தேடுதல்

வன்முறை நிறைந்த சூழலில் ஹெய்ட்டியின் தலைநகர் Port-au-Princeல் நடந்து செல்லும் நபர் வன்முறை நிறைந்த சூழலில் ஹெய்ட்டியின் தலைநகர் Port-au-Princeல் நடந்து செல்லும் நபர்  

ஹெய்ட்டியில் நிலவிவரும் வன்முறை குறித்து ஆயர்கள் கவலை!

"வன்முறையால் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் மீதான நம்பிக்கையை ஹெய்ட்டி மக்கள் இழந்துவிட்டனர்": பேராயர் Mésidor

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஹெய்ட்டி நாட்டில், ஊழல், பாதுகாப்பின்மை, கடத்தல்கள், கடும் வறுமை மற்றும் மக்களிடையே அவநம்பிக்கை நிலவுவதாக, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் ஆயர்கள்.

ஜூலை 29,  வெள்ளியன்று, ஹெய்ட்டியின் ஆயர் பேரவையால் (CEH) வெளியிடப்பட்ட செய்தியில், நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கும்பல் வன்முறை குறித்து மீண்டும் எச்சரிக்கையை எழுப்பியுள்ளதுடன், இத்தகைய சீரழிவுகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களுக்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த இரண்டு வாரங்களில் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், குறிப்பாக, தலைநகர் Port-au-Princeல், ஜூலை 27 அன்று, கும்பல் மோதல்களின்போது ஏற்பட்ட தீவைப்புச் சம்பவங்களால் விண்ணேற்பு அன்னையின் பேராலயமானது, கடுமையாகச் சேதமடைந்தது என்றும்,  இவ்வன்முறை காரணமாக 471 பேர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும், ஆயர் பேரவையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் ஒருமுறை அரசின் அதிகாரத்தை மீட்டெடுக்கவும், வன்முறைக் கும்பல்களை ஒடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ள ஹெய்ட்டி ஆயர்கள், இதன் வழியாக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக காவல்துறை தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு, நம்பிக்கை மற்றும் அமைதியான சூழ்நிலையை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஹெய்ட்டி நாட்டிலுள்ள அனைத்து பங்குதாரர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பின்மைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும் அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 14:01