இந்தியத் துறவியர் ஒடுக்கப்படுவோருக்கு அருகிலிருக்க...
மேரி தெரேசா: வத்திக்கான்
சடங்குமுறைகளால் அடிக்கடி உருவமிழந்துள்ள திருஅவையில், இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாயிருந்து இறைவாக்கினர்களாகச் செயல்படவேண்டும் என்று, இந்திய கத்தோலிக்கத் துறவியரின், தேசிய நீதி மற்றும் அமைதி அவை நடத்திய கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், கத்தோலிக்கத் துறவியரின் தேசிய நீதி மற்றும் அமைதி அவை செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று நிறைவுசெய்த நான்கு நாள் தேசிய கருத்தரங்கில் 16 மாநிலங்களிலிருந்து 20 துறவு சபைகளின் இருபால் துறவியர் 63 பேர் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள, இந்திய துறவியர் தேசிய அவையின் தலைவர் அருள்சகோதரி Nirmalini அவர்கள், துறவியர் தங்களின் தனித்துவத்தை ஆழப்படுத்தி, காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப வாழ அழைக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
அர்ப்பண வாழ்வு வாழ்வோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுபோல, இறைவாக்கினராகச் சான்று வாழ்வு வாழ்ந்து உலகை விழித்தெழச்செய்யவேண்டும் என்றும் அச்சகோதரி தெரிவித்துள்ளார்.
இக்கருத்தரங்கு குறித்து விளக்கிய, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் Meera Sanghamitra அவர்கள், இந்திய சமுதாயத்தை அதிகமாகப் பாதிக்கின்ற விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்து, இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவும், செல்வரும், அதிகாரத்தில் இருப்போரும் ஏழைகளை உறிஞ்சி இலாபம் ஈட்டுகின்றனர் என்றும் கவலை தெரிவித்தார்.
கேரளாவில் மீனவர் எதிர்கொள்ளும் துயரங்கள், இயேசு சபை அருள்பணி ஸ்டேன் சுவாமி எதிர்கொண்ட அநீதி போன்றவைகளையும் மீரா அவர்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்