தேடுதல்

நைஜீரியாவில் பாதுகாப்புப் பணியில் இராணுவம் நைஜீரியாவில் பாதுகாப்புப் பணியில் இராணுவம் 

நைஜீரியாவில் நான்கு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளனர்

நைஜீரியாவில், அண்மை மாதங்களில், கொள்ளைக் கும்பல்கள், மற்றும் ஆயுதம் ஏந்திய மனிதர்களால், பிணையல்தொகை கேட்டு, கடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்கிழக்கேயுள்ள Imo மாநிலத்தில் கடத்தப்பட்டுள்ள, இயேசு மீட்பர்  அருள்சகோதரிகள் சபையின் நான்கு அருள்சகோதரிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விரைவில் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு அனைவரும் கடவுளை மன்றாடுமாறு, அச்சபையின் தலைமையகம் விண்ணப்பம் விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 21, இஞ்ஞாயிறு காலையில் தங்கள் சபையின் அருள்சகோதரி ஒருவருக்காக நிறைவேற்றப்படவிருந்த நன்றித் திருப்பலியில் பங்குகொள்வதற்காகச் சென்ற இச்சகோதரிகள், Okigwe-Umulolo பகுதியில் கடத்தப்பட்டுள்ளனர்.

Johannes Nwodo, Christabel Echemazu, Liberata Mbamalu, Benita Agu ஆகிய நான்கு அருள்சகோதரிகளும் திருப்பலிக்குச் சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளது குறித்த அறிக்கையை மிகுந்த கவலையோடு வெளியிட்டுள்ள அச்சபையின் பொதுச்செயலர் அருள்சகோதரி Zita Ihedoro அவர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் என அனைவரும் அச்சகோதரிகளின் பாதுகாப்பான விடுதலைக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இச்சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளது குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள Minna துணை ஆயர் Luka Sylvester Gopep அவர்கள், எங்களது அன்புக்குரிய நாட்டின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும், நல்லதோர் எதிர்காலம் கிடைக்கும் என்று, கடவுள் மீது நம்பிக்கை வைத்து மன்றாடி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். 

இச்சகோதரிகளைக் கடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நைஜீரியாவில், அண்மை மாதங்களில், கொள்ளைக் கும்பல்கள், மற்றும் ஆயுதம் ஏந்திய மனிதர்களால், பிணையல்தொகை கேட்டு, கடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பல்வேறு கிறிஸ்தவச் சபைகளைச் சார்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கடத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரத்தில் அந்நாட்டில், Okigweவுக்கும், Umunneochiவுக்கும் இடையேயுள்ள சாலையில் ஒரு கத்தோலிக்க அருள்பணியாளரும், அருள்பணித்துவ பயிற்சி மாணவர் ஒருவரும் கடத்தப்பட்டு, இரு நாள்கள் சென்று விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

1985ஆம் ஆண்டில், தெற்கு நைஜீரியாவில் Rivers மாநிலத்தில் Port Harcour மறைமாவட்டத்தில், இயேசு மீட்பர் அருள்சகோதரிகள் சபை (SJS) தொடங்கப்பட்டது. இச்சபையினர், நோயாளிகள், துன்புறுவோர், குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், வறியோர், வயதுமுதிர்ந்தோர், கைவிடப்பட்டோர் போன்றோரைப் பராமரித்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 15:51