தேடுதல்

போதிக்கும் இயேசு போதிக்கும் இயேசு 

பொதுக் காலம் 30ம் ஞாயிறு : ஆன்மிகத் திமிர் அகற்றுவோம்!

இறைவன் நம்மை அழைக்கும்போது எவ்வித சாக்குபோக்கும் சொல்லாமல் அவ்வழைப்பை உடனே ஏற்றுக்கொண்டு, உவகையுடன் பணியாற்றி, உன்னத இறைவனின் உண்மைச் சீடர்களாவோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. சீஞா 35: 12-14, 16-18   II. 2 திமோ 4: 6-8, 16-18  III. லூக் 18: 9-14)

ஞாயிறு மறையுரைச்சிந்தனை - 23.10.2022

இன்று பொதுக்காலத்தின் 30-ஆம் ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆன்மிக வாழ்வில் ஆணவத்தையும் அகந்தையையும் அகற்றி தாழ்ச்சியுடனும் பணிவுடனும் வாழ்வதற்கு நம்மை அழைக்கின்றன. ஒருமுறை சிங்கத்திற்கு ஆணவமும் அகந்தையும் தலைக்கேறிவிட்டது. அப்போது  சிங்கம், “இந்த காட்டுல நான் யாருடா...” எனக் கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் பார்த்துக் ஆணவமுடன் கேட்டது. அதற்கு அந்த விலங்குகள் எல்லாம், “இதுல என்ன சந்தேகம்? நீங்கதான் எப்போதும் இந்தக் காட்டுக்கு இராஜ” என்று கூறிவிட்டு தலைதெறிக்க ஓடின. இந்தக் காட்சியைக் கண்ட சிங்கத்திற்கு இன்னும் அதிகமாக ஆணவமும் அகந்தையும் தலைக்கேறியது. அப்போது, யானை ஒன்று மரத்திலுள்ள இலைகளைப் பிடுங்கி தின்றுகொண்டிருந்தது. அங்குச் சென்ற சிங்கம், “டேய் தடிப்பயலே, இந்தக் காட்டுல நான் யாருடா” என்று கேட்டது. ஆனால், யானை அதற்குப் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தது. இதனால் கோபமடைந்த சிங்கம், “டேய் தின்னி பயலே, எவ்வளவு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டியா? இந்தக் காட்டுல நான் யாருடா என்று கேட்டு திட்டித்தீர்க்கத் தொடங்கியது. ‘பொறுத்ததுபோதும் பொங்கியெழு’ என்ற கதையாக, கோபம் கொண்ட யானை சிங்கத்தை அப்படியே அலேக்காகத் தூக்கி பக்கத்திலிருந்த பாறையில் ஓங்கி அடித்தது. அவ்வளவுதான் சிங்கத்தின் முதுகெலும்பு முறிந்தது. அப்போது, சிங்கம் யானையைப் பார்த்து, “அண்ணேன் இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன். இதுக்குபோயி இவ்வளவு கோபப்பட்டு என் முதுகெலும்பை முறிச்சுபுட்டீங்க... வாய் வார்த்தையால சொல்லியிருந்தா அப்படியே கேட்டுக்கிட்டுப் போயிருப்பேன்ல” என்று பணிவோடு கூறியது. அப்போது யானை சிங்கத்தைப் பார்த்து, “இந்தக் காட்டுல நான் யாரு, நான் யாருன்னு கேட்டுகிட்டே இருந்தியே, அதுக்கு இதுதான் பதில்” என்றதாம்.  

