தேடுதல்

தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக்கழகம்  தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக்கழகம்  

தமிழ் நாடு கத்தோலிக்க கல்வி கழகத்தின் பரிந்துரைகள்

1715ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்ட புனித ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் அரசுப் பள்ளியாகும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழ் நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கை (SEP-TN), அரசு மற்றும், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும், மற்றும், அந்நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று, TNCEA எனப்படும் தமிழ் நாடு கத்தோலிக்க கல்வி கழகம் அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.

தமிழ் நாடு கத்தோலிக்க கல்வி கழகம் தயாரித்த இப்பரிந்துரைகளை, இக்கழகத்தின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் தலைமையிலான குழு ஒன்று, இக்கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டெல்லி உயர் நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.முருகேசன் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், இக்கல்விக் கொள்கை, சுய நிதி கல்வி நிறுவனங்களால், கல்வி வர்த்தகமயமாக்கப்படுதல் ஊக்கப்படுத்தப்படக்கூடாது என்று, அக்கத்தோலிக்க கல்வி கழகம், தனது பரிந்துரைகளில் முன்வைத்துள்ளது என, அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்கள் கூறியுள்ளார்.     

1715ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்ட புனித ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி, இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் அரசுப் பள்ளியாகும் எனவும், 1826ஆம் ஆண்டில் பிரித்தானிய நிர்வாகி சர் Thomas Munro அவர்கள், அரசு கல்விக் குழுவை  உருவாக்கினார் எனவும், 1851ஆம் ஆண்டில் அரசு கல்வித்துறை (DPI) ஆரம்பிக்கப்பட்டது  எனவும், 1855ஆம் ஆண்டில் அரசின் உதவி பெறும் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது எனவும், TNCEA தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது தமிழ் நாட்டில் 37,200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளும், 8,400 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன என்றும், கத்தோலிக்கத் திருஅவையும், தென்னிந்திய திருச்சபையும் ஏறத்தாழ ஐந்தாயிரம் அரசு உதவிபெறும் பள்ளிகளை நடத்துகின்றன என்றும், கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள், முற்றிலும் வர்த்தக நோக்கமற்ற பள்ளிகளை சமயச் சார்பின்றி அனைவருக்கும் அவற்றை நடத்துகின்றனர் என்றும், TNCEA கழகம் கூறியுள்ளது.

1980ஆம் ஆண்டில், அரசு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அனுமதியளித்ததற்குப்பின், அப்பள்ளிகள் பெருகி பாகுபாடற்ற கல்விக் கருத்தியலுக்கு மட்டுமன்றி, தாய்மொழி வழிக் கல்விக்கும் சேதம் விளைவித்துள்ளன என்று கத்தோலிக்க கல்விக் கழகம் குறிப்பிட்டுள்ளதோடு, இப்பள்ளிகள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைவதற்கு காரணமாகியுள்ளன என்று, TNCEA கவலை தெரிவித்துள்ளது.

1837ஆம் ஆண்டில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி, 1844ஆம் ஆண்டில் திருச்சி புனித வளனார் கல்லூரி, 1878ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரி, 1881ஆம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகியவைத் தொடங்கப்பட்டு, கிறிஸ்தவ சமுதாயம் உயர் கல்விக்கு உயிரூட்டம் அளித்தது, மற்றும், இவை தொடக்கத்தில் அரசின் நிதி உதவியால் நடத்தப்பட்டன எனவும் TNCEA கழகம் கூறியுள்ளது

அரசு, தனது நலவாழ்வுத் திட்டங்களில், அதன் உதவிபெறும் பள்ளிகளில், 12வது வகுப்புவரை, மதியம் மற்றும் காலை உணவு வழங்கும் சத்துணவு திட்டத்தை இணைக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ள TNCEA கழகம், நீட் தேர்வு இரத்துசெய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளது. (The Hindu)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2022, 14:41