தேடுதல்

திருத்தந்தை நான்காம் யூஜின் திருத்தந்தை நான்காம் யூஜின் 

திருத்தந்தையர் வரலாறு: திருத்தந்தை நான்காம் யூஜின்

திருத்தந்தையான பின்னரும், தன் துறவு இல்ல வாழ்வைத் தொடர்ந்து, இறைபக்திக்கான எடுத்துக்காட்டாக விளங்கினார், திருத்தந்தை நான்காம் யூஜின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 5ம் Martinக்குப்பின் திருத்தந்தையாக திருஅவையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 1388ஆம் ஆண்டு, இத்தாலியின் வெனிசில் பிறந்த திருத்தந்தை 4ம் யூஜின். இவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, திருத்தந்தை 12ம் கிரகரியின் மருமகனும் ஆவார். உயரமானவராக, ஒல்லியாக, மிக அழகான தோற்றம் கொண்டிருந்தார் இத்திருத்தந்தை. மிகப் பணக்காரராக, செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்திருந்தும், இளவயதிலேயே தன் சொத்துக்களுள் பெரும் பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு அகுஸ்தினார் துறவு மடத்தில் இணைந்தார் திருத்தந்தை 4ம் யூஜின். 

24ம் வயதில் இவர் இத்தாலியின் சியன்னா ஆயராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்குள்ள மக்களோ, தங்கள் எல்லைக்கு வெளியேயுள்ள வெனிஸ் பகுதியிலிருந்து ஒருவர் ஆயராக நியமிக்கப்படுவதை ஏற்கவில்லை. ஆகவே, மக்களின் விருப்பத்தை ஏற்று உடனே தன் ஆயர் பதவியைத் துறந்தார், Gabriello Condulmaro என்ற இயற்பெயர் கொண்ட இவர். சிறிது காலத்தில் கர்தினாலாகவும் இவர் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை 5ம் Martin இறந்தபின் கூடிய கர்தினால்கள் அவை இவரை திருத்தந்தையாக 1431ஆம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தேர்ந்தெடுத்து மார்ச் 11ம் தேதி திருஅவைத் தலைவராக முடிசூட்டியது. இவர் திருத்தந்தையான பின்னரும், தன் துறவு இல்ல வாழ்வைத் தொடர்ந்து, இறைபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். ஆனால், சில குடும்பங்கள் மட்டும் திருஅவைக்குள் தனிப்பட்ட விதத்தில் கவனிக்கப்பட்டு, பாரபட்சமாக நடத்தப்பட்டது இவருக்கு இயைந்ததாக இல்லை. குறிப்பாக முந்தைய திருத்தந்தையின் Colonna குடும்பம் திருஅவைக்குள் அதிகாரத்தை தக்கவைத்திருப்பதை எதிர்த்தார். இந்த பிரச்சனை பிளாரன்ஸ், வெனிஸ் மற்றும் நேப்பிள்ஸ் ஆட்சியாளர்களின் உதவியுடன் சுமுகமான முடிவுக்கு வந்தது. ஆனால் பிறிதொரு பிரச்சனையை அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

பல்வேறு எதிர்ப்புகளை திருஅவை எதிர்நோக்கியிருந்த காலக்கட்டத்தில் பதவிக்கு வந்து, தானும் பல எதிர்ப்புக்களைச் சந்தித்த திருத்தந்தை 4ம் யூஜின், 1431ஆம் ஆண்டில் Basle பொதுச்சங்கத்தைக் கூட்டினார். ஆனால், திருஅவைத் தந்தையர்கள் அதிகம் வராததாலும், அப்பொதுச்சங்கத்தில் நிலவிவந்த சூழல் சரியில்லாததாலும், அப்பொதுச்சங்கம் தொடங்கிய ஐந்து மாதங்களிலேயே அதைக் கலைத்துவிட்டு, 18 மாதங்களுக்குப்பின் இத்தாலியின் பொலோஞ்ஞா நகரில் அது மீண்டும் கூட்டப்படும் என்றார் திருத்தந்தை 4ம் யூஜின். பொதுச்சங்கம் தவறான பாதையில் சென்றுவிடக்கூடாதே என்ற  நல்லெண்ணத்திலேயே இம்முடிவை எடுத்தார் திருத்தந்தை 4ம் யூஜின். ஆனால், அங்கு கூடியிருந்த ஆயர்களோ, திருத்தந்தையின் கட்டளைகளுக்குப் பணிய மறுத்து, தாங்கள் விவாதங்களைத் தொடர்வதாக, பொதுமக்களுக்கு தனியாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டனர். இவர்களுக்கு அரசுகளின் ஆதரவும் இருந்தது. இங்குதான் பெரும் பிரச்சனை எதிர்நோக்கப்பட்டது.

