தேடுதல்

பேராயர் Paolo Pezzi பேராயர் Paolo Pezzi  

இரஷ்ய கத்தோலிக்கர் திருத்தந்தையின்மீது அன்பு கொண்டுள்ளனர்

“திருத்தந்தையின் கஜகஸ்தான் திருத்தூதுப் பயணம் இரஷ்ய கத்தோலிக்கருக்கு மிகவும் முக்கியமானது”: பேராயர் Paolo Pezzi

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கஜகஸ்தானுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அவரது பெயரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புத் திருப்பயணமானது, திருத்தந்தையின் மீதான இரஷ்ய கத்தோலிக்கரின் அன்பையும் பிரமாணிக்கத்தையும் வெளிக்காட்டுவதாக அமையும், என்று மாஸ்கோவின் பேராயர் Paolo Pezzi அவர்கள் கூறியுள்ளார்.

வரும் செப்டம்பர் 13 முதல் 15 வரை நடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கஜகஸ்தானுக்கான திருத்தூதுப் பயணத்தின்போது, ​​மாஸ்கோவிலுள்ள இறைவனின் அன்னை உயர்மறைமாவட்டம் ஒரு சிறப்பு திருப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ள நிலையில் பேராயர் Paolo Pezzi இவ்வாறு கூறியுள்ளார்.

வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், இந்தத் திருப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று கூறியுள்ள பேராயர் Pezzi  அவர்கள்,  இரஷ்ய கத்தோலிக்கர் திருத்தந்தைமீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதால், அவருக்குத் தங்களின் அன்பையும் பிரமாணிக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு இந்தத் திருப்பயணம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

“இரஷ்ய கத்தோலிக்கருக்குத் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் மிகவும் முக்கியமானது. காரணம், அவர் எப்போது எங்களைச் சந்திக்க வருவார்  என்பது எங்களுக்குத் தெரியாது என்பதாலும், கஜகஸ்தான் எங்களுக்கு மிக நெருக்கமான நாடு என்பதாலும், இத்திருப்பயணம் எங்களுக்கு அரியதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Pezzi .

'நாங்கள் ஒற்றுமையின் சாட்சிகள்' என்ற விருதுவாக்குடன், இரஷ்யத் தலைநகரில் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் இப்புனித திருப்பயணம் சைபீரிய நகரமான ஓம்ஸ்கிலை அடைந்து, செப்டம்பர் 13-ஆம் தேதியன்று, கஜகஸ்தானில் உள்ள கரகண்டாவுக்குச் செல்லும் என்றும், அதற்கு அடுத்த நாள் அதாவது, செப்டம்பர் 14-ஆம் தேதி நூர்-சுல்தானுக்குச் சென்று திருத்தந்தையின் திருப்பலியில் பங்குபெறும் என்றும் இவ்வுயர் மாறைமாவட்டத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2022, 13:58