பஹ்ரைனில் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்கள் பஹ்ரைனில் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்கள்  

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், வளைகுடாப் பகுதி திருஅவை மீதுள்ள...

திருத்தந்தையின் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், சவுதி அரேபியாவுக்கு நல்லதோர் அடையாளத்தை வழங்கும் - ஆயர் பவுல் ஹின்டர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், வளைகுடாப் பகுதி முழுவதும் இருக்கின்ற திருஅவைமீது அவர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகின்றது என்று, வட அரேபியாவின் திருத்தூது நிர்வாகி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 03, இவ்வியாழன் முதல், 6 வருகிற ஞாயிறுவரை, தனது 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக பஹ்ரைனில் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்துள்ள ஆயர் ஹின்டர் அவர்கள், வளைகுடாப் பகுதி, திருஅவையால் மறக்கப்படவில்லை என்பதையே இத்திருத்தூதுப் பயணம் காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் வளைகுடாப் பகுதிக்குத் திருத்தந்தை வருகை தருவது, அப்பகுதி கத்தோலிக்கரை நம்பிக்கையில் உறுதிப்படுத்தவும், பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவுமே என்றும் ஆயர் ஹின்டர் அவர்கள் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணம்

பஹ்ரைனில் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்கள்
பஹ்ரைனில் திருத்தூதுப் பயணத் தயாரிப்புக்கள்

பஹ்ரைனில் வாழ்கின்ற ஏறத்தாழ எண்பதாயிரம் கத்தோலிக்கரில் பெரும்பாலானோர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனவும், வளைகுடாப் பகுதி முழுவதிலும் இருக்கின்ற திருஅவை, புலம்பெயர்ந்தோரின் திருஅவை எனவும் குறிப்பிட்ட ஆயர் ஹின்டர் அவர்கள், பஹ்ரைன் அரசு அதிகாரிகளுக்கும், திருஅவைகளுக்கும் இடையே பாரம்பரியமாகவே நல்லுறவுகள் இருந்து வருவது, திருத்தந்தை அந்நாட்டிற்கு வருகைதருவதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், சுன்னி பிரிவு முஸ்லிம்களோடு மட்டுமல்லாமல், ஷியைட் மற்றும், உலகிலுள்ள ஏனைய முஸ்லிம்களோடு பல்சமய உரையாடலை ஆழப்படுத்தவும், அந்நாட்டில் வாழ்கின்ற கத்தோலிக்கர் மற்றும், கிறிஸ்தவர்களை  ஊக்கப்படுத்தவுமான நோக்கத்தையும் இத்திருத்தூதுப் பயணம் கொண்டிருக்கிறது என்று ஆயர் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைன் திருத்தூதுப் பயணம், சவுதி அரேபியாவுக்கு நல்லதோர் அடையாளத்தை வழங்கும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ள ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள், வளைகுடாப் பகுதியில் தனது 18 ஆண்டுகாலப் பணியில் சவுதி அரேபியாவில் பெரிய அளவில் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக உரைத்துள்ளார்.    

பஹ்ரைனிலுள்ள கத்தோலிக்கரில் பெருமளவினர், இந்தியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், மற்றும், லெபனோன், சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2022, 13:27