வட ஆப்ரிக்காவின் மாலி நாட்டில் கடத்தப்பட்ட அருள்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வட ஆப்ரிக்காவிலுள்ள மாலி நாட்டின் தலைநகரான Bamakoவில் ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சார்ந்த அருள்தந்தை Hans-Joachim Lohre அவர்கள், ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகவும், உள்ளூர் இஸ்லாமியக் குழுக்கள் அவரை கடத்தியிருக்கலாம் என்றும் உரோமையிலுள்ள அச்சபையின் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
65 வயதுடைய அருள்தந்தை Hans-Joachim அவர்கள், நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று அந்நகரின் மற்றொரு பகுதிக்குச் சென்று திருப்பலி நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இது குறித்து மாலி காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும் அச்சபையின் செய்திக் குறிப்புத் தெரிவித்துள்ளது.
அருள்தந்தை Hans-Joachim-ன் கார் அவருடைய நிறுவனத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், விசாரணை செய்தவர்கள் அவரது காருக்கு அருகில் உடைந்த சிலுவையுடன் சங்கிலியைக் கண்டுபிடித்தனர் என்றும், அவரைக் கடத்திச் சென்றதற்கான கால்தடங்கள் தரையில் காணப்பட்டன என்று சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தக் கடத்தலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் அல் கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐஎஸ் குழுக்களுடனும் தொடர்புடைய இஸ்லாமிய குழுக்களின் மீது உடனடி சந்தேகம் எழுந்துள்ளது என்றும், இதற்குக் காரணம், இவர்கள் வெளிநாட்டினரையும், மதத்தினரையும் கடத்துவதையும், அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அருள்தந்தை ஹான்ஸ்-ஜோக்கிம் அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாலியில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் தற்போது பமாகோவிலுள்ள இஸ்லாமிய-கிறிஸ்தவப் பயிற்சி நிறுவனத்தில் கற்பித்து வருவதுடன், Hamdallaye-விலுள்ள நம்பிக்கை மற்றும் உரையாடல் மையத்தின் தலைவராகவும் உள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்