தேடுதல்

கர்தினால் சாக்கோ கர்தினால் சாக்கோ  

ஈராக்கில் நிலவும் “அரசியல் சுனாமி” குறித்து தலத்திருஅவை எச்சரிக்

ஈராக்கின் அரசியலில் இடம்பெறும் பிரிவினைவாத அணுகுமுறை, அநீதி மற்றும், ஊழல்களையே உற்பத்திசெய்யும் – கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக்கின் அரசியலில் நிலவும் பெரும் பிரச்சனைகள், ஏறத்தாழ பத்து மாதங்களாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதற்குத் தடைகளாக உள்ளன, அதேநேரம், தலைநகர் பாக்தாத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

“அரசியல் சுனாமி” என்ற பேராபத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ள, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக்கில் பதவி விலகும் பிரதமர் Mustafa al-Kadhimi மற்றும் ஏனையத் தலைவர்களோடு இணைந்து, தேசிய உரையாடல் ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஈராக்கில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற தேர்தலில், சக்திமிக்க Shiite இஸ்லாம் மதப் பிரிவின் குரு Muqtada al-Sadr அவர்களால் வழிநடத்தப்படும் ஷியைட் Sadrist இயக்கம் வெற்றிபெற்றது.

அத்தேர்தலுக்குப்பின் புதிய அரசு அமைப்பதில் உருவாகியுள்ள பிரச்சனைகளால், நாட்டில் அதிகரித்துவரும் பதட்டநிலைகள், குடிமக்கள் அனைவருக்கும் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதையும் கர்தினால் சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளும் தேசிய அளவில் ஓர் உரையாடலை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், நாட்டை பேராபத்து ஒன்று அடித்துச் செல்வதற்குமுன், அரசியல் மற்றும், மதத் தலைவர்கள், நாட்டின் தற்போதைய சூழலுக்குத் தீர்வுகாணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈராக்கில் நிலவும் பிரிவினைவாத அணுகுமுறை, அநீதி மற்றும், ஊழல்களையே உற்பத்திசெய்யும் என்பதால், நாட்டைப் பாதுகாக்க, புதிய அணுகுமுறைகளும், புதிய வழிகளும் காணப்படுமாறும் கர்தினால் சாக்கோ அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2022, 14:23