தேடுதல்

கண்கவர் இயற்கை கண்கவர் இயற்கை  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 33-2-இறைவனின் கொடையாக இயற்கை!

இறைவனின் கொடையான இயற்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்களை நமதாக்கிக்கொண்டு நமது வாழ்வை வளப்படுத்திக் கொள்வோம்.
திருப்பாடல் 33-2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நீதிமான்களாய் நிலைத்திருப்போம்’ என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்களை நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொண்டோம்.  இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 9 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைவார்த்தையை இறையொலியில் வாசிக்கக் கேட்போம். ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார். அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது (வசனம் 6-9). இந்த மூன்று இறைவசனங்களிலும், கடவுள் இந்த உலகைப் படைத்ததுக் குறித்து மிக அழகாக எடுத்துரைக்கிறார் தாவீது அரசர். கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்; ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப்  போற்றுங்கள். விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்; வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள் (திபா 148:3,4) என்று இறைவனைப் போற்றிப்புகழ இயற்கையை அழைக்கின்றார். மேலும்,  19, 33, 34, 43, 59, 69, 92, 98, 102, 145, 150, ஆகிய வேறு சில திருப்பாடல்களிலும் இறைவனின் உயரிய படைப்பான இயற்கையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் தாவீது அரசர்.

கடவுள் உலகைப் படைத்ததுக் குறித்து தொடக்க நூலில் முதல் இரண்டு பிரிவுகளில் நாம் வாசிக்கின்றோம். மனிதரைப் படைக்குமுன் இவ்வுலகத்தைதான் முதலில் படைத்தார் கடவுள். திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள தானியேல் (இணைப்பு) நூலில்  அழகிய நிகழ்வொன்று வருகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்ததற்காக சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ ஆகிய  மூன்று இளைஞர்கள் தீச்சூளையில் எறியப்படுகிறார்கள். மன்னரால் இழைக்கப்பட்ட இம்மாபெரும் தீங்கிலிருந்து தங்களைக் காக்குமாறு, அம்மூவரும் கடவுளை நோக்கி இறைவேண்டல் செய்தபொழுது, அவர்கள் அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறார்கள். அப்பொழுது அவர்கள் தங்களைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி பாடல் இசைக்கின்றனர். அப்பாடலில் 35 முதல் 58 வரையுள்ள இறைவசனங்களில் கடவுள் படைத்த இந்த இயற்கையிலுள்ள ஒவ்வொன்றையும் இறைவனுக்கு நன்றி கூற அழைக்கின்றனர். வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி ஏத்திப் போற்றுங்கள். (தானி (இ)1:35), கதிரவனே, நிலவே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள். விண்மீன்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள். மழையே, பனியே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள் (வசனம் 39-41). இவ்வாறு அம்மூவரும், வானதூதர்களுடன் மனிதரையும், கடவுளின் படைப்புகளையும் ஒன்றிணைந்து இறைவனைப் புகழவும் நன்றி கூறவும் அழைக்கின்றனர்

புதிய ஏற்பாட்டில் நமதாண்டவர் இயேசு, தான் கூறிய பல உவமைகளில் இயற்கையை பெரும் உதாரணமாகக் காட்டியிருக்கின்றார். விதைப்பவர், கோதுமை மணிகள், வயலில் தோன்றிய களைகள், நானே உண்மையான திராட்சைச் செடி, ஆட்டுக் கொட்டில், கடுகுவிதை எனப் பல்வேறு உவமைகள் வழியாக இயேசு இறையாட்சியை அறிவிக்கின்றார். அதனை மக்களுக்கும் விளக்குகின்றார். மேலும், இயற்கையை முன்னிறுத்தி, அதிலிருந்து நாம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். “வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை” (மத் 6:26-10).

