பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, CCBI துணைத் தலைவராக மீண்டும் தேர்வு
மேரி தெரேசா: வத்திக்கான்
CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்களும், துணைத் தலைவராக பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும், பொதுச் செயலராக, பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ அவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
CCBI பேரவை, நவம்பர் 11, இவ்வெள்ளி, 12 இச்சனி ஆகிய இரு நாள்களில், பெங்களூருவின் புனித யோவான் தேசிய நலவாழ்வு நிறுவனத்தில் நடத்திய, 33வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், இம்மூவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
69 வயது நிரம்பிய, கோவா மற்றும், டாமன் பேராயர் கர்தினால் ஃபெராவோ அவர்கள் தலைவராகவும், 69 வயது நிரம்பிய சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் துணைத் தலைவராகவும், 68 வயது நிரம்பிய டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
CCBI பேரவையின் விதிமுறைப்படி, இப்பொறுப்பாளர்களின் தலைமைப் பணிக்காலம் ஈராண்டுகள் ஆகும். அவர்கள் இப்பணிக்கு மீண்டும் இருமுறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படலாம்.
2019ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற CCBI பேரவையின் 31வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், கர்தினால் ஃபெராவோ அவர்கள் முதல் முறையாக அப்பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களும், பேராயர் அனில் கூட்டோ அவர்களும், 2017ஆம் ஆண்டு போபாலில் நடைபெற்ற 29வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் இப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டில் அதே பொறுப்புகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (CCBI)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்