தேடுதல்

கடலூர் மாவட்டம்-கோணான்குப்பம் பெரியநாயகி மாதா கடலூர் மாவட்டம்-கோணான்குப்பம் பெரியநாயகி மாதா  

தமிழகத்தின் புனித மேரி மேஜர் திருத்தலத்தில் அமைதிக்காக செபம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு இணைந்து உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் முடிவுற்று அமைதி நிலவ இறைவேண்டல் செய்வோம் - கர்தினால் பூலா.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தமிழ் நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள கோணான்குப்பம் அன்னை மரியா திருத்தலத்தில் அண்மையில் திருவழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றிய ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோனி பூலா (Anthony Poola) அவர்கள் உலகின் அமைதிக்காக இறைவனை மன்றாடியுள்ளார்.

கோணான்குப்பம் பெரியநாயகி மாதா திருத்தலத்தில் மணிக்கூண்டு அர்ச்சிக்கப்பட்டு, அதற்குக்கீழ் அமைதியின் அரசியாம் அன்னை மரியாவின் திருவுருவம் வைக்கப்பட்டதன் 200ஆம் ஆண்டு நிறைவு  முன்னிட்டு, கர்தினால் பூலா அவர்கள், புதுச்சேரி-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும், ஏனைய அருள்பணியாளர்களோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.

அன்னை மரியா, தம்மிடம் வேண்டுபவர்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காமல் இருக்கமாட்டார் என்றும், இரண்டாவது ஏவாளாகிய அன்னை மரியா, இறைவனின் திருவுளத்திற்கு ஆகட்டும் என்று கூறியதன் வழியாக, முதல் ஏவாளால் கறைபட்டிருந்த மனித சமுதாயத்திற்கு ஆசிரைக் கொண்டுவந்தார் என்றும், கர்தினால் பூலா அவர்கள் கூறியுள்ளார்.

இத்தகையதொரு நம்பிக்கையோடு இத்திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள நாம், உலகிற்கு, நம் குடும்பங்களுக்கு, மற்றும் நம் கிராமங்களுக்கு அமைதி கிடைக்கவும், குறிப்பாக உக்ரைனில் இடம்பெறும் போர் முடிவுக்குவரவும் அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் என்று கர்தினால் பூலா அவர்கள் தன் மறையுரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் இத்தாலிய இயேசு சபை மறைப்பணியாளர் அருள்பணி கொஸ்தான்சோ ஜூசப்பே பெஸ்கி (1680-1747) என்பவர், கோணான்குப்பம் திருத்தலத்தில் உள்ள அன்னை மரியா திருவுருவத்தை பெரியநாயகி மாதா என அழைத்தார். இதற்கு மேரி மேஜர் என்று அர்த்தமாகும்.

இத்திருத்தலம் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசியுள்ள அதன் அதிபர் அருள்பணி Z. M. தேவசகாய ராஜ் அவர்கள், இங்கு நிறைய அற்புதங்கள் மட்டும் நடக்கவில்லை, அதோடு, இவ்விடம் பல்சமய நட்புறவை வெளிப்படுத்தும் தனித்துவமிக்க இடமாகவும் விளங்குகிறது என்றும், ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்குமுன், அன்னை மரியா தன் கனவில் தோன்றியதன் பயனாக, அருள்பணி பெஸ்கி மற்றும், இந்துமத நண்பர்களால் இது கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2022, 13:53