லெபனோனின் மறுபிறப்பின்மீது நம்பிக்கை வைக்க அழைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
லெபனோன் நாட்டு பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஈராண்டுகளுக்குமுன்னர் இடம்பெற்ற பயங்கரமான வெடிவிபத்து குறித்து, பன்னாட்டு அளவில் விசாரணை ஒன்று நடத்தப்படுமாறு, அந்நாட்டு முதுபெரும்தந்தை கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கொடூர வெடிவிபத்து இடம்பெற்றதன் இரண்டாம் ஆண்டையொட்டி, ஆகஸ்ட் 4, இவ்வியாழனன்று, பெய்ரூட் நகரின் புனித ஜார்ஜ் பேராலயத்தில், அதில் இறந்தவர்களின் நினைவாகத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் ராய் அவர்கள், லெபனோன் மக்கள், பெய்ரூட், மற்றும், அந்நாட்டின் உயிர்ப்பின்மீது நம்பிக்கை வைக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இவ்வாறு நம்பிக்கை வைப்பதன் வழியாக, லெபனோன் நாடு, உலகின் கிழக்குப் பகுதிக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், மதங்களுக்கு இடையே சந்திப்பும், உரையாடலும் இடம்பெறும் தாயகமாகவும் மீண்டும் மாறும் என்று கூறியுள்ளார், கர்தினால் ராய்.
லெபனோனின் அண்மை வரலாற்றில் திறந்த காயம்போன்று அமைந்திருக்கின்ற இப்பயங்கரமான நிகழ்வை, நாட்டு மக்கள் எப்போதும் நினைவை வைத்திருக்குமாறு அழைப்புவிடுத்துள்ள கர்தினால் ராய் அவர்கள், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடி விபத்தை புதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்தில், 221 பேர் இறந்தனர், ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர், மற்றும் பலர் நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளாக ஆகியுள்ளனர் என்பதையும் கர்தினால் ராய் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்