கனடாவில் திருத்தந்தை வழங்கிய செய்தி ஆசியாவுக்கும் பொருந்தும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கனடாவின் பூர்வீக இனக் குழுக்களுக்கு திருத்தந்தை அளித்த செய்தி, இந்தியாவின் தலித், சிறுபான்மையினர், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் போன்றோருக்கும் பொருந்தும் என Guwahati முன்னாள் பேராயர் Thomas Menamparampil தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ மதத்துடன் மிக நீண்ட வரலாற்றையும் பிணைப்பையும் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஆசியச் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் Menamparampil அவர்கள், உடல் நலமற்ற நிலையிலும் தவத்திருப்பயணம் மேற்கொண்டு கனடாவின் பூர்வீக இனங்களின் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக திருத்தந்தை மன்னிப்பு கேட்ட நிகழ்வு மனதை உருக்குவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மனித வரலாற்றில் அமெரிக்காவின் பூர்வீக இனங்களின் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், மிகவும் வருத்தத்துக்கும் வெட்கத்துக்கும் உரியன எனக் கருதி திருத்தந்தை மன்னிப்பு கேட்ட நிகழ்வு, நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது எனவும் கூறியுள்ளார் பேராயர் Menamparampil
துன்புற்று தேவையில் இருக்கும் தனி நபர், மற்றும் இனக் குழுக்களுக்கு நமது வாழ்நாள்களில் உதவிசெய்யாமல் உணர்வற்றவர்களாய் நாம் செயல்பட்ட தருணங்களுக்காக திருத்தந்தை நம் அனைவரின் சார்பாக மன்னிப்பு கேட்டிருப்பது, மனதை நெகிழ வைத்துள்ளது என்றும் பேராயர் Menamparampil அவர்கள் கூறியுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் புதிய வடிவிலான இன ஒழிப்பு, உணர்வற்றதன்மை,
போன்றவை, காலனித்துவத்தின் பெயரில் அல்லாமல், பொருளாதார வெற்றி, மற்றும், வர்த்தகப் போர்களின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பது குறித்து நாம் தினமும் தலைகுனிய வேண்டும் என்றும், பேராயர் Menamparampil தெரிவித்துள்ளார்.
குடும்பத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நமக்கு கற்றுத்தருபவர்கள் பூர்வீக இனக்குழுக்கள் என திருத்தந்தை சொல்வதுபோல, சமத்துவம் உண்மைத்தன்மை, இயற்கையோடு இணக்கம், குடும்ப ஒற்றுமை, மகிழ்வு, மற்றும் திறந்த மனம் கொண்டு வாழும் பூர்வீக இனக்குழுக்கள், அதிகப்படியான நுகர்வோரினால் துன்புறும் பூமித்தாயின் குரலுக்கு செவிமடுப்பவர்களாகவும் இருக்கின்றனர் எனவும் பேராயர் Menamparampil அறிவித்தார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்