பொதுக் காலம் 26ம் ஞாயிறு : ஏழையரை ஒடுக்கும் செல்வர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. ஆமோஸ் 6: 1, 3-7 II. 1 திமோ 6: 11-16 III. லூக் 16: 19-31)
இன்று நாம் பொதுக்காலத்தின் 26ம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் செல்வச்செழிப்பில் திளைத்து, சுயநலத்தில் உண்டு கொழுக்கும் தன்னுணர்வு அற்ற நிலையிலிருந்து விடுபட நம்மை அழைக்கின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது தியானச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம்.
“சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்; ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள். கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்; உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்; அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.”
முன்பொரு காலத்தில் பேராசை பிடித்த மன்னன் ஒருவன் அக்கம் பக்கமுள்ள, சிறிய நாடுகள் மீது படையெடுத்து, தன் வசமாக்கினான். அவர்கள், அரண்மனையின் கருவூலங்களில் இருந்த வைரம், வைடூரியம், நவரத்தினம், போன்ற, செல்வங்களை கொள்ளையடித்தான். தன் நாட்டு மக்களுக்கு அதிக வரி விதித்துடன் அவர்தம் சொத்துக்களையும் சூறையாடினான். ஆனாலும் அவனது பேராசை அடங்கவில்லை. மேலும் மேலும் சொத்துக்களை குவிப்பதிலேயே குறியாக இருந்தான். எப்போதும் உண்டு குடித்து இன்பத்தில் திளைத்திருந்தான். நாட்டு மக்களின் துயரங்களை மிகவும், அலட்சியம் செய்தான். அவன் ஆட்சியில், மக்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை, இதனால் மன்னன் மீது மக்கள் கோபம் கொண்ட போதும், அவனை எதிர்த்துப் போராடத் துணியவில்லை. காரணம், அவ்வாறு செய்தால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அஞ்சினர். ஒரு நாள் தெய்வீக சக்தி பெற்ற குரு ஒருவர் அந்நாட்டிற்கு வந்தார். மக்கள் அவரை வரவேற்று மன்னனது பேராசையையும், அதனால் தாங்கள் அனுபவித்து வரும் கொடுந்துயரங்களையும் எடுத்துக் கூறி, கண்ணீர் வடித்தனர். மேலும், இக்கொடுங்கோலனின் பிடியிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென கெஞ்சினர். அதற்கு அவர், "கவலையை விடுங்கள் நீங்கள் படும் துன்ப துயரங்களிலிருந்து, உங்களை விடுவிக்கின்றேன்" என்று உறுதி கூறிவிட்டு, மன்னனை காணச் சென்றார்.
மாபெரும் குரு ஒருவர் தன்னைக் காண வந்திருப்பதை அறிந்த மன்னன், ஓடோடிச் சென்று அவரை வரவேற்றான். அரண்மனையில் சில நாள்கள் அந்தக் குரு தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான். "மன்னா... நான் ஒரு துறவி எனக்கு ஏன் இந்த ஆடம்பர ஏற்பாடுகள். நான் தங்குவதற்குச் சாதாரணக் குடிலும், எளிய உணவும் போதும்" என்றார் குரு. "மகா குருவே, நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது உங்களுக்குச் செலவழிப்பதால் நான் ஒன்றும் குறைந்து போக மாட்டேன். பல நாடுகள் என் வசம் உள்ளன. என் கருவூலம் நிரம்பி வழிகின்றது, குபேரனே எனக்கு அடிமை" என்று இறுமாப்போடு கூறினான். அதற்கு குரு, "மன்னா, கடவுளின் செயல்களுக்கு முன் பொன்னும், பொருளும், பதவியும் ஒன்றுமில்லை. உன் ஆயுள், இன்னும் இரண்டு நாள்களில் முடியப் போகிறது. கடவுள் உன் உயிரை எடுக்கப் போகிறார், இந்தச் செய்தியை உன்னிடம் கூறவே கடவுள் என்னை உன்னிடம் அனுப்பினார்” என்றார். அதைக் கேட்டதும், தலைசுற்றி மயங்கி விழுந்தான் மன்னன். உடனே மருத்துவர்கள் முதலுதவி செய்து நினைவு திரும்பச் செய்தனர். கண் விழித்த மன்னன், "சுவாமி, நான் குவித்து வைத்திருக்கும் செல்வத்தை விட்டுச் செல்வதா? முடியவே முடியாது. நான் நீண்டகாலம் வாழ விரும்புகிறேன். நீங்கள் தான் என்னை இந்தக் கண்டத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்" என்று, அவரது பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். அவனது நிலை கண்ட குரு, “நீ உயிர் பிழைக்க வேண்டுமா அல்லது உனக்கு உதவாமல் அழியப்போகின்ற இந்தச் செல்வம் வேண்டுமா... முடிவு உன் கையில் தான்..." என்றார். "சுவாமி... நான் உயிர் வாழத்தான் விரும்புகிறேன்” என்றான் மன்னன். "அப்படியானால், நீ வென்ற நாடுகளையும், அவற்றின் சொத்துக்களையும், அந்நாட்டு மக்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். உனது கருவூலத்தில் குவித்து வைத்திருக்கும் அனைத்து செல்வங்களையும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்க வேண்டும். உடனே இதைச் செய்தால், கடவுள் உனக்கு உயிர் பிச்சை அளிப்பார்.." என்றார் குரு.