ஆணவம் மக்களிடம் காணப்படும் கீழான குணங்களுள் ஒன்று.  இதனை, அகங்காரம், அகந்தை என்றும் கூறலாம். ஆணவத்தைச் சைவசித்தாந்த நூல்கள் ‘ஆணவ மலம்’ (மலம் – குற்றம்) என்றும் குறிப்பிடுகின்றன. ஒரு மனிதர் ஆணவம் அகற்றி பணிவுடனும் தாழ்ச்சியுடனும் வாழும்போது அவர் தெய்வ நிலைக்கு உயரமுடியும். ஆணவத்துடன் அலைபவரை உலகம் வெறுத்தொதுக்கும். ஆணவமுடையோர் பிறரை மதித்துப் போற்ற மாட்டார்கள். அவர்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றும், பிறர் தமக்கு எவ்வித அறிவுரையையும் கூறக் கூடாது என்றும் விரும்புவர். தாம் கூறியதுதான் சரி என்று வாதிடுவதுடன் பிறர் கூறுவதை எள்ளளவும் ஏற்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் பிறரைப் பற்றிக் கவலைப்படாது தங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பர். பிறரை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். இவ்வாறு ஆணவத்தோடு நடந்து கொள்ளும் செயலை, ‘’தலைகொழுத்து ஆடுதல்’ என்ற வழக்கத்தில் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர். குறிப்பாக, ஆணவம் நம்மை இறைவனிடமிருந்து பிரித்துவிடும். ஆணவம் கொண்டால் இறைவன் நம்மைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இவ்வாணவத்தை, ‘‘Ego’’ என்பர். அதாவது, ‘‘Edging God Out’’ என்பதன் சுருக்கமாகக் Ego என்பதைக் கொள்ளலாம். கடவுள் நம்மை விட்டு வெளியேறும் இறுதி நிலையே ஆணவம் ஆகும். மேற்கண்ட சிங்கத்தின் கதை எடுத்துரைப்பதுபோல, ஆணவம் அழிவையே தரும். ஒருவர் ஆணவம் கொள்ளும்போது அது அவருடைய  அறிவை  செயல்படாத வண்ணம் செய்துவிடும். அறிவு செயல்படாதபோது ஆணவம் கொண்டோர் தவறான முடிவுகளை எடுத்துத் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொள்வர். இதனை, ‘‘ஆணவம் அழிவைக் கொடுக்கும்’’ என்ற பழமொழியால் நம் தமிழ் பெரியோர் அழைத்தனர். ஒருவர் கொள்ளும் ஆணவம் முதலில் அவருடைய சிந்தனைகளில் பிரிவை ஏற்படுத்துகிறது, பின்னர் அவருடைய குடும்பத்திலும், உறவுகளிலும், நண்பர்களிடத்திலும் பிரிவினையை விதைக்கிறது. இது படிப்படியாக வளர்ந்து சமுதாயத்தில் மிகப்பெரிய பிளவுகளையும், வேற்றுமைகளையும் உண்டாக்குகிறது. சமுதாயத்தில் நாம் காணும் சாதி, மத, மொழி, இன, நிற வேறுபாடுகள் அனைத்திற்கும் இத்தகைய ஆணவமே அடிப்படை காரணம் என்பதை இக்கணம் அறிந்துகொள்வோம்.  

இத்தகையச் சிந்தனைகளின் அடிப்படையில் இப்போது நற்செய்தி வாசகத்தைக் கேட்போம். தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.’ ஆனால், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இயேசு, “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

இன்றைய நற்செய்தியானது, ‘தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்'  என்றுதான் தொடங்குகிறது. பரிசேயருடைய இறைவேண்டலில் ஆன்மிகத் திமிரும், அகந்தையும், சமூகத்தை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என இரண்டாகப் பிரித்து சீரழிக்கும் கேடுகெட்ட எண்ணங்களும் நிறைந்திருக்கின்றன என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். நம் கிராமங்களில், ‘யோக்கியரு வர்றாரு, சொம்ப எடுத்து உள்ள வையுங்கடி’ என்று பெண்கள் கூறுவதாகப் பழமொழி ஒன்று சொல்வார்கள். அப்படியென்றால் அங்கே  வரும் நபர் திருடர் என்று பொருள். இங்கே, பரிசேயரின் மனநிலையும் அப்படிதான் வெளிப்படுகிறது. மேலும் அவருடைய இறைவேண்டலில் அவரின் போலியான ஆன்மிகச் செயல்கள் அப்பட்டமாய் வெளிப்படுவதைக் காண முடிகிறது. அவருடைய வார்த்தைகளில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அதாவது, கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன் என்கிறார். அதாவது, வரிதண்டுபவரை இழிவானவராக, தனக்குக் கீழானவராகக் கருதும் அவரது தரம்தாழ்ந்த செயல் இங்கே வெளிப்படுகிறது. காணாமல்போன மகனின் உவமையில் வரும் மூத்த மகனை ஒத்த செயல்கள்தாம் இவருடையவை என்பதையும் நம்மால் கண்டுணர முடிகிறது.  

பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன என்றும், “ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.” “ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.” (லூக் 11: 38, 43,44) என்று இயேசு பரிசேயரை அவர்களின் தவாறானச் செயல்களுக்காக மிகக் கடுமையாகக் கண்டிப்பதையும் லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கின்றார்.

