மதங்கள் உலகை மனிதாபிமானமுள்ளதாக மாற்றும் - ஆயர் மர்த்தினெல்லி
மெரினா ராஜ் – வத்திக்கான்
பல்வேறு மதங்கள் இணைந்து, நாம் வாழும் உலகை இன்னும் அதிக மனிதபிமானமுள்ளதாக மாற்றுகின்றது எனவும், அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வலிமையான தூண்களாக சகிப்புத்தன்மை, விருந்தோம்பல் மற்றும் உடன்பிறந்த உறவு நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் பவுலோ மர்த்தினெல்லி.
தெற்கு அரேபியாவின் திருத்தூது தலைமை நிர்வாகியாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் பணியாற்றிவரும் ஆயர் Paolo Martinelli அவர்கள், தன்னுடைய புதிய பணி பற்றி எமிரேட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மையை தூணாகக்கொண்டு திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மதத்தவர்களும் ஒன்றிணைந்து, உடன்பிறந்த உறவு நிலையோடு வாழ்வது, மக்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், சிறந்த உலகத்தை உருவாக்கவும் உதவுகின்றது எனவும், உலகிலுள்ள அனைத்து மதங்களும் இவ்வாறு இணைந்து வாழும்போது, உலகை இன்னும் அதிக மனிதாபிமானமுள்ளதாக மாற்றமுடியும் எனவும் கூறியுள்ளார் ஆயர் மர்த்தினெல்லி.
2019 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது கையெழுத்திட்ட சகிப்புத்தன்மை மற்றும் மனித உடன்பிறந்த உறவு நிலை ஏடு பற்றிய தன் கருத்துகளையும் எடுத்துரைத்த ஆயர் மர்த்தினெல்லி, அவ்வேடு, பல்சமய உரையாடல், மனித உடன்பிறந்த உறவு நிலை, சகிப்புத்தன்மை போன்றவைகளைப் பற்றி நன்கு அறியவும், அவற்றை இன்னும் அதிகமாக மக்களிடம் பகிர்வதற்கு, தனக்குள்ள கடமையை உணர்த்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான உரையாடல்
செழுமை, கலாச்சாரம், மதம் போன்றவற்றைக் கொண்டு சிறப்புற்றுத் திகழும் ஐக்கிய அரபு நாடுகளில், மதங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது கோட்பாடாக மட்டுமல்லாமல், புதிய வழிகளைத் திறக்கவும், முன்னோக்கிச் செல்லவும் பயன்படுகின்றது எனவும்,எடுத்துரைத்துள்ளார், ஆயர் மர்த்தினெல்லி.
தெற்கு அரேபிய நாடுகளின் ஒன்பது தலத்திரு அவைகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஏறக்குறைய 10 இலட்சம் கத்தோலிக்கர்களுக்கு பணியாற்றுவதாகவும் கூறியுள்ள ஆயர், அங்குள்ள 70 அருள்பணியாளார்களில், 45 பேர் கப்புச்சின் சபையைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக சமுதாயத்தில் சகிப்புத்தன்மைக்கு முக்கிய இடம் உண்டு என்று கூறிய ஆயர் மர்த்தினெல்லி அவர்கள், உலக மக்கள் கலந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற காலக்கட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில், கலத்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்பது வாழ்க்கைமுறை விதியாகவும், சகிப்புத்தன்மை, விருந்தோம்பல் மற்றும் உடன்பிறந்த உறவு வாழ்வு நாட்டின் தூணாகவும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நிரம்பிய ஆலயங்கள்
தனது புதிய பணியைப் பற்றிக் கூறுகையில், இப்பகுதியில் உள்ள கத்தோலிக்கர்களை நன்கு தெரிந்துகொள்ள முதலில் கேட்டல், கவனித்தல், கற்றுக்கொள்ளலில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், குறுகிய மாதங்களில் இப்பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்கர்களின் துடிப்பான வாழ்வால் ஈர்க்கப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலோனோர், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற இடங்களில் இருந்து வந்த்தவர்கள் என்றும், வார நாட்களில் அதிகாலை வேளையில்கூட ஆலயங்களில் கூட்டமாக இருப்பதைப் பார்ப்பது அதிலும் அதிக இளையோரைப் பார்ப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது எனவும், கூறியுள்ளார் ஆயர் மர்த்தினெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்