திருத்தூதுப் பயணத்திற்குப்பின் நிறைய மனங்கள் மாறியுள்ளன
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கஜகஸ்தான் குடியரசுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப்பின் ஏராளமான மக்களின் மனங்களில் மாற்றத்தைக் காணமுடிகின்றது என்று, மத்திய ஆசிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Josè Luis Mumbiela Sierra அவர்கள் கூறியுள்ளார்.
கஜகஸ்தான் திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அக்குடியரசின் மிகப்பெரிய நகரமான Almatyன் மூவொரு கடவுள் மறைமாவட்ட ஆயர் Mumbiela Sierra அவர்கள், இத்திருத்தூதுப் பயணம், எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, கஜகஸ்தானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்ட இத்திருத்தூதுப் பயணம், பல்சமய உரையாடலுக்கு கூடுதலாக உந்துதல் கொடுத்த ஒன்று என்றும், பலர் தங்களின் மதநம்பிக்கையில் உறுதியடைந்துள்ளனர் என்றும் ஆயர் Mumbiela Sierra அவர்கள் கூறியுள்ளார்.
உலகின் பெரிய மற்றும் பாரம்பரிய மதங்களின் ஏழாவது மாநாட்டில் பல்சமயத் தலைவர்களுக்கு, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு குறித்து திருத்தந்தை பேசிய சொற்களை, தலத்திருஅவையும், சமுதாயமும் தொடர்ந்து சிந்தித்து வருகின்றன என்றுரைத்த ஆயர் Mumbiela Sierra அவர்கள், இத்திருத்தூதுப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் அரசியல் சூழல், கஜகஸ்தானின் வருங்காலம், உக்ரைன் போர் என, பல்வேறு அரசியல் மற்றும், சமூக நிலைகள் குறித்து திருத்தந்தை வழங்கிய செய்தி ஊக்கமூட்டுபவையாகவும், சான்றுபகர்வதாகவும், முக்கியமாக பல்சமய உரையாடலுக்கு அவ்வாறு இருந்தது எனவும் ஆயர் Mumbiela Sierra அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் உரைகளை, கிறிஸ்தவமல்லாதவர்கள் மிகுந்த மகிழ்வோடு ஏற்றனர் என்றும், திறந்த மனதோடு இடம்பெறும் பல்சமய உரையாடல் குறித்து அவர் மிகச்சிறந்த பாடத்தை வழங்கினார் என்றும், இவ்வுரைகள் குறித்து முஸ்லிம்கள் தங்களின் கத்தோலிக்க நண்பர்களுக்கு எழுதியுள்ளவை சான்றுகளாக உள்ளன என்றும், ஆயர் Mumbiela Sierra அவர்கள் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்