2019-ஆம் ஆண்டு ஜெப அப்போஸ்தலத்துவப் பணியின் 175-ஆம் ஆண்டைக் கொண்டாட நான் உரோமை நகருக்கு வந்திருந்தேன். விழா முடிந்து இந்தியாவிற்குத் திரும்புவதற்கு முந்தின நாள் புனித பேதுரு பெருக்கோவிலைப் பார்ப்பதற்காக அதன் வளாகத்தில் மக்களோடுக் காத்திருந்தேன். அப்போது மாலை 2.00 மணி இருக்கும். அதிகமான வெயில். அந்நேரத்தில் என்னோடு ஒரு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த வெள்ளையர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, ஒரு குழுவாக நின்றிருந்தனர். அவர்களும் உள்ளே செல்வதற்குக் காத்திருந்தனர். அங்கே ஒரு சிறிய இடைவெளி இருந்தது. அதன் வழியாக நான் முன்னே செல்ல முயன்றேன். அப்போது அக்குழுவிலிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்னைப் போகக்கூடாது என்று தடுத்தார். அதற்கு மறுப்பேதும் சொல்லமால் நான் பின்னால் வந்துவிட்டேன். அப்போது அந்தப் பெண் தன் குழுவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் என்னைக் காட்டி தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில், see colour.. see colour... என்று கூறினார். அதைக்கேட்ட நான் மிகவும் உடைந்து போனேன். எனது நிறம் கறுப்பு என்பதற்காக அல்ல. மாறாக இன்னும் நம்மிடம் மறையாமல் கனன்றுகொண்டிருக்கும் நிறவெறிக் கொள்கையை நினைத்துதான் அதிகம் வருந்தினேன். மேலும், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த நிலை என்றால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறவெறிக் கொள்கை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இத்தகைய கண்ணோட்டத்துடன் சிந்திப்பது, பார்ப்பது, வேறுபடுத்துவது, பிரிவினைகளை விதைப்பது, மனித மனித மாண்பைச் சிதைப்பது ஆகிய எல்லாமே பரிசேயத்தனத்தின் வெளிப்பாடுகளே என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

நாம் தற்போது காணும் அமெரிக்காவை இரவுபகலாகப் பாடுபட்டு உழைத்து உருவாக்கியவர்கள் கருப்பர் இன மக்கள்தாம். ஆனால் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் காலம் தொட்டே இன்றுவரை அதற்கான பயன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் சோகமான பாடம். நமது இந்தியாவைப் பொறுத்தளவில் ஆரியமும் திராவிடமும் இன்றுவரை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. கைபர்போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியம்தான் திராவிடத்தை உடைத்து, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதியக் கட்டமைப்புகளை உருவாக்கி, பகைமையை விதைத்து, வேறுபாடுகளை உண்டாக்கி,  எல்லோரும் சமம், எல்லாரும் இறைவனின் பிள்ளைகள் என்று ஒன்றிணைந்து வாழ்ந்த கட்டமைப்பை உடைத்தெறிந்திருக்கிறது என்று இன்றுவரை திராவிடம் கர்ஜித்து வருகிறது. ஆக, ஆரியம் விதைத்துள்ள இந்த வேறுபாடுகளும் மாறுபாடுகளும் பரிசேயத்தனத்தின் அடையாளங்களே!. இன்றைய நம் துறவு வாழ்விலும் இந்தப் போக்கு அதிகம் வெளிப்படுகிறது. சாதியின் பெயரால் தலைமைப் பொறுப்புகளை வழங்குவதும், அதனைப் பெறுவதற்காகத் தவறான வழிகளில் இறங்குவதும், தேவ அழைத்தல்களை உருவாக்குவதும், நம் பணிகளின் அடிப்படையில் நம்மை நாமே தரம்தாழ்ந்த நிலையில் வேறுபடுத்திப் பார்ப்பதும் பரிசேயத்தனத்தின் அடையாளங்களே! சமய நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம் உழைத்துக் களைத்தவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, பணம் செல்வாக்கால் திடீரென்று முளைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முதன்மைப்படுத்துவதும் பரிசேயத்தனத்தின் மனப்போக்குகளே!

ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்;.அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும் என்கிறது இன்றைய முதல் வாசகம். ஆகவே, தாழ்ச்சியும் பணிவும் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கூறிய வரிதண்டுபவரின் மனநிலையை நாமும் கொண்டிருப்போம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2022, 10:49