இஸ்ரேலின் தாக்குதல் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான்
காசாவில் கடந்த வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராக, ஜிகாத் இஸ்லாமியக் குழு மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, மீண்டும் இஸ்ரேல் பதிலடி கொடுத்திருப்பது நம்பிக்கையின்மைச் சூழலை உருவாக்கியுள்ளது என்று, அருள்பணியாளர் ஒருவர் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.
எகிப்து இடைநிலை வகித்ததன் பயனாக, ஆகஸ்ட் 7 இஞ்ஞாயிறு முற்பகலிலிருந்து, இஸ்ரேலும், ஜிகாத் இஸ்லாமியக் குழுவும் இடைக்காலப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்துவரும்வேளை, காசாவிற்குச் செல்வதற்காக இஸ்ரேலின் அனுமதிக்காகக் காத்திருக்கும் அருள்பணி கபிரியேல் ரோமநெல்லி அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள், தூதரக அதிகாரிகள் போன்றோருக்கு அனுமதியளிக்கும் இஸ்ரேல் அரசு, காசாவில் உண்மையிலேயே மேய்ப்புப்பணியாற்றுவோருக்கு அனுமதியளிக்க காலத்தைக் கடத்துகிறது என, அர்ஜென்டீனா மறைப்பணியாளரான அருள்பணி கபிரியேல் அவர்கள் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே உண்மையான அமைதியைக் கொணர்வதற்கு, அரசியல் ரீதியாக ஆர்வம் கிடையாது என்றுரைத்துள்ள அவர், வன்முறைக்கும், கலவரங்களுக்கும் மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர், ஆயினும் 2021ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து அப்பகுதியின் சூழல் அமைதியாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஜிகாத் இஸ்லாமியக் குழுவுக்கும் இடையே கடந்த வாரத்தில் 56 மணி நேரம் இடம்பெற்ற கடும் தாக்குதல்களில் 15 சிறார் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்