தேடுதல்

கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், பிரான்சிஸ் சேவியர் கிரேன்சாக் ஆகியோருடன் கர்தினால் போ கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், பிரான்சிஸ் சேவியர் கிரேன்சாக் ஆகியோருடன் கர்தினால் போ  

ஆசிய ஆயர்பேரவையின் பொன்விழாக் கொண்டாட்டம்

“நமது காலத்தின் புதிய சவால்களை எதிர்கொள்ள 'விரிவான மாற்றம், மற்றும் உறுதியான புதுப்பித்தல் அவசியமாகிறது” : கர்தினால் போ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகளாவிய திருஅவைக்கு ஆசியத் திருஅவை தனது பங்களிப்பை வழங்கியுள்ளதன் வழியாக, அது ஆசிய மக்களுக்குக் கிறிஸ்துவின் முகமாக இருந்துள்ளது என்று ஆசிய ஆயர்பேரவையின் பொன்விழாக் கொண்டாட்டம் குறித்த தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் யங்கூன் பேராயரும் ஆசிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் Charles Muang Bo.

"ஆசியாவின் மக்களாக ஒன்றிணைந்துப் பயணித்தல்" என்ற மையக்கருத்தில் இப்பொன்விழா, ஆசிய திருஅவைக்கு ஒரு துடிப்பான அடையாளத்தை வழங்கிய அருள் மற்றும் நன்றியுணர்வின் பயணம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால்  போ அவர்கள், ஆசிய ஆயர்பேரவையானது, படைப்பாற்றலுடன் ஆசியாவிலுள்ள கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் ஏழைகளுடன் மும்மடங்கு உரையாடலை வலுப்படுத்தியுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றில் ஆசிய நாடுகளின் கிறிஸ்தவம் முக்கியப் பங்காற்றுவதால், அந்நாடுகள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்துவரும் தேவஅழைத்தல் காரணமாக, தலத்திருஅவை உயிரோட்டமுள்ளதாக செயல்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில், ஆசிய கத்தோலிக்கத் திருஅவை, மோதல்கள், வறுமை, காலநிலை மாற்றம், பொருளாதார சரிவு ஆகியவற்றால் புதிய சவால்களை எதிர்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், ஆசியத் திருஅவைகள் எவ்வாறு அமைதியின் இறைவாக்கினர்களாக மாறமுடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால் போ அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், பொன்விழாவுக்கான மையக்கருத்து இன்றயைச் சூழலில் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறதென்றும், உடன்பிறந்த உணர்வு நிலையில், நற்செய்தியை அறிவிப்பதற்கான  மறைபரப்பு  ஆர்வத்தில் ஆசியத் திருஅவைகள் தங்களைப் புதிப்பித்துக்கொள்ளும் என்று தான் நம்பிக்கைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிய ஆயர்பேரவையானது 1970 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித ஆறாம் பவுல்  பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில்,  ஆசிய ஆயர்கள் முதன்முறையாக மணிலாவில் கூடியபோது நிறுவப்பட்டது.

2020-ஆம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதன் பொன்விழா கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தாய்லாந்தின் Baan Phu Waan-இல் உள்ள பாங்காக் மறைமாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இப்பொன்விழா நிகழ்வில் ஆசியாவில் இருந்து 140 க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2022, 13:46