தேடுதல்

உதவிவேண்டி  இறைவேண்டல் செய்யும் உக்ரேனிய பெண் உதவிவேண்டி இறைவேண்டல் செய்யும் உக்ரேனிய பெண்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 35-1- பகைமை வெறுத்து நன்மை புரிவோம்

நம்மை துன்புறுத்துவோரை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் விடுத்து, அவர்களை இறைவனின் கரங்களில் ஒப்படைக்கும் நல்மனம் பெறுவோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பாடல் - 35, பகுதி 1

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'தீயோரைத் தீவினையே சாகடிக்கும்!' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 21, 22 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வார நமது விவிலியத் தேடலில் 35-வது திருப்பாடல் குறித்துத் தியானிப்போம். ‘உதவிக்காக மன்றாடல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 28 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. தனது எதிரிகளைத் தானே பழிவாங்க விரும்பாத தாவீது அரசர் அச்செயலைக் கடவுளிடம் விட்டுவிடுகிறார் என்பதை நாம் அறிய வருகிறோம். மேலும், தாவீதின் கபடமற்ற மனநிலை இத்திருப்பாடலில் வெளிப்படுகிறது. சவுல் தனக்குப் பெரும் தொல்லைக் கொடுத்து தனது உயிரைப் பறிக்கத் தேடியதற்காகவோ அல்லது தனது மகன் அப்சலோம் தான் பதவியில் அமரவேண்டும் என்பதற்காக அவருக்கு கொடுத்த நெருக்கடிகள் காரணமாகவோ தாவீது அரசர் இந்தத் திருப்பாடலை எழுதியிருக்கவேண்டும் என்றே விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். இப்போது, இந்திருப்படாலின் முதல் நான்கு இறைவசனங்கள் குறித்து நாம் தியானிப்போம். முதலில் இறைபிரசன்னதில் அந்த வார்த்தைகளை வாசித்து உள்ளத்தில் உள்வாங்கிக் கொள்வோம்.

ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும். என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; ‛நானே உன் மீட்பர்’ என்று என் உள்ளத்திற்குச் சொல்லும். என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்; மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும். (வசனம் 1-4)

மேற்கண்ட இறைவசனங்களில் தாவீதின் புலம்பல் நிறைந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர் எந்தளவுக்கு சவுல் அரசராலோ அல்லது தனது மகனாலோ கொடுந்துயரங்களை அனுபவித்திருப்பார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னைச் சுற்றிச் சூழுந்துள்ள இந்தத் துயரங்களிலிருந்து கடவுளைத் தவிர யாருமே தன்னைக் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த நிலையில் கடவுளை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றார் தாவீது. மேலும், ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன். ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்  (திபா 5:1-3) என்றும், கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது. ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின (திபா 69:1-3) என்றும், ஆண்டவரே! தீயோரின் கையினின்று என்னைக் காத்தருளும்; கொடுமை  செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள். செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்; தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர் (திபா 140:4-5) என்றும், தாவீது வேறு சில திருப்பாடல்களிலும் தனது வேதனை நிறைந்த மனநிலையை வெளிப்படுத்துவதைக் காண்கின்றோம்.

இன்றைய நிலையில், உலகெங்கினும் மனிதர்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறுவிதமான  துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, போர், தீவிரவாதம், பயங்கரவாதம், இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும் பஞ்சம், பட்டினி, வறுமை, வேலையின்மை போன்றவற்றால் உள்நாட்டிற்குள்ளும் வேறுபல நாடுகளுக்கும் மக்கள்  இடம்பெயர்ந்து செல்கின்றனர்.  இத்தகையத் துயர நிலைகளில் அவர்கள் தங்களைக் காக்குமாறு கடவுளை நோக்கி அபயக்குரல் எழுப்பி அழுவதுடன், இதற்குக்  காரணமானவர்களைக் கடிந்துகொள்வதையும் சபிப்பதையும் கூட நம்மால் காண முடிகிறது. இதற்கு உக்ரைனும் இலங்கையும் மிகப்பெரும் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

