புனித எடித் ஸ்டெய்ன், மனிதருக்கு கடவுளின் அன்பை வழங்கியவர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித எடித் ஸ்டெய்ன், உண்மையையும் அன்பையும் வெளிப்படுத்திய பெண் என்று, போலந்து நாட்டிலுள்ள Auschwitz நகரின் கார்மேல் இல்லத்தில், தான் வழங்கிய மறையுரை ஒன்றில் கூறியுள்ளார், ஒருங்கிணைத்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் மைக்கிள் செர்னி.
ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று, எடித் ஸ்டெய்ன் என்று அழைக்கப்படும் கார்மேல் சபையைச் சார்ந்த திருச்சிலுவையின் புனித தெரேசா பெனெடிக்டாவின் 80-ஆம் ஆண்டின் இறப்பைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் செர்னி.
இப்புனிதரின் வழியில், கடந்த காலத்தை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், நிகழ்காலத்தை நன்றாகப் புரிந்துகொண்டு, எதிர்காலத்தில் நம்மை அர்ப்பணிப்பதற்கும், கடவுளுடைய வார்த்தையும் அவர் காட்டும் பாதையும் நமக்குத் தேவைப்படுகின்றன என்று, 118-ஆம் திருப்பாடலை மேற்கோள்காட்டி விளக்கியுள்ளார் கர்தினால் செர்னி.
மனித குலத்திற்குக் கடவுளின் அன்பை வழங்கிய இப்புனிதரின் துறவு வாழ்வு பயணம், பெண், மெய்யியலாளர், கல்வியாளர், சிந்தனையாளர், துறவி எனப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் கர்தினால் செர்னி.
இவர், கடவுள் அனைத்தையும் கடந்தவர், எல்லா பகுத்தறிவுக்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும், அனைத்து மனிதச் செயல்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்ற பேருண்மையை ஒரு பெண்ணாகச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் செர்னி.
திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்களுக்கு, இப்புனிதை எழுதிய கடிதத்தில், அவர் தனது மௌனம் களைந்து அனைத்து யூத விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராகப் பேசுமாறு வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், இயேசுவின் வழியில் எப்படி அவர் உண்மைக்காகத் துணிச்சலாகப் போராடியுள்ளார் என்பதையும் விளக்கியுள்ளார்.
1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி Auschwitz வதைமுகாமில் நச்சுவாயு செலுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் எடித் ஸ்டெய்ன் என்றழைக்கப்படும் திருச்சிலுவையின் தெரேசா பெனெடிக்டா. ஆகஸ்ட் 9-ஆம் தேதி அவர் இறந்ததன் 80-ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்