தேடுதல்

மான்டலே பேராயர் மாற்கோ தின் வின் மான்டலே பேராயர் மாற்கோ தின் வின் 

பேராயர் தின் வின்: எல்லாச் சூழல்களிலும் மக்களோடு இருக்கின்றோம்

கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஐந்து கத்தோலிக்க பங்குத்தளங்களில் ஐந்து மையங்களை அமைத்துள்ளோம் - பேராயர் தின் வின்

மேரி தெரேசா: வத்திக்கான்

2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றபோது சில குறிப்பிட்ட பகுதிகளில் வெடித்த வன்முறை, ஒன்றரை ஆண்டுகள் ஆகியபின்பும் முடிவுறுவதாகத் தெரியவில்லை என்று, அந்நாட்டு மான்டலே பேராயர் மாற்கோ தின் வின் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கவலையோடு தெரிவித்துள்ளார்.

இச்சூழலிலும் கத்தோலிக்கராகிய நாங்கள், ஆண்டவராம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து, நம்பிக்கை இழக்காமலிருக்க மக்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் என அனைவரும், கடவுள் மட்டுமே அளிக்கும் சக்தியோடு, எல்லாச் சூழல்களிலும் எப்போதும் மக்களோடு இருக்கின்றோம் என்றும்  கூறியுள்ளார் பேராயர் தின் வின்.  

மியான்மார் இராணுவம், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்திவரும்வேளை, இம்மாதம் 16ம் தேதி மான்டலே உயர்மறைமாவட்டத்தின் Sagaing நகரத்தில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 சிறார் இறந்ததையடுத்து, செப்டம்பர் 23, இவ்வெள்ளியன்று பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார், பேராயர் தின் வின்.

ஒருபுறம் இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்திவரும்வேளை, மறுபுறம், பொதுமக்களின் வலுவான எதிர்ப்பும் மக்களின் பாதுகாப்புப் படைகளின் வழியாகத் தெரிவிக்கப்படுகின்றது என்றுரைத்துள்ள பேராயர் தின் வின் அவர்கள், மான்டலே உயர்மறைமாவட்டத்தின் பாதிப் பகுதி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் என நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஐந்து கத்தோலிக்க பங்குத்தளங்களில் ஐந்து மையங்களை அமைத்துள்ளோம் என்றும், மக்களின் துயரங்களைப் போக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றோம் என்றும், பேராயர் தின் வின் அவர்கள் தெரிவித்துள்ளார். (Fides)

இதற்கிடையே, மியான்மாரின் தேசிய சனநாயக கட்சியின் (NLD) நாடாளுமன்ற உறுப்பினரான Myo Kyaw என்பவர், Myitkyinaல் ஆகஸ்ட் 24ம் தேதி கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் இராணுவத்தின் விசாரணையின்போது இடம்பெற்ற சித்ரவதையில் இறந்துள்ளார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என செய்திகள் கூறுகின்றன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2022, 11:23