திருத்தந்தையைவிட பொதுச்சங்கத்திற்கே அதிக அதிகாரம் உள்ளது என்பது அங்கு கூடியிருந்த ஆயர்களால் வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, திருத்தந்தை 4ம் யூஜினும் அவர் ஆதரவு கர்தினால்களும் மூன்று மாதங்களுக்குள் பொதுச்சங்கத்தின் முன்னர் வரவேண்டும், இல்லையெனில் தண்டிக்கப்படுவர் என்ற எச்சரிக்கையையும் விடுத்தனர் அவர்கள். Basle பொதுச்சங்கத்தைக் கலைப்பதாக தான் அறிவித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் திருத்தந்தை நான்காம் யூஜின். ஆனால் இந்த அறிவிப்பிற்கு அடுத்த ஆண்டே, அதாவது 1434ஆம் ஆண்டு மே மாதம் திருத்தந்தைக்கு எதிரான புரட்சி உரோமையில் இடம்பெற்றது. துறவியின் உடையுடன் உரோம் நகரைவிட்டு வெளியேறிய திருத்தந்தை, கல் வீசி தாக்கப்பட்டார். அங்கிருந்து டைபர் நதி வழியாகத் தப்பி உரோம் நகரில் கடற்கரை ஊரான ஓஸ்தியா சென்றார் திருத்தந்தை 4ம் யூஜின். பின் அங்கிருந்து பிளாரன்ஸ் மக்களின் உதவியுடன் அந்நகர் சென்ற திருத்தந்தை, Santa Maria Novella என்ற தொமினிக்கன் துறவு இல்லத்தில் தங்கினார். Recanatiயின் ஆயர் Vitelleschi என்பவரை, திருப்பீடத்திற்குச் சொந்தமான இடங்களில் ஒழுங்கமைதியைக் கொண்டுவர அனுப்பிவைத்தார். இதற்கிடையில் Basle பொதுச்சங்கம் திருத்தந்தையின் நடவடிக்கைகளை முற்றிலுமாக எதிர்த்தது. ஆனால் கிரேக்கத் திருஅவையை தலைமைப்பீடத்தோடு ஒன்றிணைப்பது குறித்ததில் இருதரப்பினருக்கும் ஒத்த கருத்து இருந்தது. இருப்பினும் எந்த இடத்தில் நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  பிரான்சில் இடம்பெறவேண்டும் என Basle பொதுச்சங்கம் விருப்பத்தை வெளியிட, திருத்தந்தையோ இத்தாலியின் ஃபெராரா நகரை அறிவித்தார். Basleல் கூடியிருந்த ஆயர்களோ, திருத்தந்தையை பதவி நீக்க உள்ளதாக அறிவித்தனர். ஆனால் இதற்கிடையில் Basle பொதுச்சங்கத்திலிருந்து இரு முக்கிய கர்தினால்கள் Cesariniயும் Cusaவும் வெளியேறி, கர்தினால் Albergati என்பவர் தலைமையில் திருத்தந்தை யூஜின் அவர்கள் 1438ஆம் ஆண்டு சனவரி 8ம் தேதி தொடங்கிய Ferrara கூட்டத்தில் கலந்துகொண்டனர். கிரேக்கத் திருஅவையுடன் ஆன இக்கலந்துரையாடல் கூட்டம் ஓராண்டிற்கு நீடித்தது. இறுதியில் 1439ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி இருதரப்பினரிடையே அறிக்கை கையெழுத்திடப்பட்டு, ஒரளவு ஒன்றிப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1439ஆம் ஆண்டு நவம்பரில் அர்மீனியர்களுடனும், 1443ஆம் ஆண்டில் ஜேக்கோபைட்ஸ் வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுடனும், 1445ஆம் ஆண்டில் நெஸ்டோரியன்ஸ்களுடனும் ஒன்றிப்பு ஏற்பட்டது. இத்தகைய வெற்றிகள் ஒருபுறம் இடம்பெற்றாலும், Basleலில் கூடியிருந்த ஆயர்கள் திருத்தந்தையை பதவி நீக்குவதாக அறிவித்து, எதிர்திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்துகொண்டனர். அவரும் ஐந்தாம் Felix என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இதற்கிடையில், திருத்தந்தை 4ம் யூஜின் 1443ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உரோம் நகர் திரும்பினார். எந்த மக்கள் இவரை விரட்டினார்களோ, அந்த மக்களிடையே வெற்றி வீரராக திரும்பினார். ஏனெனில், இவரின் முயற்சியின் பேரில்தான் திருஅவைப் பிளவுகள் அகற்றப்பட்டு, ஒன்றிப்புப் பிறந்தது. அதுமட்டுமல்ல, திருஅவையின் 207வது திருத்தந்தையான நான்காம் யூஜின் காலத்தில் உருவான எதிர்திருத்தந்தை ஐந்தாம் Felixக்குப்பின்  திருஅவையில் இன்றுவரை எதிர்திருத்தந்தை என்ற சொல்லே இல்லை.

திருஅவை படிப்பினைகளை நேர்மையாகப் பின்பற்றி, பல சீர்திருத்தங்களை திருஅவைக்குள் கொணர்ந்து, உரோம் நகரின் சீரமைப்பிற்குச் சிறப்புச் சேவையாற்றிய திருத்தந்தை நான்காம் யூஜின், 1447ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2022, 13:48