தேடுதல்

உக்ரைன் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas உக்ரைன் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas 

அமைதியை வேண்டுவதில் தளர்வடையாத உக்ரைன் மக்கள்

இரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டு ஏறக்குறைய ஏழரை மாதங்கள் நிறைவுற்ற நிலையில் போர்ச்சூழலுக்கு பழக்கப்பட்ட நிலையிலும், அமைதியான சூழலை வேண்டுவதில் உக்ரைன் மக்கள் தளர்வடையாமல் இருக்கின்றார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இரஷ்யா-உக்ரைன் போர், ஏராளமான உயிரிழப்பு, உடைமைகள் சேதம் போன்றவற்றை ஏற்படுத்தி அதிக வேதனை தருகின்றது எனவும்,  போர்ச்சூழலுக்கு பழக்கப்பட்ட நிலையிலும், அமைதியான  சூழலை வேண்டுவதில் உக்ரைன் மக்கள் தளர்வடையாமல் இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார் பேராயர் Visvaldas Kulbokas  அவர்கள்.

இரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டு ஏறக்குறைய ஏழரை மாதங்கள் நிறைவுற்ற நிலையில் உக்ரைன் நிலவரம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார், உக்ரைன் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், கடவுள் மற்றும், அன்னைமரியாவின் ஒரே ஆயுதமான செபத்தின் வழியாக அமைதியை வேண்டுவதாகவும், கீவ் மட்டுமல்லாது உக்ரைனின் பல இடங்களில், தொலைபேசி தொடர்புகள், அன்றாட செயல்பாடுகள், அலுவலகப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை கொடுக்கப்படும் காலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களின் கீழ்த்தளங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றனர் எனவும் பேராயர் Kulbokas  தெரிவித்தார்.

மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், காரித்தாஸ் அமைப்புக்கள் போன்றவைகள் இணைந்து மக்களை பாதுகாப்பான,  அமைதியான இடத்திற்கு மாற்ற உதவி செய்வதுடன், கீவ்விலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எந்தவிதமான வசதிகளும் இல்லாத, மக்கள் வாழும் இடங்களுக்கு, தேவையான அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார் திருப்பீடத்தூதர்,  பேராயர் Kulbokas.

குடும்ப உறவுகளின் உயிரிழப்புக்கள், புலம்பெயர்வினால் உறவினர்களை பிரிந்த சூழல் போன்றவற்றால் துன்புறும் மக்களின் ஒரே தேவை அமைதி என்பதாக மட்டுமே உள்ளது எனவும், போருக்குக் காரணமானவர்களின் இதயங்கள் செபத்தினால் மாற்றமடைய,  திருத்தந்தை வலியுறுத்தும் உண்மையான ,  சரியான அமைதியை உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற, சிறப்பாக செபிப்பதாகவும் பேராயர் Kulbokas கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2022, 13:20