"அப்படியே செய்கிறேன்..." என்று கூறிய மன்னன், குரு கூறியவாறே செய்திட அமைச்சர்களுக்குக் கட்டளை இட்டான். உடனடியாக, அவனது கட்டளைகள் நிறைவேற்றப்பட்டன, அண்டை நாடுகள் விடுவிக்கப்பட்டு, மக்களுக்குப் பொன்னும், பொருளும் வாரி வழங்கப்பட்டன. மகிழ்ச்சிக் கடலில் திளைத்த மக்கள், அந்த மகா குருவுக்கு நன்றி கூறினர். இரண்டு நாட்கள் சென்றன. மரண கண்டம் கடந்த மகிழ்ச்சியில், நிம்மதி பெருமூச்சு விட்டான் மன்னன். "சுவாமி... மரணத்தின் பிடியிலிருந்து தாங்கள் என்னைக் காப்பாற்றி விட்டீர்கள், என் பேராசை ஒழிந்து விட்டது, இனி, என்னையும் தங்கள் சீடர்களில் ஒருவனாக ஏற்று கொள்ள வேண்டும்.." என்றான் மன்னன். "வேண்டாம் மன்னா. உன்னைப் பிடித்திருந்த பேராசைப் பேய் ஒழிந்து விட்டது. இனி, நாட்டு மக்களுக்கு நல்லது செய்து நற்பெயர் எடுப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார் குரு.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், "கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்" என்கிறார் புனித பவுலடியார். இன்றைய உலகில் பெரும்பாலானோர் அதிகார போதைக்கும், அகங்கார போதைக்கும், பணத்திற்கும், செல்வத்திற்கும் அடிமையாகியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள தீமைகள் பற்றி அறியாமலும், இதில் ஏழை எளியவர்கள் சிக்கிக்கொண்டு எப்படியெல்லாம் துருறுகின்றனர் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாலும், தன்னுணர்வு அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நற்செய்தில் இயேசு கூறும் உவமையில் செல்வந்தரின் நிலை இப்படித்தான் இருக்கிறது. தனக்குக் கீழ் ஏழை இலாசர் உணவின்றி அவதிப்படுவதைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் தன்னுணர்வு அற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. தன்னுணர்வு அற்ற நிலையில் இருப்பதே ஒரு பாவம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலை யூதச் சமுதாயத்தில் நிலவியதை இயேசு பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் அனைவரும் அறிந்துகொள்ளும்படியாக இதனை உவமை வழியாக வெளிக்கொண்டு வருகிறார். மேலும், யூதச் சமுதாயத்தில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட ஏழையரைப் பேறுபெற்றோராகக் காட்டும் இயேசு, இதற்குக் காரணமானவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறார். இப்போது அப்பகுதியை தியான சிந்தனையோடு வாசிக்கக் கேட்போம்.
“ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் ,அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள். (6:20,21; 24-26).
இறைவாக்கினார்கள் காலத்திலும் யூதச் சமுதாயத்தில் இந்தப் பொருளாதார சீர்கேடுகள் நிலவின. அதனால்தான் எசாயா, எரேமியா போன்ற பெரிய இறைவாக்கினர்களும் ஆமோஸ் யோவேல் போன்ற சிறிய இறைவாக்கினர்களும் இதனைக் கண்டிக்கின்றனர். இன்றையச் சூழலில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி, ஒருபுறம் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டே போகிறார்கள். மறுபுறம் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆகிக்கொண்டே போகிறார்கள்.
2022ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம் 3 எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது. இதில் இந்தியப் பெரும் பணக்காரர்கள் குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார். ஹூருன் நிறுவன அறிக்கையின் படி, ஒவ்வொரு வாரமும் கெளதம் அதானி 6000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 313வது இடத்தில் இருந்த அவர், கிடுகிடுவென உயர்ந்து 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக அளவில் சிறந்த 100 பணக்காரர்கள் பட்டியலில் பல இந்தியத் தொழிலதிபர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவிலிருந்து 215 பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேவேளையில், பொருளாதார ரீதியாகவும், வாழ்வுரிமை ரீதியாகவும் இந்தியா கடும் ஏற்றத்தாழ்வை கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள 10 விழுக்காடு பிரிவினரிடம் 80 விழுக்காடு சொத்துகள் முடங்கிக்கிடக்கின்றன. இந்த வேறுபாடே தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் வீழ்த்தச் செய்கிறது. 2012-ம் ஆண்டில் உருவாக்கபட்ட இரங்கராஜன் குழுவின் அறிக்கையின்படி 2011-12-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 29.5 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். இந்திய மக்களில் ஐந்து பேர்களில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார். 130 கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தனி நபர் வருமானம் ஒரு வேளை உணவுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தன் மக்களை வைத்துக்கொண்டுதான், பொருளாதார ரீதியாக உலகில் 6-வது பெரிய நாடு என இந்தியா பெருமிதம் கொள்கிறது. இதனால்தான், ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிப் பிழைக்கும் பணக்காரர்களுக்கு எதிரானக் கண்டனக் குரல்கள் உலகெங்கினும் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும் என்கிறார் யாக்கோபு (யாக் 1:27). ஆகவே, சுயநலத்தால் ஏழையரை வருத்தி செல்வம் சேர்க்கும் பேராசையை விட்டொழிப்போம். நம்மைச் சுற்றி எண்ணிக்கையிலடங்கா ஏழை இலாசர்கள், ஒருவேளை உணவிற்கே வழியின்றி வாழும் அவலநிலைக் குறித்துச் சிந்திப்போம். அப்படிப்பட்டவர்களைக் கண்டுணர்ந்து நம் உணவையும் செல்வத்தையும் அவர்களோடுப் பகிர்ந்துகொள்வோம். இதற்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்