டு, கோபம் அடைந்து தனக்குக் கீழுள்ள நூலை வெட்டி விட்டான். இச்செயலால் அவன் செய்த ஒரு புண்ணியமும் போய், அவனது பாவக் கணக்கில் ஒன்று சேர்ந்து, நூல் முழுவதும் அறுந்து பாதாளத்தில், மீண்டும் விழுந்து விட்டான். தீமை விதைப்பவர்கள் தங்களின் தீய எண்ணங்களாலேயே அழிந்துபோகிறார்கள். அதாவது, வினை விதைத்தவன் வினை அறுப்பான். தீயவர்கள் தீமை செய்யத் தயங்குவது இல்லை; சொல்லி முடிப்பதற்குமுன் அவர்கள் தீமைகளைச் செய்து முடித்து விடுவார்கள். ஆனால், நல்லவர்கள் தீமை செய்ய அஞ்சுவர்; அந்த நினைப்பே அவர்களை அச்சுறுத்தும். ஒரு தீமை இன்னொரு தீமைக்குக் காரணம் ஆகிவிடுகிறது.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இறைவனின் கொடையாக இயற்கை’ என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 6 முதல் 9 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 10, 11 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். (வசனம் 10,11).

மேற்கண்ட இரண்டு இறைவசனங்களிலும் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, வேற்றினத்தார் என்போர், கடவுளுக்கு எதிரான காரியங்களைச் செய்வதோடு, கடவுளின் அடியார்களையும் துன்புறுத்தும் தீய எண்ணம் கொண்டவர்கள். இதனை தாவீது அரசர் கூறும் வார்த்தைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். அதேவேளையில், இவர்களின் எந்தவொரு திட்டமும் எள்ளளவும் நிறைவேறாது என்பதையும், கடவுள் அவர்களின் தீய எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவார் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார். அதனால்தான், வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். என்கிறார் தாவீது அரசர். அதாவது, நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் இறுதியில் நன்மையே உருவான கடவுளே வெற்றிபெறுவார் என்கிறார். வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? (திபா 1:2) என்றும், உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது. நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்; அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர் (திபா 21:11,12), என்றும், ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்; அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும். இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள் (திபா 140:8) என்றும், தீமையை விதைக்கும் தீயவர்களான வேற்றினத்தார் பற்றி வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. மேலும், “பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்; என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்” (எசா 44:25,26) என்ற வார்த்தைகள் வழியாக யாவே இறைவன் எப்போதும் தீமையையும் தீயவர்களையும் அழிந்துபோகச் செய்து, தனது நேரிய திட்டங்களை நிறைவுறச் செய்பவர் என்பதையும் நம்மால் கண்டுணர முடிகிறது.

இரண்டாவதாக, ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும் என்கிறார் தாவீது. கடவுள் தான் படைத்த மனிதருக்கு எதிராக எப்போதும் எதுவும் செய்வதில்லை. காரணம், அவர் எப்போதும் நல்லதே நினைக்கின்றார். அவர் வேற்றுமைகளை வேரறுத்து ஒற்றுமையை வளர்ப்பவர். ஆனால், மனிதர் மட்டுமே தங்களின் தீய எண்ணங்களால் தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொள்ளக் கூடியவர்கள். “தாய் வயிற்றில் உன்னை நான்  உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.” (எரே 1:5) என்றும், உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர் (எரே 29:11), என்றும், “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன” (எசா 55:8,9) என்றும், ஆண்டவருடைய திட்டங்கள் மற்றும் எண்ணங்கள் குறித்து எசாயா மற்றும் எரேமியா புத்தகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

மிகச்சிறந்த ஞாபகசக்தியும் அறிவுக்கூர்மையும் உடைய மன்னர் ஒருவர் இருந்தார்.  ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரிமாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திரும்பச் சொல்ல அவரால் முடியும். அவரின் சபையில் மந்திரவாதி ஒருவனும் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திரும்பச் சொல்லும் சக்தி உடையவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மூன்றுமுறை கேட்டால், அதை அப்படியே திருப்பிச் சொல்வாள் அவள். அந்த மன்னர் ஓர் நயவஞ்சகன். எந்தப் புலவன் வந்து அவரைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும் பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், தகுந்த சன்மானம் தருவேன்” என்பான். வந்த புலவரும், தன் கவிதையைப் படிப்பார். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, “அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்” என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பார். ''இல்லை, இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று புலவர் சாதித்தால், “கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் மந்திரவாதிக்குக்கூடத் தெரியும்” என்று சொல்லி, அந்த மந்திரவாதியைப் பாடச்சொல்வார் மன்னர். புலவர் பாடி  ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என மந்திரவாதி அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் அப்படியே சொல்லுவான். அப்போதும், ''இருக்கவே முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவர் அழாக்குறையாகச் சொன்னால், “இல்லை. நீ பொய் சொல்லுகிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்” என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவார் மன்னர். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, அந்தப் புலவர் குழம்பிப்போய் அறிவு மங்கி, புத்தியை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவார்.

இந்நிலையில், 'அல் அஸ்மாய்' என்கிற கவிஞர் மன்னருடைய நினைவாற்றல் மற்றும் நயவஞ்சகம் குறித்து அறியவந்தார். மன்னருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார். எனவே, இதுவரை யாரும் பயன்படுத்தாத வித்தியாசமான புதிய சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை மன்னரோ, மந்திரவாதியோ,  அடிமைப் பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார். “மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன். உங்களுக்குப் படித்துக்காட்ட விரும்புகிறேன்” என்றார். அதற்கு மன்னர், “புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார். “நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று சொல்லி அவர் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார். கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திரும்பச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், மந்திரவாதியும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் மன்னர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். 'அல் அஸ்மாய்’ என்ற அந்த கவிஞரின் வழிமுறை, எண்ணம், திட்டம் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அதனால்தான் அவரால் நயவஞ்சகம் கொண்டு அந்த மன்னரை வெற்றிக்கொள்ள முடிந்தது. தீயவரின் எண்ணங்களை, அது அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, கடவுள் நிச்சயம் முறியடிப்பார் என்பது திண்ணம். மேலும், தீயவரின் எண்ணம் எப்போதும் தீய வழியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், நல்லவர்களான கடவுளின் அடியார்களை அழித்தொழிக்கவுமே முற்படுகிறது. ஆனால், நல்ல எண்ணங்களையும், திட்டங்களையும், வழிமுறைகளையும் கொண்ட கடவுள், தீயவர்களை முறியடித்து எப்போதும் வெற்றிகொள்கிறார். அதேவேளையில் தனது நம்பிக்கைக்குரிய அடியார்களையும் அற்புதமாக காப்பாற்றுகிறார். ஆகவே, கடவுளைப்போல் நல்ல எண்ணங்களும் திட்டங்களும் கொண்டு நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 14:53