கடவுள் படைத்த இந்த இயற்கை மிகவும் அழகானது. மனிதர் அதனை உற்றுநோக்கும்போதெல்லாம் அவர்களுக்கு மிகப்பெரும் பிரமிப்பையும், ஆச்சரியங்களையும், அனுபவங்களையும் அள்ளித் தருகிறது. வாழ்க்கையில் மனிதருக்கு வருகின்ற மனக் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், துயரங்கள் ஆகியவற்றை சுமந்துகொண்டு பயணிக்கும் மனிதர், சில மணித்துளிகள் இறைவன் படைத்தளித்துள்ள இந்த இயற்கையைப் பார்க்கும்போது, அவைகள் எல்லாமே மாயமாய் மறைந்து விடுகின்றன. அந்தளவுக்கு இயற்கை மனிதரை மாற்றும் சக்தி படைத்தவையாக உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கை மனிதருக்கு உயர்ந்த வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றது. இவ்வுலகில் இயற்கையைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகளே இல்லை என்று கூறுமளவிற்கு இயற்கை வலிமை வாய்ந்ததொரு படைப்புப் பொருளாக அமைந்துள்ளது என்பதையும் நம் மனதில் நிறுத்துவோம். தமிழில் உள்ள விவேக சிந்தாமணி என்ற நூலில் பல பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு பாடலில் அதன் ஆசிரியர் இயற்கையில் காணப்படும் 13 காரியங்கள் புவியோர் போற்றும் இறைவனுக்கு இணையானது என்று பாடுகிறார். இதற்கான விளக்கத்தை ஆசிரியர் கூறாவிட்டாலும், இலக்கியச் சிந்தனையாளர்கள் பலர் இப்பாடலுக்கு விளக்கவுரை எழுதிவைத்துள்ளனர். “மயில் குயில் செங்கால் அன்னம் வண்டு கண்ணாடி பன்றி அயில் எயிற்று அரவு திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு உயரும் விண்கமலம் பன்மூன்று உறுகுணம் உடையோர் தம்மை இயலுறு புவியோர் போற்றும் ஈசன் என்று எண்ணலாமே! என்பதுதான் அப்பாடல்.

நல்லவரை ஏற்று பொல்லாதவர்களை ஒதுக்கும் குணம் கொண்டது மயில் என்றும், எப்போதும் இனிமையாகப் பேசவேண்டும் என்பதற்கு அடையாளமாக அமைவது குயில் என்றும், பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல வாழ்க்கையில் நல்லவற்றைப் பகுத்து ஏற்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்காக இடையறாது உழைக்கும் பண்பை வண்டாகிய தேனீ எடுத்துரைக்கிறது என்றும், தனக்கு முன்னுள்ள அனைத்தையும் கிரகிக்கும் தன்மைகொண்ட கண்ணாடியைப் போல நமது வாழ்வில் வரும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவை உண்ணும் பன்றி, மகுடத்தில் இரத்தினம் உடைய பெருமை கொண்ட பாம்பு, பலனை எதிர்பார்க்காமல் அனைவருக்கும் குளிர்ச்சியான ஒளிதரும் குணம்கொண்ட நிலவு, எல்லோருக்கும் சக்தியும் பாதுகாப்பும் கொடுக்கும் சூரியன், எங்கும் பரந்து விரிந்து, பிரம்மாண்டமான தோற்றம் தரும் கடல், தொடங்கிய காரியத்தை அடையும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்ற பண்பைக் கற்றுத்தரும் கொக்கு, எல்லாவற்றையும் தன்கீழ் வைத்திருக்கும் பெருமை கொண்ட வானம், பார்க்கப் பார்க்கத் தெவீட்டாத அழகு கொண்ட தாமரை ஆகிய மேற்கண்ட பதிமூன்றும் மக்கள் வணங்கும் கடவுளுக்கு சமமானவை என்கிறது விவேக சிந்தாமணி என்னும் நூல்.

நமது இலக்கியங்கள் கூறும் இதே கருத்தை நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞரும் பாடியிருக்கிறார்.  “புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்து இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள். வானம் பாடியின் பாட்டைக் கேளுங்கள். எல்லா முனிவர்களும் போதிக்கும் விடயங்களைவிடக் கூடுதலாக ஞானம் பெறுவீர்கள்” என்பது அவர் எழுதியுள்ள பாடல் தரும் செய்தியாகும். “And hark! how blithe the throstle sings! He, too, is no mean preacher: Come forth into the light of things, Let Nature be your teacher” “One impulse from a vernal wood May teach you more of man, Of moral evil and of good, Than all the sages can.” சிட்டுக் குருவியிடம் பாரதி பாடம் கற்றதாகக் கூட அவரது பாடலிலே நாம் வாசிக்கின்றோம்.

பொறுமைக்கு எடுத்துக்காட்டாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீனர்கள் மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால், செடி வளரவே வளராது. முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். ஆனால், அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் தொடங்கும். அதுவும் எப்படி? விறுவிறுவென அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது 80 அடிகள் உயரத்தை எட்டிப் பிடிக்கிறது. நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் இப்படியொரு வளர்ச்சியை எட்டுகிறது? ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு இரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில், நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால்தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும்போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை! அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை என்னும் குணம் கொண்டு வாழ நம்மைத் தூண்டுகிறது. ஆகவே, இறைவனின் கொடையான இயற்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்களை நமதாக்கிக்கொண்டு நமது வாழ்வை வளப்படுத்திக் கொள்வோம். இறைவனின் படைப்பான இயற்கையோடு சேர்ந்து, நாமும் அவரைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2022, 14:38