சீன எல்லையில் தீராதத் துயரம்: ஆடு மேய்க்கும் நாடோடிகளின் அவலம்! என்ற தலைப்பில் அண்மையில் இணையத்தில் ஒரு சிறிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். இந்திய – சீன எல்லையில், இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கைகலப்புக்குப் பிறகு அப்பகுதியில் வசிக்கும் ஆடு மேய்க்கும் நாடோடிகளின் நிலைபற்றி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயம், தொழில் என்று எதற்குமே வசதியில்லாத இமாலயத்தின் லடாக் பகுதியில் அவ்வளவு குளிருக்கும் இடையில் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வாழ்க்கை நடத்துகின்றனர் நாடோடிகள். மேய்ச்சல் நிலம் இருக்கும் இடத்தில்தான் கால்நடைகளை மேய்க்க முடியும் என்பதால் தாங்கள் இருக்கும் பகுதியில் புல் போன்ற பயிர் பச்சைகள் குறைந்துவிட்டால் பசுமையான வேற்றிடங்களைத் தேடி கால்நடைக் கூட்டங்களுடன் அவர்கள் செல்வார்கள். அவற்றின் பாலைக் கறந்து விற்பார்கள். பாலிலிருந்து கிடைக்கும் பொருளைத் தயாரித்துத் தருவார்கள். ஆடுகளின் உரோமங்களைக் கத்தரித்து கம்பளி ஆடை நெய்வதற்குக் கொடுப்பார்கள். இதில் பெரிய அளவு அவரகளுக்கு வருமானம் வராது. இருப்பினும், புதிய இடங்களுக்குச் சென்று புதிய தொழிலைச் செய்யும் மனம் இல்லாததாலும் காலம்காலமாக வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதாலும் அந்நாடோடி மக்கள் இங்கேயே வாழ்கின்றனர். இவர்களில்  பல பிரிவுகள் உண்டு. அவர்களில் ஒரு பிரிவினர் சாங்பா, டூம்சேலே, டேம்சோக், சுமுர், சாகா லா, கோயுல், லோமா என்ற கிராமங்களில் வாழ்கின்றனர். இங்கிருக்கும் பள்ளத்தாக்கு சுஷுல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மேய்ச்சல் நிலம் சுருங்கி வருவதால் பட்டினியாலோ அல்லது போரினாலோ இறந்துவிடுவோம் என்று அச்சத்தின் பிடியில் வாழ்கின்றனர். இவர்கள் இப்போது ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர்.

இந்நிலையில், ஆடு மேய்க்கக் கூடாது என்று இரு நாட்டு இராணுவமும் நெருக்கடிகள் கொடுப்பதால் அவர்களில் ஏராளமானோர் ஆடுகளை மந்தை மந்தையாக விற்றுவிட்டு கிடைத்த பணத்துடன் பிழைப்புத் தேடி வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்தில் இருக்கிறது. இங்குள்ள மலைச் சிகரங்கள் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும். வெளியாட்களால் இங்கே ஒரு வாரம்கூட தங்க முடியாது. இங்கே சாலைகள் என்பது பெயரளவுக்குத்தான். கடும் குளிர்காற்று வீசும் பகுதி இது. இங்கிருந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்று பலர் கூறும் நிலையில், இது எங்களுடைய மூதாதையர் வாழ்ந்த இடம். எவ்வளவு துன்பங்களும் வேதனைகளும் வந்தாலும் நாங்கள் இங்கிருந்து ஒருபோதும் போகமாட்டோம் என்று சொல்பவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று அக்கட்டுரை எடுத்துரைக்கிறது. இப்படிப்பட்ட துயரங்கள் மத்தியிலும் கடவுள்மீதும், தங்கள்மீதும் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையால் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்பவர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சவுலாலும் தனது மகன் அப்சலோமாலும் தனக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக ஒரு நாடோடி போன்று வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டபோதும், தாவீது அரசர் என்றுமுள்ள இறைவனை மீட்பராகக் கொண்டு அவரிடம் மட்டுமே அடைக்கலம் புகுவதைப் பார்க்கின்றோம். தன்மீது பேரன்பு கொண்டு தன்னை இஸ்ரேல் மக்களின் அரசராக அருள்பொழிவு செய்த இறைவன் தன்னை எப்படியும் காப்பாற்றுவார் என்று அவர்மீது ஆழமான நம்பிக்கை கொள்கின்றார் தாவீது. தன்னால் தனது எதிரிகள் அழித்தொழிக்கப்படவேண்டும் என்பதைக் காட்டிலும் இறைவனே அந்த எதிரிகளைக் கொன்றொழிக்க வேண்டும் என்று தனது இறைவனிடம் முறையிடுகிறார். அதனால்தான் தன் எதிரிகளோடு வழக்காடவும், அவர்கள்மீது போர் தொடுக்கவும், அவர்கள் மானக்கேடுற்று இழிவடையவும், புறமுதுகிட்டு ஓடவும் இறைவனை நோக்கிக் குரல் எழுப்பிக் கதறுகின்றார்.

ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் துன்ப துயரங்களுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று எண்ணாமல், அவர்களைக் கடவுளின் கரங்களில் விட்டுவிடும் நல்மனத்தை தாவீது அரசரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவோம். அதற்கான அருள்வரங்களை ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2022, 11:36